

சாலைப் பாதுகாப்பு ஏற்படுத்தும் வகையில் கோவையில் பொதுமக்கள் கூடும் இடங்களில் விழிப்புணர்வு குறும்படங்கள் திரையிடப்படுகின்றன.
கோவையில் போக்குவரத்துத்துறை, காவல்துறை சார்பில் காந்திபுரம் நகரப் பேருந்து நிலையத்தில் போக்குவரத்து விழிப்புணர்வு குறும்படங்கள் திரையிடப்பட்டன. பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் பிரம்மாண்ட டிஜிட்டல் திரையில் இந்த திரையிடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதுகுறித்து வட்டாரப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறும்போது, ‘மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் சாலை விபத்து உயிரிழப்புகள் அதிகம் ஏற்படுவதை சுட்டிக்காட்டி உச்ச நீதிமன்ற சாலைப் பாதுகாப்புக் குழு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதன்படி சாலைப் பாதுகாப்பு குழுவால் நிர்ணயிக்கப்பட்ட வேக அளவை விட அதிகவேகமாகச் செல்லுதல், சிக்னல்களை மதிக்காமல் வாகனங்களை இயக்குதல், வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக பாரம் ஏற்றிச் செல்லுதல், சரக்கு வாகனத்தில் பயணிகளை ஏற்றிச் செல்லுதல், குடிபோதையில் வாகனங்களை இயக்குவது, செல்போன் பேசிக்கொண்டு இயக்குவது உள்ளிட்ட விதிமீறல்களில் ஈடுபட்டால் 3 மாதத்துக்கு ஓட்டுநர் உரிமம் மீது தற்காலிகமாக தடை விதிக்கப்படும்.
இந்த நடவடிக்கையின் தொடர்ச்சியாக, விபத்துகளை குறைக்கும் நோக்கத்தில் அதிக விபத்து நடக்கும் இடங்களை கண்டறிந்து சரி செய்வது, விபத்தில் சிக்கியவர்களுக்கு முதல்வர் நிவாரண நிதியை முறையாக வழங்குவது, சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்துவது, போலீஸார், போக்குவரத்துத்துறை மூலம் விபத்து தடுப்புப் பணியை தீவிரப்படுத்துவது, சாலைப் பாதுகாப்பு தொடர்பான குறும்படங்களை மக்கள் கூடும் இடங்களில் திரையிடுவது போன்ற பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. முதல்கட்டமாக காந்திபுரம், உக்கடம் பேருந்து நிலையங்களிலும், அதன் தொடர்ச்சியாக மாவட்டத்தின் இதர இடங்களிலும் திரையிடல் தொடரும் என்றனர்.