Published : 19 Jul 2017 12:17 PM
Last Updated : 19 Jul 2017 12:17 PM

மதுரையில் ரூ.50 கோடியில் தமிழர் பண்பாட்டுப் பாரம்பரிய அருங்காட்சியகம்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

சட்டப்பேரவையில் இன்று தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை சார்பாக 110 விதியின் கீழ் முதல்வர் பழனிசாமி சில அறிவிப்புகளை வாசித்தார். அதில் அவர் பேசியதாவது:

'' தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை சார்பாக கீழ்க்கண்ட அறிவிப்புகளை இம்மாமன்றத்தில் அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

1. மதுரை, உலகத் தமிழ்ச் சங்கத்தில் தமிழர்களின் உயரிய பண்பாட்டுப் பாரம்பரியத்தினைப் பறைசாற்றும் வகையில், தமிழர் பண்பாட்டுப் பாரம்பரிய அருங்காட்சியகம் 50 கோடி ரூபாய் மதிப்பில் நிறுவப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதற்கென இந்த ஆண்டு முதற்கட்டமாக 15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்.

2. சிந்தனைச் சிற்பி சிங்கார வேலர் (18.2.1860 - 11.2.1946) ஆங்கில ஏகாதிபத்தியத்துக்கு எதிராக தம் வழக்கறிஞர் தொழிலையே துறந்த

பெருந்தகை, தொழிலாளர்களுக்காகக் குரல் கொடுத்தவர், அவர்கள் நலனுக்காகப் பல போராட்டங்களில் பங்கேற்றவர், இந்திய பொதுவுடைமை இயக்கத்தின் தந்தை, இந்தியத் தொழிற்சங்க இயக்கத்தின் முன்னோடி, அறிவியல் தமிழறிஞர், பொதுச் சொத்துகள் மக்கள் நலனுக்காகப்

பயன்பட வேண்டும் என்கிற பொதுவுடைமைக் கருத்தை வலியுறுத்தியவர், "பொதுவுடைமை இயக்கத்தின் விதிகள் மனித நேயத்துக்கு இசைவானது" என்று வலியுறுத்தியவர்.

அவர்தம் வழியில் தமிழில் அறிவியல் கருத்துக்களை நூலாக எழுதுபவர்களிலும், சமுதாய முன்னேற்றத்திற்காகவும், சமத்துவ கொள்கைக்காகவும், தொழிலாளர் நலனுக்காகவும் போராடுபவர்களிலும் சிறந்த ஒருவருக்கு தமிழ் வளர்ச்சித் துறை சார்பாக ‘சிங்காரவேலர் விருது' ஆண்டுதோறும் சித்திரை தமிழ்ப் புத்தாண்டு விருதுகளோடு வழங்கப்படும்.

விருதுத் தொகையாக ஒரு லட்சம் ரூபாயும், ஒரு சவரன் தங்கப்பதக்கமும், தகுதியுரையும் வழங்கிப் பொன்னாடை அணிவித்து விருதாளர் சிறப்பிக்கப்படுவார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

3. ஜனநாயகத்தின் 4-வது தூணாக விளங்குபவர்கள் பத்திரிகையாளர்கள். காலம் நேரம் பாராமல் உழைக்கின்ற பத்திரிகையாளர்கள், தாங்கள் ஓய்வு பெற்ற பின், மன நிறைவோடும், மன அமைதியோடும் வாழ்ந்திட வேண்டும் என்பதில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மிகுந்த அக்கறை கொண்டிருந்தார்.

அதனால்தான் அவர் 2011-ல் ஆட்சிப்பொறுப்பேற்ற போது 5,000/- ரூபாயாக வழங்கப்பட்டு வந்த பத்திரிகையாளர்களின் மாதாந்திர ஓய்வூதியத்தை 8,000/- ரூபாயாகவும், அதே போல் அவர்களது குடும்பத்திற்கு வழங்கப்பட்டு வந்த குடும்ப ஓய்வூதியத்தை 2,500/- ரூபாயிலிருந்து 4,750/- ரூபாயாகவும் உயர்த்தி வழங்கினார்.

அவர் வழியில் செயல்படும் இந்த அரசு, இன்றைய பொருளாதார சூழலையும், பத்திரிகையாளர் நலனையும் கருத்தில் கொண்டு, பத்திரிகையாளர்களின் ஓய்வூதியம் 8,000/- ரூபாயிலிருந்து 10,000/- ரூபாயாகவும், அவர்களது குடும்பத்திற்கு வழங்கப்படும் குடும்ப ஓய்வூதியம் 4,750/- ரூபாயிலிருந்து 5,000/- ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

************

சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை சார்பாக கீழ்க்கண்ட அறிவிப்புகளை இம்மாமன்றத்தில் அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

இந்துக்கள் சீனாவில் உள்ள மானசரோவர் மற்றும் நேபாளத்தில் உள்ள முக்திநாத் திருத்தலங்களுக்கு சென்று வழிபட மானியம் வழங்கும் திட்டத்தை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2011-ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்ற பின் துவக்கி வைத்தார்.

1. இந்த இரு யாத்திரைகளையும் மேற்கொள்ள தமிழகத்தில் உள்ள யாத்ரீகர்களிடமிருந்து நல்ல வரவேற்பு உள்ளதால், மானியம் பெறும் பயனாளிகளின் எண்ணிக்கை 500-லிருந்து 1000 ஆக உயர்த்தப்படும். நடப்பு நிதியாண்டில் இதனால் அரசுக்கு 1 கோடியே 25 லட்சம் ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும்.

2. இந்து சமய அறநிலையத் துறை ஆளுகையின் கீழ் இல்லாத ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் உள்ள திருக்கோயில்களின் புனரமைப்பு திருப்பணிகளுக்கு நிதி வழங்கும் நோக்குடன் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா திருக்கோயில் ஒன்றுக்கு ஒரு லட்சம் ரூபாய் வீதம் நிதியுதவி வழங்கி வந்தார்.

2017-18-ஆம் ஆண்டில், கிராமக் கோயில்களைப் புதுப்பிப்பதற்காக கோயில் ஒன்றிற்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்குவதுடன், இத்திட்டத்தில் பயன்பெறும் கோயில்களின் எண்ணிக்கை 500-லிருந்து 1000 ஆக இரட்டிப்பாக்கப்படும் என நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்திற்கு கிராமப்புறங்களில், குறிப்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளிலிருந்து அதிக கோரிக்கைகள் வந்த வண்ணம் உள்ளதால், திருப்பணி செய்யப்படும் இத்தகைய கிராமப்புற திருக்கோயில்களின் எண்ணிக்கை 2000 ஆக உயர்த்தப்படும்.

இத்திட்டத்திற்கு நடப்பாண்டில் திருக்கோயில் நிதியிலிருந்து 20 கோடி ரூபாய் செலவிடப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார் முதல்வர் பழனிசாமி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x