

ரூ.350 கோடிக்கு சொத்து சேர்த்ததாக கூறி ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்தவர் பூங்குன்றன். ஜெய லலிதா உயிருடன் இருந்தபோது பூங்குன்றனுக்கு அதிகமான செல்வாக்கு இருந்தது. கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அளிக்கும் புகார்கள் இவரைத் தாண்டியே ஜெயலலிதாவிடம் செல்லும். கட்சியினர் பூங்குன்றனை சந்தித்த பின்னர்தான் ஜெயலலிதாவை சந்திக்க முடியும் என்ற சூழலும் இருந்தது.
ஜெயலலிதா மறைந்த பின்னர் போயஸ் கார்டனில் இருந்து பூங்குன்றன் வெளியேற்றப்பட்டார். ஜெயலலிதா, சசிகலாவுக்கு சொந்தமானதாகக் கருதப்படும் பெரும்பாலான நிறுவனங்களுக்கு பூங்குன்றன் இயக்குநராக இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 5 நாட்களுக்கு முன்பு பூங்குன்றனை டெல்லிக்கு வரவழைத்த வருமான வரித் துறையின் ஒரு அங்கமான வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள், அவரிடம் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். பூங்குன்றனுக்கு சொந்தமாக ரூ.350 கோடி மதிப்புள்ள சொத்துகள் இருப்பதாகவும், இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
அந்த சொத்துகள் அனைத்தும் பூங்குன்றனுக்கு சொந்தமான வையா அல்லது ஜெயலலிதாவுக்கு சொந்தமானதா என்றும் பூங்குன்றன் பினாமியாக இருக்கிறாரா என்பது குறித்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. ஜெயலலிதாவின் சொத்து விவரங்கள் அனைத்தும் அறிந்தவர் பூங்குன்றன் என்பதால், அதன் விவரங்கள் குறித்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டிருக்கலாம் என்றும் வருமான வரித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள் ளன.