சென்னை பட்டினப்பாக்கத்தில் ரூ.1,080 கோடியில் குடியிருப்புகள்: தனியார் நிறுவனம் மூலம் வீட்டுவசதி வாரியம் கட்டுகிறது

சென்னை பட்டினப்பாக்கத்தில் ரூ.1,080 கோடியில் குடியிருப்புகள்: தனியார் நிறுவனம் மூலம் வீட்டுவசதி வாரியம் கட்டுகிறது
Updated on
2 min read

சென்னை பட்டினப்பாக்கத்தில் ரூ. 1079.84 கோடியில் அரசு ஊழியர்களுக்கான குடியிருப்புகளைக் கட்ட தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் திட்டம் தீட்டி யுள்ளது.

சென்னையின் முக்கியப் பகுதியாக விளங்கும் பட்டினப்பாக்கத்தில் அரசு அதிகாரிகள், ஊழியர் குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புகள் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதால், அதனை இடித்துவிட்டு புதிய குடியிருப்புகளைக் கட்ட தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் முடிவு செய்தது. அதன்படி தற்போதைய குடியிருப்பின் கட்டிடங்களை இடிக்கும் பணிகள் தொடங்கி, பெரும்பாலான பணிகள் முடிந்துள்ளன. தொடர்ந்து இடிக்கும் பணிகள் நடக்கின்றன.

கட்டிடங்களை இடித்துவிட்டு புதிய குடியிருப்புகளைக் கட்ட வீட்டுவசதி வாரியம் டெண்டர் வெளியிட்டுள்ளது. அதன்படி மொத்தம் 25.16 ஏக்கர் பரப்பில் குடியிருப்புகள் கட்டப்படவுள்ளன.

குடியிருப்புகள் கட்டும் பணிகளை தனியார் நிறுவனம் மூலம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ரூ. 1079.84 கோடியில் திட்டத்தை செயல்படுத்த நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, திட்டத்தை செயல்படுத்துவதற்கு ஆகும் மொத்த செலவுகளையும் தனியார் நிறுவனமே செய்ய வேண்டும். வீட்டு வசதி வாரியம் மூலம் நிலம் மட்டுமே கொடுக்கப்படும்.

அதேவேளையில் தனியார் நிறுவனம் செய்யும் செலவுகளை ஈடுசெய்யும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அதன்படி மொத்த நிலத்தில் 40 சதவீத பங்கு தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்படும். அதில் அவர்கள் அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள் என அவர்கள் விருப்பத்துக்கு ஏற்ப கட்டிக் கொள்ளலாம். அதனை விற்கவோ, வாடகைக்கு விடவோ அந்த நிறுவனங்களுக்கு உரிமை வழங்கப்படும். இந்த 40 சதவீதம் இடம் போக மீதமுள்ள 60 சதவீத இடத்தில் அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கான குடியிருப்புகளை இலவசமாக கட்டித் தரவேண்டும். ஒரு நிறுவனம் மட்டுமே பணிகளை செய்ய முடியவில்லையென்றால், அதிகபட்சம் 3 நிறுவனங்கள் இணைந்து பணிகளை மேற்கொள்ளவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

குடியிருப்புப் பகுதியில் சாலை, குடிநீர் விநியோகம், மின்சாரம், தொலைதொடர்பு, வடிகால் உள்ளிட்ட வசதிகளையும் சம்பந்தப்பட்ட நிறுவனமே செய்துத் தர வேண்டும். தற்போது ஒப்பந்தப்புள்ளி கோரும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் முடிந்தவுடன் வடிவமைப்புப் பணிகள் மற்றும் கட்டுமானப் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: இந்த குடியிருப்புகள் அரசு அதிகாரிகளுக்காக தனியார் மூலம் கட்டப்படுகின்றன. வாரியம் எந்த வகையிலும் நிதி அளிக்காது. 40 சதவீத இடத்தை அவர்கள் விரும்பும் வகையில் மேம்படுத்தி, வருவாய் மற்றும் லாபத்தை ஈட்டிக் கொள்ளலாம். கட்டுமானப் பணி மட்டுமல்லாமல், வடிவமைப்புப் பணிகளையும் சம்பந்தப்பட்ட நிறுவனமே செய்ய வேண்டும். அதன் அடிப்படையில் குடியிருப்பு எவ்வாறு இருக்கும் என்பது இறுதி செய்யப்படும். எத்தனை வீடுகள் கட்டப்படும், எத்தனை அதிகாரிகளுக்கு இங்கு இடம் கிடைக்கும் என்பது போன்ற விவரங்கள், வடிவமைப்புப் பணிகள் முடிந்தால் மட்டுமே தெரியவரும்.

இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in