

உலகின் மிகச் சிறிய செயற்கைக்கோளை தயாரித்து விண்ணுக்கு அனுப்பிய ரிஃபாத் சாருக் மற்றும் அவரது குழுவினரை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் நேரில் வாழ்த்தினார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், ''உலகின் மிகச் சிறிய செயற்கைக்கோளை தயாரித்து விண்ணுக்கு அனுப்பிய ஸ்பேஸ்கிட்ஸ் அமைப்பை சேர்ந்த மாணவர்கள் இன்று காலை என்னை நேரில் சந்தித்தனர். 3டி பிரிண்டிங் தொழில்நுட்பத்தில், 64 கிராம் எடை கொண்ட மிகச் சிறிய செயற்கைக்கோளை உருவாக்கி, அதனை நாசா அமைப்பு விண்ணில் செலுத்தியது உள்ளபடியே பாராட்டுக்குரிய ஒன்று.
சுமார் 240 நிமிடங்கள் விண்ணில் பறந்த செயற்கைக்கோளை காண்பித்து, அதன் திட்டப்பணிகள் குறித்து என்னிடம் பகிர்ந்து கொண்டனர். இந்தியாவின் ஏவுகணை மனிதரான மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமை நினைவுகூறும் வகையில் 'கலாம்சாட்' என்று பெயரிடப்பட்ட இந்த செயற்கைக்கோளை வடிவமைத்த, தமிழகத்தைச் சேர்ந்த 18 வயது மாணவர் ரிஃபாத் சாருக் மற்றும் அவரது குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டேன்.
தமிழகத்திலிருந்து இளம் விஞ்ஞானிகளாக உலக அரங்கில் நம்மை பெருமைபட வைக்கும் இதுபோன்ற சாதனைகள் இன்னும் பெருக வேண்டும்'' என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.