Published : 03 Jul 2017 11:36 AM
Last Updated : 03 Jul 2017 11:36 AM

சிங்காநல்லூர் குளக்கரையில் மியாவாக்கி மரக்கன்று நடவு தொடக்கம்: நீர்நிலையின் உயிர்ச்சூழலைப் பாதுகாக்க கைகோர்த்த தன்னார்வலர்கள்

கோவை சிங்காநல்லூர் குளக்கரையில் உயிர்ச்சூழலை மேம்படுத்தும் வகையில் மியாவாக்கி அடர்நடவு முறையில் நாட்டு மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவை மாநகரில் உள்ள சிங்காநல்லூர் குளத்தில் இயற்கை உயிர்ச்சூழல் பெருக்கம் அதிகளவில் உள்ளது. குறிப்பாக, நீர்வாழ் உயிரினங்களும், வெளிநாட்டுப் பறவைகளும் இங்கு அதிகளவில் உள்ளன. எனவே இக்குளத்தை பாதுகாக்க வேண்டுமென மாநக ராட்சி பல்வேறு முயற்சிகளை மேற்கொண் டுள்ளது. தன்னார்வலர்கள் உதவியுடன் தற்போது குளக்கரையின் இயற்கைத் தன்மையைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

குளக்கரையை பலப்படுத்த அதன் உட்புறத்தில் வெட்டிவேர், பனைவிதைகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. குளக்கரை சாலையின் மறு ஓரத்தில் தற்போது வனச்சூழலை உருவாக்கும் வகையில் மர நடவும் நடக்கிறது. இடைவெளியில்லா அடர் காடு எனப்படும் மியாவாக்கி முறையில் இயற்கை வனச்சூழலை அங்கு தன்னார்வலர்கள் உருவாக்கி வருகின்றனர்.

இந்நிலையில், ஜூலை மாத முதல்வாரம் மரக்கன்று நடும் திருவிழா பரவலாகக் கொண்டாடப்படுவதையொட்டி, கோவை சிங்காநல்லூர் குளத்தின் கரையிலும் மரக்கன்று நடவு தொடங்கியது. மக்களுக்கும் மரங்களுக்கும் இடையேயான இணைப்பை பலப்படுத்தும் வகையில், தன்னார்வலர்களும், பொதுமக்களும் இணைந்து இங்கு மரக்கன்றுகளை நேற்று நட்டு வைத்தனர். நிகழ்ச்சியை மாநகராட்சி ஆணையாளர் விஜயகார்த்திகேயன், மண்டல வனப் பாதுகாவலர் ராமசுப்பிரமணியன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். நகர்ப்புற பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் ஆய்வு மைய தன்னார்வலர்கள், கல்லூரி மாணவ, மாணவி கள், சூழலியல் ஆர்வலர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

வெள்ளலூரில் உள்ள அதிவிரைவுப்படை உதவி கமாண்டண்ட் இளம்பரிதி தலைமை யில் 40 வீரர்கள் மரக்கன்று நட்டு வைத்தனர்.

நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த தன்னார்வலர்கள் கூறும்போது, ‘சிங்காநல்லூர் குளம் நெருக்கமான உயிர்ச்சூழலைக் கொண்டது. இங்கு அதிகபட்சமாக ஒரே நேரத்தில் 821 பெலிக்கன் பறவைகள் இருந்தது ஆய்வில் தெரியவந்தது. இதுபோல ஏராளமான பறவைகள், பட்டாம்பூச்சிகள், நீர்வாழ் உயிரிகள், தாவரங்கள் இங்கு நிறைந்து கிடக்கின்றன. இந்த சூழலை மேம்படுத்த வேண்டும் என்பதற்காகவே அடர் நடவு மியாவாக்கி முறையில் மரக்கன்றுகளை நட்டு வளர்த்து வருகிறோம்.

மொத்தம் உள்ள 4 கி.மீ. சுற்றளவில் ஒவ்வொரு கிலோ மீட்டர் தூரத்தையும் தனித்தனியாக பிரித்து மர வளர்ப்பு மேற்கொள்ளப்படுகிறது. இதுவரை 115 வகையான, 2000 மரங்களை சிறப்பாக வளர்த்துள்ளோம். பொதுவாக மரக்கன்றுகள் நடுவதோடு பலரும் இருந்து விடுவார்கள். அப்படி இருக்கக்கூடாது என்பதற்காக பொதுமக்களை இதில் ஈடுபடுத்தி நடப்பட்ட மரக்கன்றுகளை பராமரித்து வருகிறோம். நடப்பட்ட மரக்கன்றுகளை 59 வாரங்கள் தனித்தனி நிகழ்ச்சிகளை நடத்தி பராமரிக்கிறோம். போர்வெல் அமைத்து தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. 4-வது முறையாக இப்போது சுமார் 200 மரக்கன்றுகளை நடவு செய்திருக்கிறோம். இதில் உள்ள அனைத்துமே நூற்றாண்டு கடந்தும் பயனளிக்கும் நாட்டு மரங்கள் என்பது கூடுதல் சிறப்பு’ என்றனர்.

இயற்கைத் திருட்டு?

சிங்காநல்லூர் குளக்கரையை மேம்படுத்த தன்னார்வலர்கள் இணைந்து மேற்கொள்ளும் பணியை பல்வேறு தரப்பினரும் ஊக்குவித்து வருகின்றனர். வேறெங்கும் இல்லாத வகையில், பனை விதைகளுக்கான நர்சரி அமைத்து அவற்றை கரை ஓரங்களில் நடவு செய்தனர். சுமார் 750 பனைவிதைகள் நடப்பட்டன. ஆனால் அதில் தற்போது சுமார் 300 விதைகள் மட்டுமே துளிர்விட்டு வளர்கின்றன.

மீதமிருந்த பனை மரக்கன்றுகளை கிழங்குக்காக சமூகவிரோதிகள் தோண்டி எடுத்துச் சென்றுவிட்டனர். மேலும், குளக்கரையில் அடர்நடவு முறையில் வளர்க்கப்படும் அரியவகை மரங்களையும் அவ்வப்போது சிலர் வெட்டிவிடுவதாகவும் தன்னார்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதைத் தடுக்க குளக்கரை சாலைக்கு கேட் அமைத்து காவலர்கள் நியமிக்கப்பட்டும் கூட இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், மாநகராட்சி போதுமான பாதுகாப்பை வழங்க வேண்டுமெனவும் அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x