

பொதுவாக மக்கள் அதிகமுள்ள இடங்களில் இரவுக் காவலர்கள் இருப்பார்கள். ஆனால் கோவையில் மலையடிவார கிராமம் ஒன்றில் ஆற்றைக் காக்க இளைஞர்கள் காவல் இருக்கிறார்கள். ஆம், கோவையின் ஜீவாதாரமான நொய்யல் ஆற்றில் மணல் திருடப்படுவதைத் தடுக்க, ஒன்றல்ல, இரண்டல்ல, 40 இளைஞர்கள் இரவு நேரக் காவலில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேற்குத்தொடர்ச்சி மலையில் உருவாகும் கிளைநதிகள் இணைந்து கோவையின் மேற்குப் பகுதியில் நொய்யல் ஆறு உருவாகிறது. திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளை வளம் கொழிக்க வைத்த இந்த ஆறு, தற்போது உருத் தெரியாமல் அழிக்கப்பட்டு வருகிறது. பாயும் இடங்களில் எல்லாம் பல்வேறு இன்னல்களைச் சந்திக்கும் இந்த ஆறு, தொடங்கும் இடமான கோவை யில் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்பட்டு வருகிறது.
சுகாதாரக்கேடு, ஆக்கிரமிப்பு போன்ற பிரச்சினைகள் இருந்தாலும், சமீப காலமாக மணல் திருட்டு மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. ஆனால், இதைத் தடுக்க, மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் பெரிய அளவில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பொறுமையிழந்த கிராம இளைஞர் களே, தற்போது அந்த பொறுப்பைக் கையில் எடுத்துள்ளனர்.
நொய்யலின் தொடக்கப் புள்ளியான ஆலாந்துறை, மத்வராயபுரம் பகுதிகளில் செழிப்பான மண் வளம் காணப்படுகிறது. ஆண்டு முழுவதும் ஆற்றில் நீர் வரத்து இல்லாத சூழலைப் பயன்படுத்தி கடந்த சில ஆண்டுகளாக இப்பகுதியில் ஆற்று மணல் திருட்டு நடைபெற்று வந்தது. இதைத் தடுக்க வேண்டுமென்ற நோக்கத்தில் இணைந்த இளைஞர்கள், தற்போது ‘நொய்யல் பாதுகாப்பு இயக்கம்’ என்ற பெயரில் நதியைக் காக்க இரவு, பகல் பாராது போராடி வருகின்றனர்.
இதுகுறித்து அந்த அமைப்பைச் சேர்ந்த ரங்கநாதன் கூறும்போது, ‘முன்பு மத்வராயபுரம், ஆலாந்துறை பகுதிகளில் கழுதைகள், மாட்டுவண்டிகளைப் பயன்படுத்தி சிறிய அளவில் இந்த மணல் திருட்டு நடந்துவந்தது. நாளடைவில் பெரும் வணிகமாக மாறிவிட்டது. குறிப்பாக, கடந்த சில மாதங்களாக மணல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு லாரி, மினிலாரி, டிராக்டர் போன்றவற்றை பயன்படுத்தி மணல் திருடத் தொடங்கியுள்ளனர்.
ஏதேச்சையாக ஒருநாள் ஆற்றங்கரையோரம் நண்பர்கள் சென்றோம். அப்போது 20 அடிக்கும் மேல் மணல் தோண்டியெடுத்து ஆறு முழுவதும் பெரும் பள்ளங்களாக அதிர்ச்சியளித்தது. உடனே, கடந்த பிப்ரவரி மாதம் மணல் திருட்டுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினோம். மணல் திருட்டைத் தடுக்க வேண்டுமென வலியுறுத்தி வீடு, வீடாக நோட்டீஸ் அச்சிட்டு வழங்கினோம். பெரிய அளவில் பலன் கிடைக்கவில்லை. மணல் திருட்டில் ஈடுபட்ட வாகனங்களை பிடித்து போலீஸில் ஒப்படைத்தும் பெரிய அளவில் நடவடிக்கை இல்லை. மனம் தளராமல், ஒன்றிணைந்து ஆற்றைப் பாதுகாக்க முடிவு செய்தோம்.
எங்களுடன் ஆலாந்துறை இளைஞர்கள், சிறுவாணி விழுதுகள் அமைப்பினரும் சேர்ந்தனர். ஞாயிறுதோறும் இதுகுறித்து கூட்டம் நடத்தி ஆலோசிப்போம். தினமும் இரவு 10 மணியிலிருந்து, காலை 4 மணி வரை சுழற்சி முறையில் ஆற்றங்கரையோரத்தில் காவல் காக்கிறோம். 20 நாட்களில் இரண்டு மணல் திருட்டு வாகனங் களை பிடித்து போலீஸில் ஒப்படைத்திருக்கிறோம். நொய்யலின் கரையோரத்தில் வாழ்வது எங்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம். அது சீரழிந்துவிடாமல் பாதுகாக்கவே கைகோர்த்து இணைந்துள்ளோம்’ என்றார்.
ஆற்று மணல் திருட்டைத் தடுக்க நிரந்தத் தீர்வு காண வேண்டுமென வலியுறுத்தி அமைச்சர், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் வரை இந்த இளைஞர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இவர்களது முயற்சியால் ஆலாந்துறை பகுதியில் மணல் திருட்டு பெருமளவு குறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
அப்பகுதி மக்களிடம் கேட்டபோது, ‘ஒவ்வொரு நாளும் இரவில் மணல் வண்டிகள் சென்றுகொண்டே இருக்கும். இளைஞர்கள் இணைந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவதால் திருட்டு குறைந்திருக்கிறது. போலீஸாரும் இதற்கு ஒத்துழைத்து, திருட்டில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் சில வருடங்களிலேயே நொய்யல் முழுமையாக சிதைக்கப் பட்டுவிடும்’ என்கின்றனர்.
பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு இயற்கை வளத்தை பாதுகாக்கப் போராடும் இளைஞர்களின் பணி நிச்சயம் பாராட்டத்தக்கது.