

கதிராமங்கலத்தில் அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தஞ்சை மாவட்டம், கதிராமங்கலத்தில் அடுத்தடுத்து நடைபெற்று வரும் நிகழ்வுகள் கவலை அளிக்கக் கூடியதாக இருக்கிறது. கடந்த ஜுன் மாதம் 30-ந் தேதி கொடியாலம் சாலையில் உள்ள ஆழ்துளை எண்ணெய் கிணறு அருகே வயல் பகுதியில் செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, கச்சா எண்ணெய் வெளியேறியதால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்து போராட்டம் நடத்த முற்பட்டார்கள்.
குடிப்பதற்கு நல்ல தண்ணீர் கிடைக்கவில்லை என்றும், விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது என்றும், அதனால் குழாய் பதிக்கும் பணிகளை ஓ.என்.ஜி.சி. நிறுவனம் நிறுத்த வேண்டும் என்று சாலை மறியல் போராட்டம் நடத்திய மக்கள் மீதும், பெண்கள் மீதும் காவல் துறையினர் தடியடி நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டு அதன் விளைவாக சிலர் கைதும் செய்யப்பட்டார்கள்.
அமைதிப் பேச்சு நடத்துவதற்கு மாவட்ட ஆட்சியாளர் அழைப்பு விடுத்தும் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யும் வரை பேச்சுவார்த்தைக்கு வரமாட்டோம் என்று கூறி, கதிராமங்கலம் மக்கள் அந்தக் கூட்டத்திற்குச் செல்லாமல் புறக்கணித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் அப்பகுதியில் சகஜ நிலை திரும்பி விட்டதாக அரசும் அறிவித்திருக்கிறது. அதனால் மக்களின் எண்ணங்களுக்கு மதிப்பு அளிக்கும் வகையில், அவர்கள் மீதான வழக்கை திரும்பப் பெற்று அவர்களை விடுதலை செய்ய வேண்டும். மேலும் பிரச்சினைகள் வளராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்'' என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.