

வாழை தோட்டங்களில் காஞ்சாரை நோய் தாக்குதல் தொடங்கியுள்ளதால் தேனி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தேனி மாவட்டத்தில் தேனி, கம்பம், உத்தமபாளையம், போடி, சின்னமனு£ர், பெரியகுளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஒரு லட்சம் ஏக்கருக்கு மேல் வாழை சாகுபடி நடைபெற்று வருகிறது. இங்கு விளையும் வாழை வெளிமாநில, வெளிநாடுகளுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தேனி புறநகர் பகுதிகளான அல்லிநகரம், கொடுவிலார்பட்டி, வயல்பட்டி பகுதியில் நுற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த வாழையில் இலைக்கருகல் என்று அழைக்கப்படும். காஞ்சாரை நோய் தாக்குதல் தொடங்கியுள்ளது. இதனால் பல லட்சம் இழப்பு ஏற்படும் என்று வாழை சாகுபடி செய்த விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து ‘தி இந்து’விடம் அல்லிநகரம் விவசாயிகள் ராஜா, சதீஸ் ஆகியோர் கூறியதாவது: இந்தநிலை யில் தற்போது காஞ்சாரை நோய்தாக்குதல் தொடங்கியுள்ளது. இதனால் மரத்தில் பச்சை இலைகள் இல்லாமல் போகும் நிலை உருவாகியுள்ளது. மேலும் காய்கள் பிஞ்சிலேயே பழுத்து விடுவதோடு, அதன் தரமும் குறைந்து விடும். இதனால் விவசாயிகளுக்கு பல லட்சம் நஷ்டம் ஏற்படும் என்பதால் கவலை அடைந்துள்ளனர் என்றனர். இது தொடர்பாக தோட்டக்கலைதுறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது: காஞ்சாரை நோய் காற்றிலேயே பரவக்கூடிய ஒரு வித பூஞ்சானத்தினால் ஏற்படுகிறது. இந்த நோய் சாரல் மழை பெய்யும் காலங்கள் மற்றும் பனிக்காலத்திலும் பரவுகிறது. வெப்பநிலை 20 டிகிரி செல்ஸ்சியஸ் இருந்து 25 டிகிரி செல்ஸ்சியஸ் ஆகவும். காற்றின் ஈரப்பதம் அதிகரிக்கும் போது நோயின் தாக்கம் தீவிரமடைகிறது. இதனை கட்டுப்படுத்த வாழை தோட்டங்களில் பரிந்துரை செய்யப்பட்ட தழைச்சத்துக்கள் மற்றும் பொட்டாஷ் உரம் கூடுதலாக இட வேண்டும். களைகள் வளர விடாமல் நோய் தாக்குதலுக்கு ஆளான இலைகளை அறுத்து தீ வைத்து அழித்து விட வேண்டும். இவ்வாறு செய்தால் நோய் தாக்குதல் பெரும் அளவில் குறைந்து விடும் என்றார்.