

மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றுவது என்பது அப்பட்டமான மனித உரிமை மீறல். எனவே இதை தடை செய்யும் சட்டத்தை மத்திய, மாநில அரசுகள் முறையாக அமல்படுத்துவது தொடர்பாக 2 வாரத்தில் பதிலளிக்க மத்திய மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
சென்னையைச் சேர்ந்த சபாய் கர்மாச்சாரி அந்தோலன் என்ற அமைப்பின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுவில், ‘மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்ற தடை விதித்து மத்திய அரசு கடந்த 2013-ம் ஆண்டு சட்டம் இயற்றியுள்ளது. இச்சட்டத்தின் கீழ் மனிதக் கழிவுகளை அகற்றும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்துவோருக்கு தண்டனை விதிக்கவும் வழிவகை உள்ளது.
30 பேர் பலி
ஆனால் சென்னை, கடலூர், மதுரை, திருவள்ளூர், திருச்சி, விழுப்புரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் கடந்த 3 ஆண்டு களில் கழிவுநீர் தொட்டியில் இறங்கி மனிதக்கழிவுகளை அகற்றிய 30 பேர் பலியாகியுள்ளனர். இந்த விவரத்தை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெற்றுள்ளோம். நகர்ப்புறங்களில் மனிதக் கழிவுகளை அகற்றும் பணியில் 363 துப்புரவு தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.
ஆனால் மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் நடைமுறை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டதாக மத்திய, மாநில அரசுகள் காகித அளவில் மட்டும் தெரிவித்து வருகின்றன. அந்த தடைச்சட்டம் இன்னும் முழுமையாக செயல்பாட்டுக்கு வரவில்லை. இனி எங்கும் மனிதக் கழிவுகளை மனிதர்கள் அகற்ற மாட்டார்கள் என மத்திய, மாநில அரசுகள் உறுதியளிக்க வேண்டும்.
அதுபோல மனிதர்கள் கழிவு களை அகற்றுவதற்கு தடைவிதிக்க வேண்டும். சட்டத்தை மீறி மனிதர் களை இப்பணியில் ஈடுபடுத்துவோர் மீது குற்றவியல் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏற்கெனவே உயிரிழந்த கூலித் தொழிலாளர்களுக்கு முழு இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க உத்தரவிட வேண்டும்’என அதில் கோரப்பட்டு இருந்தது.
இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது நீதிபதிகள், ‘‘மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றுவது என்பது அப்பட்டமான மனித உரிமை மீறல். இதுதொடர்பாக ஏற்கெனவே மத்திய அரசு கடந்த 2013-ல் நிறைவேற்றியுள்ள தடைச் சட்டத்தை மத்திய, மாநில அரசுகள் முறையாக அமல்படுத்தி மனிதர்கள் யாரும் இதில் ஈடுபடுத்தப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும் இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகள் 2 வாரத்துக்குள் பதிலளிக்க வேண்டும்’என உத்தரவிட்டு விசாரணையை வரும் ஆகஸ்ட் 21-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.