

அமைச்சர் டி.ஜெயக்குமார் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏற்பட்ட அமளியைத் தொடர்ந்து திமுக உறுப்பினர் ஜெ.அன்பழகன் பேரவையில் இருந்து வெளி யேற்றப்பட்டார். அதைக் கண்டித்து திமுக உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.
சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி (நாகை), திமுக உறுப்பினர்கள் ஆஸ்டின் (கன்னியாகுமரி), கே.பி.பி.சாமி (திருவொற்றியூர்) ஆகியோர், ‘‘இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்கவும், படகுகளை மீட்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என வலியுறுத்தினர்.
அப்போது பேசிய கே.பி.பி.சாமி, ‘‘இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க வும், படகுகளை மீட்கவும் மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுத்து வருவதாக பேரவையில் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரி வித்திருந்தார். ஆனால், மீனவர்கள் கைது செய்யப்படுவதும், படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்கிறது. தமிழக மீனவர்களின் படகுகளை மூழ்கடிக்கவே அமைச்சர் அழுத்தம் கொடுத்தாரா?’’ என்றார்.
அதற்கு பதிலளித்து அமைச்சர் டி.ஜெயக்குமார் பேசியதாவது:
இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்கவும், படகுகளை மீட்கவும் மத்திய அரசுக்கு மாநில அரசு சார்பில் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறோம். இது தொடர்பாக பிரதமருக்கு முதல்வர் பலமுறை கடிதம் எழுதியுள்ளார். நேரிலும் வலியுறுத்தியுள்ளார். சமீபத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை டெல்லியில் சந்தித்து இது தொடர்பாக வலியுறுத்தியுள்ளேன்.
ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது 357 படகுகளை மீட்டு மீனவர்களிடம் ஒப்படைத்தார். திமுக ஆட்சியில் மீனவர்கள் மீதான தாக்குதல் தொடர்ந்தது. துப்பாக்கிச் சூடு நடத்தி மீனவர்கள் கொல்லப்பட்டனர். ஆனால், அதிமுக ஆட்சியில் அதுபோல துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் இல்லை. திமுக ஆட்சியில் உங்கள் தலைவர் எல்லை தாண்டி மீன் பிடிக்கும் மீனவர்கள் பேராசை பிடித்தவர்கள் என்றெல்லாம் பேசியதை மறந்துவிட வேண்டாம்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.
அமைச்சரின் பேச்சுக்கு பதில ளிக்க கே.பி.பி.சாமி முயன்றார். அவருக்கு அனுமதி மறுத்த பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன், ‘‘கவன ஈர்ப்பு என்ற வகையில் திமுக உறுப்பினர் கே.பி.பி.சாமி எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதிலளித்துள்ளார். எனவே, அவரை பேச அனுமதிக்க முடியாது’’ என்றார்.
எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் எழுந்து, ‘‘கே.பி.பி.சாமியை பேச அனுமதிக்க வேண்டும்’’ என்றார். அவருக்கு ஆதரவாக திமுக உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று கோஷமிட்டனர்.
அப்போது குறுக்கிட்ட பேரவை முன்னவர் கே.ஏ.செங்கோட்டை யன், ‘‘கவன ஈர்ப்பு என்ற முறை யில் உறுப்பினர் கேட்ட கேள்விக்கு அமைச்சர் பதிலளித்த பிறகு விதிகளின்படி மீண்டும் கேள்வி கேட்க அனுமதி இல்லை. எனவே, பேரவை அலுவல்கள் நடைபெற திமுகவினர் ஒத்துழைக்க வேண்டும்’’ என்றார்.
அதை ஏற்காமல் திமுக உறுப்பினர்கள் எழுந்து நின்று கோஷமிட்டனர். இதனால் சுமார் 30 நிமிடங்கள் பேரவையின் அலுவல்கள் பாதிக்கப்பட்டன. திமுக உறுப்பினர் ஜெ.அன்பழகன் எழுந்து நின்று கைகளை நீட்டி உரத்த குரலில் கோஷமிட்டார். அவரைக் கண்டித்து ஆளும் அதிமுக உறுப்பினர்கள் பதிலுக்கு கோஷமிட்டனர். இதனால் அவை யில் பெரும் கூச்சல் குழப்பம் நிலவியது.
அப்போது குறுக்கிட்ட முதல்வர் கே.பழனிசாமி, ‘‘ஜெ.அன்பழகன் நடந்து கொள்வதை பார்த்தால் திமுகவினர் குழப்பம் விளைவிக்க வேண்டும் என திட்டமிட்டு வந்துள்ளதைப்போல தெரிகிறது. அவர் இருக்கையை விட்டு எழுந்து வந்து விதிகளை மீறி செயல்படுகிறார். இது தவறானது’’ என்றார்.
அதன்பிறகும் அமளி தொடர்ந் தது. பேரவை முன்னவர் செங் கோட்டையன் எழுந்து, ‘‘தொடர்ந்து பேரவை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவிக்கும் வகை யில் நடந்துகொள்ளும் ஜெ.அன்பழகன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார். அதைத் தொடர்ந்து, ஜெ.அன்பழகனை வெளியேற்ற அவைக் காவலர்களுக்கு பேரவை துணைத் தலைவர் உத்தரவிட்டார். அதன்படி, அவரை காவலர்கள் வெளியேற்றினர்.
ஜெ.அன்பழகன் மீதான நடவடிக்கையை திரும்பப் பெற வேண்டும் என துரைமுருகன் வேண்டுகோள் விடுத்தார். அப்போது பேசிய முதல்வர் பழனிசாமி, ‘‘ஜெ.அன்பழகன் எப்போதுமே பேரவை நடவடிக் கைகளுக்கு இடையூறு ஏற்படுத் தும் வகையிலேயே நடந்து கொள் கிறார். எதிர்க்கட்சி துணைத் தலைவர், கொறடா சொல்வதை யும் கேட்பதில்லை. பேரவை துணைத் தலைவர் சொல்வதையும் கேட்பதில்லை. எனவே, வேறு வழியில்லாமல் அவர் வெளியேற் றப்பட்டுள்ளார். யாரையும் வெளி யேற்ற வேண்டும் என்ற உள்நோக் கம் எங்களுக்கு இல்லை’’ என்றார்.
அன்பழகன் வெளியேற்றப் பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து துரைமுருகன் தலைமையில் திமுக உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர். சிறிது நேரத்தில் அவைக்கு திரும்பிய அவர்கள் சுகாதாரத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்றனர்.
ஜெ.அன்பழகன் மீதான நடவடிக்கையை திரும்பப் பெற வேண்டும் என சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.ஆர்.ராமசாமி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் அபூபக்கர் ஆகியோர் வலியுறுத்தினர். அவர்களுக்கு பதிலளித்த பேரவை துணைத் தலைவர், ‘‘விதிகளின்படி ஜெ.அன்பழகனை இந்தக் கூட்டத் தொடரின் எஞ்சிய நாட்களுக்கு இடைநீக்கம் செய்ய முடியும். ஆனாலும், எதிர்க்கட்சி துணைத் தலைவர், கொறடா கோரிக்கையை ஏற்று ஒருநாள் மட்டும் வெளியேற்றியுள்ளோம்’’ என்றார்.