

குடியரசு தேர்தலில் நல்வாய்ப்பை தமிழகம் தவற விட்டு விட்டதாக பாமக எம்பியான டாக்டர்.அன்புமணி ராமதாஸ் கருத்து கூறியுள்ளார். நீட் தேர்வை ரத்து செய்யும் மசோதா குறித்து அவர் இன்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கிடம் மனு அளித்தார்.
இது குறித்து அவர் டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘ஜல்லிகட்டு மீதான மசோதாவிற்கு ஆறு நாட்களில் அனுமதி கிடைத்தது. ஆனால், மருத்துவக் கல்வியின் நீட் நுழைவுத்தேர்வை ரத்து செய்யும் மசோதா ஆறு மாதங்களாக நிலுவையில் உள்ளது. இதனால், ஏற்படும் பாதிப்பை எடுத்துக்கூறி மத்திய உள்துறை அமைச்சரிடம் அதன் மசோதாவிற்கு அனுமதிக்க அளிக்கக் கோரினேன். இது தொடர்பான அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் என்னிடம் உறுதி அளித்துள்ளார். நீட் மூலமாக நடைபெறும் மிகப்பெரிய அநீதியை நேரில் எடுத்துரைக்க பிரதமர் மற்றும் குடியரசு தலைவரிடமும் நான் அனுமதி கேட்டிருக்கிறேன்.’ எனத் தெரிவித்தார்.
வாய்ப்பை தவற விட்ட தமிழகம்
குடியரசு தலைவர் தேர்தலில் தாம் வாக்களிக்காதது குறித்து அன்புமணி விளக்கம் அளித்தார். அதில் அவர் இந்த முடிவு ஒரு மாதம் முன்பாக எடுக்கப்பட்டதாக தெரிவித்தார். இதனால் பலன் எதுவும் இல்லை என்றாலும் அதற்கானப் பிரச்சனைகள் மீதான கவனத்தை ஈர்க்கச் செய்ய வேண்டி செய்ததாகவும் விளக்கம் அளித்தார். நீட் பிரச்சனையில் மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுக்கும் நல்வாய்ப்பை தமிழகம் தவறவிட்டு விட்டதாகவும் அன்புமணி கருத்து தெரிவித்தார்.
இது குறித்து அன்புமணி கூறுகையில், ‘குடியரசு தலைவர் தேர்தலில் தமிழகத்தில் எட்டு விழுக்காடு வாக்குகள் உள்ளன. இதை, நீட் தேர்வு ரத்து, காவிரி மீதான தீர்ப்பை அமலாக்க வேண்டும் என்பது உட்பட தமிழக பிரச்சனைகளை தீர்த்தால் தான் வாக்களிக்க முடியும் என அனைவரும் உறுதியாகக் கூறி இருக்க வேண்டும். இதை செய்திருந்தால் தமிழகத்தின் உரிமை பாதுகாக்கபட்டிருக்கும். ஆனால், தமிழகத்தின் கட்சிகள் அப்படி செய்யவில்லை. இனியாவது நாடாளுமன்ற அவைகளின் மையத்தில் அனைத்து கட்சி உறுப்பினர்களும் அமர்ந்து போராட வேண்டும். இதற்காக நான் மற்ற கட்சிகளுடன் பேசி வருகிறேன்.’ எனத் தெரிவித்தார்.
நீட்டிற்காக ஒருநாள் உண்ணாவிரதம்
நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி வரும் 21 ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஒருநாள் உண்ணாவிரதம் சென்னையில் நடத்த இருப்பதாகவும் அன்புமணி அறிவித்தார். தனது தலைமையில் சேப்பாக்கத்தில் நடைபெறும் இந்த உண்ணாவிரத்தில் மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட பலரும் அதிக அளவில் கலந்துகொள்ள இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இது காலை முதல் மாலை வரை நடைபெற உள்ளது.
சசிகலா சிறை விவகாரத்தில் கருத்து
சசிகலா சிறை விவகாரம் குறித்து எழுந்த கேள்விக்கு அன்புமணி பதிலளிக்கையில், ‘இதன் மீது நீதிமன்றம் முடிவு எடுக்க வேண்டும். இதுவரை வெளியான வீடீயோ பதிவுகளை வரவழைத்து அவை உண்மையா என சோதிக்கப்பட வேண்டும். உண்மையாக இருந்தால் சசிகலா மற்றும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவர் தமிழகத்தில் ஊழல் செய்த வழக்கில் சசிகலா தலையீடு இருந்ததால் தான் அது பெங்களூருக்கு மாற்றப்பட்டது. அங்கு பெறும் தண்டனையின் போதும் அவர் லஞ்சம் அளித்து தவறு செய்கிறார் எனில் அதை ஏற்க முடியாதது’ எனத் தெரிவித்தார்.