

உடான் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் அதிக இடங்களில் விமான நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின்போது சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.ஆர். ராமசாமி, ''காரைக்குடி அருகே செட்டிநாடு என்ற இடத்தில் சிறிய விமானங்கள் இறங்கும் வசதி உள்து. எனவே, இங்கு உடான் திட்டத்தின் கீழ் விமான நிலையம் அமைக்கப்படுமா?'' என துணை கேள்வி எழுப்பினார்.
திமுக உறுப்பினர் பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோரும் இது தொடர்பான கேள்வியை எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் விஜயபாஸ்கர், ''உடான் திட்டத்தின் கீழ் விமான நிலையம் அமைக்க தமிழக அரசு 7 இடங்களைப் பரிந்துரைத்தது. அதில் ஓசூர், சேலம், நெய்வேலி ஆகிய 3 இடங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
கயத்தாறு என்ற இடத்தில் 2-வது உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட விமான நிலையம் உள்ளது. இதுபோல உடான் திட்டத்தின்கீழ் அதிகமான இடங்களில் விமான நிலையங்கள் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும்'' என்றார்.