10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வாடும் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்க: ஜவாஹிருல்லா

10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வாடும் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்க: ஜவாஹிருல்லா
Updated on
2 min read

எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வாடும் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''நடைபெற்றுவரும் தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில், தமிழக சிறைச்சாலைகளில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்துவரும் சிறைவாசிகளை விடுவிக்க சட்ட ஆலோசகர்களின் ஆலோசனைகளைப் பெற்று நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றப் பேரவையில் அறிவித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. முதல்வரின் இந்த அறிவிப்பை மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வரவேற்கின்றேன்.

சிறைவாசிகள் விடுதலை தொடர்பாக 2011-2016 வரை நடைபெற்ற 14வது சட்டமன்ற பேரவைக் கூட்டங்களில் பலமுறை மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நான் கோரிக்கை வைத்தேன். நான் கோரிக்கை வைத்தபோதெல்லாம் பதிலளித்த அமைச்சர்கள் ''கடந்த 2008ல் பொதுமன்னிப்பு அடிப்படையில் சிறைவாசிகளை விடுதலை செய்யப்பட்டது தொடர்பாக சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளதால் தற்போது சிறைவாசிகளை விடுதலை செய்ய இயலாது'' என தெரிவித்தனர்.

அதற்கு அரசியலமைப்பு சட்டம் 161-வது பிரிவை பயன்படுத்தக் கூடிய முழு உரிமை மாநில அரசுக்கு உண்டு, அதில் நாங்களே தலையிட முடியாது (It is an Unfettered Right) என்று உச்சநீ திமன்றமே சொல்கிறது. எனவே இந்த அடிப்படையில் சிறைவாசிகளின் விடுதலையை பரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன். அதேபோல் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் சென்னை, மதுரை, கோவை ஆகிய பெருநகரங்களில் கடந்த 2016 பிப்ரவரி 7 அன்று மாபெரும் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இச்சூழலில் சிறைவாசிகள் விடுதலையை எதிர்த்து பாஜகவின் சுப்ரமணியன் சுவாமி தொடர்ந்த வழக்கு கடந்த 16.08.2016 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தால் முடித்து வைக்கப்பட்டுள்ள நிலையில், குற்ற நடைமுறைச் சட்டத்தின் 432வது பிரிவின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட மாநில அரசு, தண்டனை விதிக்கப்பட்டவர்களின் தண்டனைக் காலத்தை முற்றிலுமாகவோ, பகுதியாகவோ குறைப்பதற்கு மாநில அரசுக்கு உள்ள அதிகாரத்தின் அடிப்படையிலும் 10 ஆண்டுகள் மற்றும் அதற்கு அதிகமான காலம் சிறைத் தண்டனை அனுபவித்துள்ள பேரறிவாளன் உள்ளிட்டோருடன் 10 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த முஸ்லிம் கைதிகள் உட்பட அனைத்துக் கைதிகளையும் அரசியலமைப்புச் சட்டம் 161வது பிரிவு மாநில அரசுக்கு வழங்கியுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி பாரத ரத்னா எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யவேண்டுமென தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

காவல்துறைக்கான மானியக் கோரிக்கையில் முக்கியத்துவம் வாய்ந்த சிறைவாசிகள் விடுதலை குறித்து சட்டப்பேரவையில் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும், திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ. அன்பழகன் ஆகியோருக்கும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in