

இந்தியாவில் சமூக நீதியை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டுமேயானால், அதற்கு சாதிவாரிக் கணக்கெடுப்பு என்பது முக்கியமானது என திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாடு முழுவதும் சாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவது சட்டத்துக்கு விரோதமானது என்று உச்ச நீதிமன்றம் 7-11-2014 அன்று அதிரடித் தீர்ப்பு ஒன்றினை வழங்கியுள்ளது.
2010ஆம் ஆண்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஆர். கிருஷ்ணமூர்த்தி பொதுநல வழக்கு ஒன்றினைத் தொடர்ந்தார். அதாவது, 1931ஆம் ஆண்டுக்குப் பிறகு, ஆங்கிலேயர் காலத்துக்குப் பின்பு, இந்தியாவில் சாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை என்றும், சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென்றும் தனது மனுவிலே கேட்டுக் கொண்டார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர்கள் தர்மாராவ், சிவஞானம் ஆகியோரைக் கொண்ட அமர்வு, இந்தியா முழுவதும் சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென்று 12-5-2010 அன்று தீர்ப்பு வழங்கியது. இதன் அடிப்படையில் சாரிவாரியான மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மேற்கொள்ள மத்திய அரசும் ஒப்புதல் அளித்தது.
அப்போது உள்துறை அமைச்சராக இருந்த ப. சிதம்பரம், மத்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வாரியத்தின் தலைவராகவும் இருந்த போது, சாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கு எதிராக 2012ஆம் ஆண்டு, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவினை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ராதாகிருஷ்ண பணிக்கர், தீபக் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு, சென்னை உயர் நீதி மன்றத்தின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை பிறப்பித்தது.
2013ஆம் ஆண்டு, வழக்கறிஞர் ஆர். கிருஷ்ணமூர்த்தி, உச்ச நீதி மன்றத்தில் தானே நேரில் ஆஜராகி, இடைக்காலத் தடைக்கு எதிராக மனு தாக்கல் செய்தார். அந்த மனுவின் மீதான விசாரணையில், சென்னை உயர் நீதி மன்றத்தின் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை சமூக நீதிக்கு ஆதரவாக நீக்கப்பட்டது.
எனினும் கடந்த அக்டோபர் 27ஆம் தேதியன்று இந்த வழக்கின் இறுதி வாதங்கள் முடிவடைந்தன. வழக்கில் மத்திய அரசின் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் ஆர்.எஸ். சூரி, மேல் முறையீட்டு மனுவினை ஏற்கனவே இருந்த மத்திய அரசு தாக்கல் செய்தது.
அந்த அரசு தான் 12-5-2010இல் இருந்து 19-1-2012 வரை சாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தியுள்ளது. 9-5-2011 அன்று மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் சென்னை உயர் நீதி மன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முந்தைய அரசால் முடிவெடுக்கப்பட்டது. உயர் நீதி மன்றத்தின் ஆணை தவறானது என்று இந்த அரசும் முடிவெடுத்து உள்ளது. எனவே சாதிவாரியான மக்கள் தொகை கணக் கெடுப்பு நடத்த வேண்டுமென்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றார்.
இதற்குப் பதிலளித்த வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி, மண்டல் கமிஷன் தீர்ப்புக்கு ஆதாரமே சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு தான். தற்போது நாட்டில் பல்வேறு பிரிவினரிடையே நிலவும் உண்மை நிலையை புள்ளிவிவரங்கள் மூலமாக அறிந்து கொள்ளச் சாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு மட்டுமே முழுமையானதாக இருக்கும். எனவே மத்திய அரசின் மனுவைத் தள்ளுபடி செய்து, இந்தியா முழுவதும் சாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
இந்த நிலையில் 7-11-2014 அன்று உச்ச நீதி மன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, யு.யு. லலித் ஆகியோர் அளித்த தீர்ப்பில், "மத்திய அரசையும், மக்கள் தொகை
கணக்கெடுப்புத் துறையையும், இப்படித் தான் மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்க வேண்டுமென்று வலியுறுத்தும் எந்தவிதமான சட்டப் பிரிவும், மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டம் 1948ல் இல்லை. மேலும் சாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு தான் நடத்த வேண்டுமென்று மத்திய அரசுக்கு நீதி மன்றங்கள் உத்தரவிட முடியாது.
இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பானது, அதிகாரத்தை மீறியதாகும். மத்திய அரசானது, தன்னுடைய நிலைப்பாட்டை தெரிவிக்கும்போது, சாதிவாரியான அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துவது தங்களுடைய உரிமை, சுதந்திரம் என்று கூறியுள்ளது. மத்திய அரசின் மேல் முறையீட்டை அனுமதித்து, சென்னை உயர் நீதி மன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்வதாகத் தெரிவித்திருக்கிறார்கள்.
தற்போதுள்ள சட்டப் பிரிவுகளின்படி உச்ச நீதிமன்றம் இந்தத் தீர்ப்பினை வழங்கிய போதிலும், இந்தியாவில் சமூக நீதியை முழுமையாக நடைமுறைப் படுத்தவேண்டுமேயானால், அதற்கு சாதிவாரிக் கணக்கெடுப்பு என்பது முக்கியமானது.
உச்ச நீதி மன்றம், மத்திய அரசின் கருத்துக்கு மதிப்பளித்துத் தான் இந்தத் தீர்ப்பினைக் கூறியுள்ள நிலையில் மத்திய அரசே முன் வந்து, சாதி வாரிக் கணக்கெடுப்பில் உள்ள அவசியத்தை உணர்ந்து, அதனை நடைமுறைப்படுத்திடத் தேவையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டு மென்பது தான் சமூக நீதியில் அக்கறையுள்ள அனைவரின் வேண்டுகோளுமாகும்" என கூறியுள்ளார்.