Last Updated : 24 Jul, 2017 09:12 AM

 

Published : 24 Jul 2017 09:12 AM
Last Updated : 24 Jul 2017 09:12 AM

கொடுங்கையூர் தீ விபத்து உட்பட தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 2,389 காஸ் சிலிண்டர் விபத்துகள்

தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 2 ஆயிரத்து 389 காஸ் சிலிண்டர் விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இதில் 15 பேர் உயிர் இழந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

சென்னை கொடுங்கையூரில் உள்ள உணவகம் ஒன்றில் அண்மையில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியின்போது காஸ் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட தீப்பிழம்பில் சிக்கி தீயணைப்பு வீரர் ஏகராஜ் (56) உயிர் இழந்தார்.

அவருடன் சேர்ந்து தீயணைப்பு வீரர்கள், போலீஸார், பொது மக்கள் என 48 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், இதுபோன்று மீண்டும் ஒரு விபத்தில் தீயணைப்பு வீரர்கள் சிக்கிக் கொள்ளக் கூடாது என தீயணைப்பு அதிகாரிகள் முடிவு செய்தனர்.

அதன்படி, தமிழகம் முழுவதும் கடந்த 3 ஆண்டுகளில் நடந்த காஸ் சிலிண்டர் விபத்துகள் குறித்து கணக்கெடுக்கப்பட்டது. இதில், 2 ஆயிரத்து 389 காஸ் சிலிண்டர் தீ விபத்துகளும், தீயணைப்பு வீரர் ஏகராஜ் உள்பட 15 பேர் உயிர் இழந்துள்ளதும், 91 பேர் காயம் அடைந்திருந்ததும் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து, “தீ விபத்தின் போது தீயை அணைக்க செல்லும் தீயணைப்பு வீரர்கள் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்துகொள்ள வேண்டும், பொது மக்களின் துயர் துடைக்க விரைந்து செயல்பட வேண்டும்” என தீயணைப்பு வீரர்களுக்கு தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை டிஜிபி எஸ்.ஜார்ஜ் அறிவுரை வழங்கியுள்ளார்.

கொடுங்கையூர் தீ விபத்து உயிர் இழப்பின் தொடர்ச்சியாக தீயணைப்பு அதிகாரிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர். அதன் தொடர்ச்சியாக விரைவில் தீயணைப்பு வீரர்களுக்கு சிறப்பாக தீயணைப்பது குறித்தும், விபத்தில் சிக்கிக் கொள்ளாமல் பணி செய்வது குறித்தும் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட உள்ளதாக தீயணைப்புத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x