

தமிழகத்தில் வடசென்னையில் அதிக அளவில் மின்நுகர்வு செய்யப்படுவதாக மாநில மின்சுமை பகுப்பு மையம் நடத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன்படி, வடசென்னையில் மிக அதிகபட்சமாக 2 ஆயிரத்து 100 மெகாவாட் அளவு மின்சாரம் நுகரப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மின்சார நுகர்வு குறித்து மாநில மின்சுமை பகுப்பு மையம் (எஸ்எல்டிசி) அண்மையில் ஆய்வு நடத்தியது. இதில் சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஒருசில பகுதிகளில் மட்டும் கடந்த ஓராண்டில் 3,400 மெகாவாட் அளவு மின்சாரம் நுகரப்பட்டுள்ளது தெரியவந்தது. கோவையில் 2 ஆயிரம் மெகாவாட்டும், ஈரோட்டில் 1,600 மெகாவாட்டும், வேலூரில் 1,400 மெகாவாட்டும், திருச்சியில் 1,400 மெகாவாட்டும், திருநெல்வேலியில் 1,170 மெகாவாட்டும், மதுரையில் 1,150 மெகாவாட்டும், விழுப்புரத்தில் 980 மெகாவாட்டும் மின்சாரம் நுகரப்பட்டுள்ளது தெரியவந்தது. மேலும், தமிழகத்திலேயே வடசென்னையில்தான் மிக அதிகபட்சமாக 2 ஆயிரத்து 100 மெகாவாட் அளவு மின்சாரம் நுகரப்பட்டுள்ளது.
தமிழகத்தின் நாளொன்றுக்கான மொத்த மின்தேவை 13,200 மெகாவாட் ஆகும். இதில் நான்கில் ஒரு பங்கு சென்னை நகரின் தேவையாக உள்ளது. சென்னையில் வசிக்கும் மக்கள் வீடுகளில் அதிகமாக ஏசியை பயன்படுத்துகின்றனர். மேலும் இந்த ஆண்டு ஜூலை மாதம் வரையிலும் கோடை வெப்பம் தொடர்கிறது. இதுவும் மின்நுகர்வு அதிகரித்திருப்பதற்கு முக்கிய காரணமாகும். கடந்த ஆண்டு ஏப்ரல் 29-ம் தேதி மிக அதிகபட்ச மின்தேவையாக 15,343 மெகாவாட் பதிவானது. ஆனால், இந்த ஆண்டு அந்த அளவை இதுவரை எட்டவில்லை. இந்த ஆய்வு மின் பரிமாற்றம் மற்றும் விநியோக கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான திட்டமிடலை மேற்கொள்ள உதவியாக இருக்கும்.
டான்ஜெட்கோ வருவாய் அதிகரிப்பு
கடந்த பல ஆண்டுகளாக ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் கோடி நஷ்டத்தில் இயங்கிவந்த தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (டான்ஜெட்கோ) இந்த ஆண்டு சிறிய லாப பாதைக்கு திரும்பியுள்ளது. மேலும், மின்வாரியத்தின் கடன்சுமையை குறைக்கும் வகையில் உதய் திட்டத்தின் கீழ் பாண்டுகளை வெளியிடவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
தொடரும் மின்தடை
மின்வெட்டு பிரச்சினை இல்லை என மின்வாரியம் கூறினாலும் சென்னையின் புறநகர் பகுதிகளில் மின்தடை தொடர்கதையாக உள்ளது. குறிப்பாக ஆவடி, பட்டாபிராம், மிட்னமல்லி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக மின்தடை ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, தமிழ்நாடு முற்போக்கு நுகர்வோர் அமைப்பின் தலைவர் டி.சடகோபன் கூறும்போது, "ஆவடி மற்றும் அதைச் சுற்றியுள்ள பட்டாபிராம், மிட்னமல்லி உள்ளிட்ட பகுதிகளில் தினமும் 4 மணி நேரத்துக்கும் மேலாக மின்தடை ஏற்பட்டு வருகிறது. அத்துடன் குறைந்த மின்னழுத்தம் ஏற்பட்டு வருகிறது" என்றார்.
இதுகுறித்து, மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறும்போது, "மிட்னமல்லியில் 33 கி.வாட் திறன் கொண்ட துணைமின் நிலையம் அமைக்கப்பட்டால் இந்த மின்வெட்டு பிரச்சினைக்குத் தீர்வு ஏற்படும்" என்றார்.