டிஜிபி டி.கே.ராஜேந்திரனுக்கு பணி நீட்டிப்பு வழங்கியதற்கு எதிரான வழக்கில் ஆவணங்கள் தாக்கல்

டிஜிபி டி.கே.ராஜேந்திரனுக்கு பணி நீட்டிப்பு வழங்கியதற்கு எதிரான வழக்கில் ஆவணங்கள் தாக்கல்
Updated on
1 min read

டிஜிபி டி.கே.ராஜேந்திரனுக்கு பணி நீட்டிப்பு வழங்கியதற்கு எதிரான வழக்கில் உயர் நீதிமன்றத்தில் இன்று (திங்கள்கிழமை) லஞ்ச ஒழிப்பு துறை, தலைமைச் செயலர் சார்பில் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.

வருமான வரித்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மட்டும் தங்களுக்கு உத்தரவு நகல் கிடைக்காததால் கூடுதல் அவகாசம் தேவைப்படுவதாகக் கேட்டுக் கொண்டார்.

வழக்கு பின்னணி:

தமிழக டிஜிபியாக பணிபுரிந்த டி.கே.ராஜேந்திரனுக்கு ஓய்வு பெறும் நாளில் மேலும் 2 ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது. இதை ரத்து செய்யக்கோரி மதுரை மாவட்ட ஏஐடியூசி செயலர் கே.கதிரேசன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநலன் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், "டிஜிபியாக இருந்த டி.கே.ராஜேந்திரன் மீது தடை செய்யப்பட்ட குட்கா, பான்பராக் போன்றவற்றை சட்டவிரோதமாக விற்பனை செய்ய பெருந்தொகை லஞ்சம் வாங்கியதாக வருமான வரித்துறை குற்றம்சாட்டியுள்ளது.

இந்த குற்றச்சாட்டு தொடர்பாக நடவடிக்கை கோரி தலைமைச் செயலருக்கு வருமானவரித் துறை கடிதம் அனுப்பியுள்ளது. எனவே டி.கே.ராஜேந்திரனுக்கு பணி நீட்டிப்பு வழங்கி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தும், அவர் மீதான புகார் தொடர்பான விசாரணையை லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் இருந்து சிபிஐக்கு மாற்றவும், சிபிஐ போலீஸார் சிறப்பு படை அமைத்து விசாரிக்கவும் உத்தரவிட வேண்டும்" என கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்யுமாறு தலைமைச் செயலர், வருமான வரித் துறை தலைமை ஆணையர், லஞ்ச ஒழிப்பு இயக்குநர் ஆகியோருக்கு உத்தரவிட்டனர்.

நாளை மறுநாள் மீண்டும் விசாரணை:

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் கே.கே.சசிதரன் ஜி.ஆர்.சுவாமிநாதன் அடங்கு முன் விசராணைக்கு வந்தது. அப்போது லஞ்ச ஒழிப்புத் துறை சார்பிலும் தலைமைச் செயலர் சார்பிலும் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. வருமான வரித்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தங்களுக்கு உத்தரவு நகல் கிடைக்காததால் கூடுதல் அவகாசம் தேவைப்படுவதாகக் கேட்டுக் கொண்டார்.

லஞ்ச குற்றச்சாட்டு தொடர்பாக நடவடிக்கை கோரி தலைமைச் செயலருக்கு கடிதம் அனுப்பியதே வருமான வரித்துறை தானே என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த வருமானவரித் துறை வழக்கறிஞர் உத்தரவு நகல் கிடைத்தவுடன் ஆவணங்களை தாக்கல் செய்கிறோம் என்றார்.

அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் புகழேந்தி வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்குமாறு கோரினார்.

அப்போது குறுக்கிட்ட மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் வழக்கை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்க ஆட்சேபம் தெரிவித்ததோடு மனுதாரருக்கு மிரட்டல் வருவதாகக் கூறினார். அதற்கு நீதிபதிகள் இதை எழுத்துபூர்வமாக தாக்கல் செய்யுமாறு கூறினர். மேலும் விசாரணையை நாளை மறுநாள் ஜூலை 12-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in