Published : 18 Jul 2017 07:49 AM
Last Updated : 18 Jul 2017 07:49 AM

குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களித்த திமுக எம்எல்ஏக்களுக்கு திருநாவுக்கரசர் நேரில் நன்றி

குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் மீரா குமாருக்கு ஆதரவளித்த திமுக எம்எல்ஏக்களுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் நேரில் நன்றி தெரிவித்தார்.

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு, சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்தது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் சார்பில் போட்டியிடும் மீரா குமாருக்கு திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்ற மனிதநேய ஜனநாயகக் கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி ஆகியோர் ஆதரவு தெரிவித்திருந்தனர்.

வாக்குப்பதிவு நடந்துகொண்டிருக்கும்போது பகல் 11.45 மணி அளவில் தலைமைச் செயலகத்துக்கு வந்த திருநாவுக்கரசர் திமுக, காங்கிரஸ், முஸ்லிம் லீக் எம்எல்ஏக்களுக்கும், தமிமுன் அன்சாரிக்கும் நன்றி தெரிவித்தார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் மீரா குமாருக்கு திமுக, காங்கிரஸ், முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதற்காக அவர்களுக்கு நேரில் நன்றி தெரிவித்தேன். மத்திய அமைச்சர், மக்களவை தலைவர் என பல பதவிகளை வகித்துள்ள அனுபவம் வாய்ந்த மீரா குமார் வெற்றி பெற்று குடியரசுத் தலைவரானால் நாட்டின் நலன் பாதுகாக்கப்படும். திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் மட்டுமல்லாது ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களும் மீரா குமாருக்கு ஆதரவு அளித்திருப்பார்கள் என நம்புகிறேன்.

நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு தீர்வு காணாமல், போராட்டம் நடத்தி வருபவர்களை கைது செய்வது கண்டிக்கத்தக்கது. உடனடியாக அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வேண்டும்.

இவ்வாறு திருநாவுக்கரசர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x