காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி அன்புமணி விழிப்புணர்வு பயணம்: ராமதாஸ் தகவல்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி அன்புமணி விழிப்புணர்வு பயணம்: ராமதாஸ் தகவல்
Updated on
2 min read

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி ஒகேனக்கலில் தொடங்கி, கடலில் கலக்கும் பூம்புகார் வரை 412 கி.மீ. தொலைவுக்கு அன்புமணி 3 நாட்கள் விழிப்புணர்வு பரப்புரை பயணம் மேற்கொள்ள இருக்கிறார் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''காவிரியில் தமிழகத்திற்குரிய உரிமைகளை ஓரளவாவது மீட்டெடுக்கவும், நடுவர் மன்றத் தீர்ப்பின்படி தண்ணீர் பெறவும் காவிரி மேலாண்மை வாரியம்தான் ஒரே தீர்வு என்பது உறுதியாகிவிட்ட நிலையில், அதை அமைக்க விடாமல் தொடர்ந்து முட்டுக்கட்டைகள் போடப்பட்டு வருகின்றன. அவற்றைத் தகர்த்து காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படுவதே நடுவர் மன்றத் தீர்ப்பை செயல்படுத்துவதற்காகத்தான் என்பதால், காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பே செல்லாது என்ற புதிய நிலைப்பாட்டை கர்நாடகம் மேற்கொண்டிருக்கிறது. காவிரிப் பிரச்சினை குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்த போது, ''காவிரி நீர்ப்பகிர்வு குறித்த முடிவுகளை காலாவதியான 1924-ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில்தான் காவிரி நடுவர் மன்றம் எடுத்தது என்பதால் அந்தத் தீர்ப்பு செல்லாது. இப்போதுள்ள சூழல்களின் அடிப்படையில் காவிரி நீரை தமிழகம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்கள் எவ்வாறு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து தீர்மானிக்கப்பட வேண்டும்'' என்று கர்நாடகம் வலியுறுத்தியது.

மீண்டும் ஒரு நடுவர் மன்றத்தை அமைத்து காவிரிப் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுவதை தாமதமாக்க வேண்டும் என்பதுதான் கர்நாடகத்தின் நோக்கமாகும். கர்நாடகத்தின் இக்கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்து விட்டாலும், காவிரி நீர் பகிர்வு குறித்து உச்ச நீதிமன்றமே தீர்மானிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதை மறுக்க முடியாது. அதேபோல், மத்திய அரசும் நிரந்தரத் தீர்ப்பாயம் என்ற பெயரில் ஒற்றைத் தீர்ப்பாயத்தை அமைத்து காவிரி நீர் பகிர்வு குறித்த விவகாரத்தை மீண்டும் விசாரிக்க வைப்பதற்கு திட்டமிட்டிருக்கிறது. இதற்கான சட்டபூர்வ நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

மற்றொரு புறம் காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு என்ற இடத்தில் புதிய அணை கட்டுவதற்கான நடவடிக்கைகளில் கர்நாடக அரசு ஈடுபட்டிருக்கிறது. இதற்கான விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்து மத்திய அரசிடம் தாக்கல் செய்திருக்கிறது. இத்திட்டத்திற்காக ரூ.5,912 நிதி ஒதுக்கீட்டுக்கும் ஒப்புதல் அளித்திருக்கிறது. கர்நாடக சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு மே மாதம் தேர்தல் நடத்தப்பட வேண்டும். சில மாதங்கள் முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படுவதற்கும் வாய்ப்புகள் இருப்பதால், காவிரிச் சிக்கலில் கர்நாடகத்திற்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுவதற்கு அதிக சாத்தியக் கூறுகள் உள்ளன.

காவிரிப் பிரச்சினையில் தமிழகத்திற்கு எதிராக இத்தனை அம்சங்கள் இருக்கும் நிலையில், அவற்றை முறியடித்து தமிழகத்திற்குரிய உரிமைகளையும், நீதியையும் பெறுவது அரசியல் ரீதியாக அழுத்தம் தந்தால் மட்டும்தான் சாத்தியமாகும். பதவியை தக்கவைத்துக் கொள்வதற்கும், ஊழல் வழக்கிலிருந்து தப்பவும் தடுமாறிக் கொண்டிருக்கும்

தமிழக அரசு இதையெல்லாம் ஒருபோதும் செய்யாது. பினாமி அரசும், அதற்கு முன்பிருந்த ஜெயலலிதா அரசும் கடந்த ஆறு ஆண்டுகளில் ஒருமுறை கூட இப்பிரச்சினை குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டவில்லை என்பதிலிருந்தே இப்பிரச்சினையில் அதிமுக அரசுக்கு அக்கறை இல்லை என்பதை புரிந்து கொள்ள முடியும். காவிரிப் பிரச்சினை குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்களை காவிரிக்காக குரல் கொடுக்க வைத்து, இதை மக்கள் இயக்கமாக மாற்றுவதன் மூலம் தான் மத்திய, மாநில அரசுகளை பணிய வைக்க முடியும்.

அதற்காக, காவிரி சிக்கல் குறித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதன் அவசியம் குறித்தும் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பாமக கட்சியின் இளைஞரணித் தலைவரும், தருமபுரி மக்களவை உறுப்பினருமான அன்புமணி, தமிழகத்திற்குள் காவிரி நுழையும் ஒகேனக்கலில் தொடங்கி, கடலில் கலக்கும் பூம்புகார் வரை 412 கி.மீ. தொலைவுக்கு இம்மாதம் 28, 29, 30 ஆகிய 3 நாட்கள் விழிப்புணர்வு பரப்புரை பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.

வரும் 28-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை ஒகேனக்கல் நகரில் பரப்புரை பயணத்தைத் தொடங்கும் அவர், பென்னாகரம், மேச்சேரி, மேட்டூர், கொடுமுடி வழியாக ஈரோட்டில் நிறைவு செய்கிறார். அன்றிரவு பவானி நகரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்றுகிறார்.

இரண்டாம் நாள் பயணத்தை 29-ஆம் தேதி காலை கரூர் மாவட்டம் நொய்யலில் தொடங்கும் அவர், வேலாயுதம்பாளையம், வாங்கல், புலியூர், கிருட்டிணராயபுரம், குளித்தலை, முசிறி வழியாக சமயபுரத்தில் பயணத்தை நிறைவு செய்கிறார். தொடர்ந்து அன்றிரவு திருச்சி மாநகரில் நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்றவுள்ளார்.

ஜூலை 30-ஆம் தேதி காலை கல்லணையில் விழிப்புணர்வு பயணத்தை தொடங்கும் அன்புமணி, திருக்காட்டுப்பள்ளி, திருவையாறு, கும்பகோணம், கதிராமங்கலம், மயிலாடுதுறை வழியாக பூம்புகாரில் பரப்புரை பயணத்தை நிறைவு செய்வதுடன், அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் விழிப்புணர்வு உரை நிகழ்த்துகிறார்.

காவிரி ஆற்றைக் காக்கவும், உரிமைகளை மீட்டெடுக்கவும் அன்புமணி மேற்கொள்ளும் இப்பயணத்திற்கு விவசாய அமைப்புகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஆதரவளிக்க வேண்டுகிறேன்'' என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in