Published : 26 Jul 2017 08:18 AM
Last Updated : 26 Jul 2017 08:18 AM

பிரதமர் மோடியுடன் முதல்வர் பழனிசாமி சந்திப்பு: நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வலியுறுத்தல்

பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதல்வர் கே.பழனிசாமி டெல்லியில் சந்தித்துப் பேசினார். அப்போது, நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

குடியரசுத் தலைவர் பதவி யேற்பு விழாவில் பங்கேற்பதற் காக டெல்லி சென்றிருந்த முதல்வர் பழனிசாமி, நாடாளு மன்ற வளாகத்தில் உள்ள அலுவல கத்தில் பிரதமர் மோடியை நேற்று காலை 11 மணிக்கு சந்தித்துப் பேசினார். சுமார் 15 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பின்போது, நீட் நுழைவுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை நடை பெற்றால் மாநில பாடத் திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து பிரதமரிடம் விரிவாக எடுத்துரைத்தார்.

நீட் தேர்வில் இருந்து தமிழகத் துக்கு விலக்கு அளிக்கும் வகையில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக் களுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற்றுத்தர வேண்டும் என வலியுறுத்தி மனு ஒன்றையும் மோடியிடம் அளித்தார்.

தமிழக அமைச்சர்கள் பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன், சி.விஜயபாஸ்கர் ஆகியோர் நேற்று முன்தினம் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதியமைச்சர் அருண் ஜேட்லி ஆகியோரை சந்தித்து நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வலியுறுத்தி மனு அளித்தது குறிப்பிடத்தக்கது.

பிரதமருடனான சந்திப்புக்குப் பிறகு டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் நிருபர்களிடம் முதல்வர் பழனிசாமி கூறியதாவது:

நீட் தேர்வில் இருந்து தமிழகத் துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என பிரதமரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். இதுகுறித்து பரிசீலிப்பதாக அவர் கூறியிருக் கிறார்.

பெட்ரோலிய மண்டலம் என்பது ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட திட்டம். கதிராமங்கலத்தில் எண்ணெய், எரிவாயு எடுக்கும் திட்டம், கடந்த 2001 முதல் 17 ஆண்டுகளாக நடந்து வருகிறது. குழாய்கள் பழுதடைந்ததால் தற்போது அதை மாற்றி அமைக் கிறார்கள். புதிதாக எந்த திட்டமும் தற்போது செயல்படுத்தப்பட வில்லை. சிலரது தூண்டுதலால் அங்கு போராட்டம் நடந்து வருகிறது.

விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்காது என ஏற்கெனவே அறிவித்துள்ளோம். ஹைட்ரோ கார்பன் திட்டம், கடந்த 1989-ல் திமுக ஆட்சியிலேயே கொண்டு வரப்பட்டது.

ஜிஎஸ்டி, மதுக்கடைகள் மூடலால் தமிழக அரசுக்கு நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக விவசாய சங்கத் தலைவர் அய்யா கண்ணுவிடம் நான் கூறவில்லை. இது தொடர்பாக அவர் கூறியது தவறானது. தமிழகத்தில் வறட்சி யால் பாதிக்கப்பட்ட விவசாயி களை கணக்கிட்டு தமிழக அரசு நிவாரணம் வழங்கி வருகிறது. தேசியமயமாக்கப்பட்ட வங்கி களில் பெறப்பட்ட விவசாயக் கடன்களை ரத்து செய்யக் கோரியே தமிழக விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவ்வாறு முதல்வர் பழனிசாமி கூறினார்.

இரு அணிகளும் முகாம்

குடியரசுத் தலைவர் பதவி யேற்பு விழாவில் பங்கேற்க டெல்லி சென்றுள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், நேற்று முன்தினம் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார். அதைத் தொடர்ந்து முதல்வர் பழனிசாமியும் மோடியை நேற்று சந்தித்துள்ளார்.

அதிமுக அணிகள் இணைப்பு குறித்து இருவரிடமும் பிரதமர் பேசியதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சட்டப்பேரவை யில் முன்னாள் முதல்வர் ஜெய லலிதா படத் திறப்பு, சென்னை யில் நடக்கவுள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா ஆகியவற்றில் பங்கேற்க வருமாறு மோடிக்கு முதல்வர் அழைப்பு விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x