

கோயம்பேடு சந்தைக்கு காய்கறிகளின் வரத்து சற்று அதிகரித்துள்ளதால், கத்தரி, அவரை, வெண்டை, முள்ளங்கி உள்ளிட்ட காய்கறிகளின் விலை குறைந்துள்ளன.
முகூர்த்த நாட்கள் மற்றும் பள்ளிகள் திறப்பு உள்ளிட்ட காரணங்களால் கடந்த சில வாரங்களாக கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை அதிகமாக இருந்தது. இந்நிலையில் தற்போது காய்கறிகளின் விலை குறைந்து வருகிறது. கடந்த வாரம் ரூ.45-க்கு விற்கப்பட்ட அவரைக்காயின் விலை நேற்று ரூ.25 ஆகவும், வெண்டைக்காய் ரூ.35-லிருந்து ரூ.25 ஆகவும், முள்ளங்கி ரூ.25-லிருந்து ரூ.18 ஆகவும், பாகற்காய் ரூ.35-லிருந்து ரூ.30 ஆகவும், கேரட் ரூ.60-லிருந்து ரூ.55 ஆகவும், முருங்கைக்காய் ரூ.40-லிருந்து ரூ.35 ஆகவும் விலை குறைந்துள்ளது.
மேலும் கடந்த வாரத்தில் ரூ.60 வரை உயர்ந்த தக்காளியின் விலை நேற்று ரூ.45-க்கு விற்கப்பட்டது.
இது தொடர்பாக கோயம்பேடு மலர், காய், கனி வியாபாரிகள் நலச் சங்க துணைத் தலைவர் பி.சுகுமார் கூறியதாவது: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கோடை மழை பெய்துள்ளது. அதனால் காய்கறி வரத்து சற்று அதிகரித்துள்ளது.
மேலும் முகூர்த்த நாட்களும் குறைந்துள்ளதால் பல காய்கறிகளின் விலை குறைந்துள்ளது. தக்காளியை பொறுத்தவரை, நாம் ஆந்திரம் மற்றும் கர்நாடக மாநிலங்களையே நம்பியிருக்கிறோம். தற்போது வட மாநிலங்களில் இருந்து, கர்நாடகம் மற்றும் ஆந்திர மாநிலங்களுக்கு வந்து தக்காளி கொள்முதல் செய்யப்படுகிறது. அதன் காரணமாக கோயம்பேடு சந்தைக்கு வரத்து குறைந்து, தக்காளி விலை உயர்ந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.