

ரூ.8 கோடி செலவில் 28 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைப் பது தொடர்பாக சாம்சங் நிறுவனத்துடன் சென்னை மாநகராட்சி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
இது தொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்குவது தொடர்பாக சாம்சங் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், நக ராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் ஆகியோர் முன்னிலையில் இதற்கான ஒப்பந்தம் தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தில், மாநகராட்சி சார்பில் ஆணையர் தா.கார்த்திகேயனும், சாம்சங் நிறுவனம் சார்பில் அதன் முதுநிலை துணைத் தலைவர் சாங்ஜாய்லீயும் கையெழுத்திட்டனர்.
சென்னை மாநகராட்சியில் 32 மேல்நிலைப் பள்ளிகள், 38 உயர்நிலைப் பள்ளிகள், 92 நடுநிலைப் பள்ளிகள், 119 தொடக்கப் பள்ளிகள் என மொத்தம் 281 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. கேட்பதை விட பார்க்கும்போது கருத்து மனதில் நீடித்து நிலைக்கும் என்பதால், மாணவர்களின் கல்விக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் 70 உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் 14 நடுநிலைப் பள்ளிகளில் மாநகராட்சி மூலம் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது.
சாம்சங் நிறுவனத்தின் மூலம் 20 மேல்நிலைப் பள்ளிகள் 8 நடுநிலைப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் தொடங்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஓவ்வொரு பள்ளியிலும் ஒரு வகுப்பறையில் ஒரு எல்எப்டி ஸ்மார்ட் ஸ்கிரீன், 40 கணிப்பலகைகள், பிரிண்டர், செர்வர், யுபிஎஸ் மற்றும் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பாடத்திட்டத்துக்கான மென்பொருள் வசதிகள் ஏற்படுத்தப்படும். இதன் மூலம் 29 ஆயிரத்து 596 மாணவ, மாணவிகள் பயன்பெறுவர். இந்த திட்டத்துக்கு ரூ.8 கோடி செலவாகும். இந்தத் திட்டத்தால் மாநகராட்சி பள்ளிகளின் தரம் மேலும் உயரும்.
புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் ஹர்மந்தர் சிங், தொழில்துறை முதன்மைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, சென்னை மாநகராட்சி துணை ஆணையாளர் (கல்வி) ஆர்.லலிதா, சாம்சங் நிறுவன துணைத் தலைவர் தீபக் பரத்வாஜ், முன்னாள் கிரிக்கெட் வீரர் காந்த் உள்ளிட்டோர் கலந்துகொண்ட னர்.