

குடியரசுத் தலைவர் தேர்தலுக்காக தமிழக சட்டப்பேரவை வளாகத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தேர்தல் பார்வையாளரும் தலைமை தேர்தல் அதிகாரியுமான ராஜேஷ் லக்கானி ஆய்வு செய்தார்.
புதிய குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் வரும் 17-ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலுக்காக தமிழகத்தில் சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள குழுக்கள் கூட்ட அரங்கில் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தேர்தலுக்கான வாக்குப்பெட்டி நேற்று முன்தினம் வந்த நிலையில், அப்பெட்டியை தமிழக தலைமை தேர்தல் அதிகாரியும், குடியரசுத் தலைவர் தேர்தல் பார்வையாளருமான ராஜேஷ் லக்கானி நேற்று பார்வையிட்டார். மேலும், குடியரசுத் தலைவர் தேர்தலுக்காக செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்தார்.
சிறப்பு பார்வையாளர் தமிழகம் வருகை
அப்போது அவருடன் செய்தித்துறை இயக்குநர் ஜெ.குமரகுருபரன், காவல்துறை அதிகாரி சுதாகர் ஆகியோர் இருந்தனர். வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளைப் பார்வையிட டெல்லியில் இருந்து சிறப்பு பார்வையாளர் அன்சு பிரகாஷ் இன்று தமிழகம் வருகிறார். அவர் இன்று மாலை நடக்கும் தேர்தல் தொடர்பான கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.
குடியரசுத் தலைவர் தேர்தலை முன்னிட்டு, திங்களன்று சட்டப்பேரவை கூட்டம் இல்லை. இதன்படி, இன்று முதல் 3 நாட்களுக்கு சட்டப்பேரவைக்கு விடுமுறை விடப் பட்டுள்ளது.