

ஊருக்குப் பொதுவாக ஒரு நந்தவனம், குளிப்பதற் காகவே அதன் நடுவே ஒரு கிணறு, அதில், தண்ணீர் இறைக்க ஒரு தெலா (துலாம்) ஏற்றம் என்று, இன்ன மும் பழமையைச் சுமந்து ஆச்சரியப்படுத்துகிறது ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள நூர்சாகிபுரம்
மின்சாரம் இருக்கிறதா இல்லையா என்ற கவலை எல்லாம் வேண்டாம். கையில் சோப்பும் ஷாம்பும் எடுத்துக்கொண்டு எப்போது போனாலும் இந்தத் தெலா ஏற்றக் கிணற்றில் ஆசை தீர குளிக்கலாம். தெலா என்பது சுமார் 250 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் பரவலாக இருந்த இலகுவான ஓர் நீர் இறைப்பு சாதனம். பழைய ரயில்வே கேட்களையும் செக் போஸ்ட்களையும் போல, நீண்ட கம்பி அல்லது மரக் கம்பத்தின் ஒரு முனையில் எடைமிகுந்த கல்லைக் கட்டி வைத்திருப்பார்கள். மறுமுனையில் நீண்ட இரும்புச் சங்கிலி அல்லது கயிற்றுடன் பிணைக் கப்பட்ட உலோகம் அல்லது மரத்தால் ஆன பெரிய வாளி. சங்கிலியைப் பிடித்து இழுத்தால், வாளி கிணற்றுக்குள் போகும். தண்ணீர் நிரம்பியதும் மெதுவாக சங்கிலியை மேலே இழுத்தால் போதும், எதிர்முனையில் இருக்கும் கல்லின் எடையே, சிரமமின்றி தண்ணீர் ரொப்பிய வாளியை மேலே கொண்டு வந்துவிடும்.
பார்த்தாலே தீட்டு
இப்போது ஐம்பது வயதைத் தொட்டர்வளுக்குக்கூட இந்தக் கிணற்றைப் பற்றிய விவரம் அவ்வளவாய் தெரியவில்லை. நூர்சாகிபுரத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் கடற்கரைதான் சற்று விவரமாகப் பேசினார். “தீண்டாமைக் கொடுமைகள் உச்சத்தில் இருந்தபோது, சாதி இந்துக்கள் இப்பகுதி மக்களை, பார்த்தாலே தீட்டு என்று ஒதுக்கி வைத்திருந்தார்கள். பொதுக்கிணற்றில் தண்ணீர் இறைக்க முடியாது. அந்தச் சங்கடங்களை சமாளிப்பதுக்காக, உறவின் முறை சார்பில் பொது நிதியை ஏற்படுத்தி, தங்களுக்கென தனிக்கிணறு, தனிக்கோயில், தனிப்பள்ளிக்கூடம் என்று எங்கள் முன்னோர்கள் உருவாக்கினார்கள். தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் ஊருக்குப் பொதுவாகவும் இந்தக் கிணறுகள் இருந்தன. இதே தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி அந்தக் காலத்தில் விவசாயத்துக்கும் தண்ணீர் இறைத்தார்கள்.
விருதுநகர் ஷத்திரிய பள்ளி 1885-ல் தொடங்கப்பட்டது என்றால், அதற்கு முன்பே இதுபோன்ற கிணறுகளும் நந்தவனங்களும் இப்பகுதியில் கிராமங்கள் தோறும் உருவாக்கப்பட்டன. விருதுநகர் வழியாக மதுரைக்குச் செல்வோர் இப்போதுள்ள நான்குவழிச்சாலைக்கு அருகிலேயே ஒரு தெலாக்கிணறைப் பார்க்கலாம். இதேபோல, தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையிலும் தெலாக் கிணறைப் பார்த்திருக்கிறேன். எனக்குத் தெரிந்து இன்னமும் தெலாக்கிணறு தினசரிப் பயன்பாட்டில் இருப்பது நூர்சாகிபுரத்திலும், பக்கத்துக் கிராமமான வைத்திலிங்கபுரத்திலும்தான்” என்றார்.
சிக்கனமாய் பயன்படுத்துவதால்..
‘நினைவே ஒரு சங்கீதம்’ (1987-) படத்தில், ‘ஏத்தமையா ஏத்தம் ஏலோலங்கடி ஏத்தமையா ஏத்தம்... எங்கப்பன் உன்பாட்டன் முப்பாட்டன் சொத்து இது... ஏத்தமையா ஏத்தம்’ என்று ஏற்றம் மீது நடந்தபடி விஜயகாந்த் பாடுவார். அதற்கு, ‘ஸ்விட்ச்சு ஒண்ணத் தட்டி உட்டுபுட்டா... பம்ப்பு செட்டுல தண்ணி கொட்டிப்புடும்.. வெச்சு வேல செய்ய வக்கில்லையே இங்கு வக்கணப் பேச்சு ஏன்மாமா..’ என்று நாயகி ராதா அவருக்கு ஏடாகூடமாய் பதில்கொடுப்பாரே ஞாபகம் இருக் கிறதா? அப்படியொரு தவறைச் செய்யாமல் ஏற்றம் இறைத்துத் தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்து வதால், தெலாக் கிணற்றில் இப்போதும் எப்போதும் தண்ணீர் வற்றுவதே இல்லை.