Published : 05 Jul 2017 12:29 PM
Last Updated : 05 Jul 2017 12:29 PM

மதுரை, கோவை, தஞ்சை, நெல்லையில் ரூ.60 கோடி மதிப்பில் தயாராகும் புற்றுநோய் சிகிச்சை மையம்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

மதுரை, கோயம்புத்தூர், தஞ்சாவூர் மற்றும் திருநெல்வேலியில் நான்கு மண்டல புற்றுநோய் மையங்கள் 60 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்பட்டு பணிகள் முடியும் தருவாயில் உள்ளதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று விதி எண் 110-ன் கீழ் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை சார்பாக முதல்வர் பழனிசாமி வெளியிட்ட அறிவிப்புகள்:

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காட்டிய வழியில் செயல்படும் இந்த அரசின் சார்பாக, மக்கள் நல்வாழ்வுத் துறையால் செயல்படுத்தப்பட இருக்கும் சில புதிய திட்டங்களை இம்மாமன்றத்தில் வெளியிடுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

1. புற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உயர் சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதற்காக, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சென்னை அடையார் புற்றுநோய் மையத்தை 120 கோடி ரூபாய் செலவில் புற்றுநோய்க்கான உயர் சிகிச்சை மையமாக அறிவித்தார். இதற்கான கட்டடப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இது மட்டுமின்றி, மதுரை, கோயம்புத்தூர், தஞ்சாவூர் மற்றும் திருநெல்வேலியில் நான்கு மண்டல புற்றுநோய் மையங்கள் 60 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்பட்டு பணிகள் முடியும் தருவாயில் உள்ளன.

இந்த ஆண்டு, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, சென்னை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை, சென்னை, அரசு இராஜாஜி மருத்துவமனை, மதுரை மற்றும் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகிய நான்கு மருத்துவமனைகளில் 64 கோடி ரூபாய் செலவில் புற்றுநோயாளிகளுக்கு நவீன சிகிச்சை அளிக்கும் பொருட்டு, நவீன லீனியர் ஆக்சிலேட்டர் கருவி நிறுவப்படும்.

2. தாய்சேய் நலனைப் பேணிக் காக்க, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 6 ஆண்டுகளாக பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வந்தார். அந்த வகையில், மயிலாடுதுறை, திண்டுக்கல், கிருஷ்ணகிரி மற்றும் திருவள்ளூர் மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் தலா 20 கோடி ரூபாய் வீதம் மொத்தம் 80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நான்கு மேன்மைமிகு மையங்கள் அமைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதன் மூலம் தாய் மற்றும் சேய் இறப்பு பெரிய அளவில் குறைக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

3. தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர சிகிச்சை முன்னெடுப்பு சேவை, தேசிய நலவாழ்வு குழும நிதி மற்றும் சாலை பாதுகாப்பு நிதியிலிருந்து திருப்பூர், இராமநாதபுரம், பெரம்பலூர், செய்யாறு, உளுந்தூர்பேட்டை, இராஜபாளையம், திருத்தணி, ஆத்தூர் மற்றும் காரைக்குடி அரசு மருத்துவமனைகளில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை மையங்கள் 57 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும். இது தவிர, 10 தாலுக்கா மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் அவசரகால நிலைப்படுத்தும் மையம் ஏற்படுத்தப்படும். 5 தேசிய நெடுஞ்சாலைகளில் அனைத்து முதலுதவி வசதிகளைக் கொண்ட நடமாடும் அவசர சிகிச்சை ஊர்தி சேவை தொடங்கப்படும்.

4. தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம், தற்போது 17 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் 18 எம்.ஆர்.ஐ. ஸ்கேன் கருவிகளை நிறுவி பராமரித்து வருகிறது. நடப்பாண்டில், காஞ்சிபுரம், திண்டுக்கல், விருதுநகர், இராமநாதபுரம், நாகப்பட்டினம், திருவள்ளூர், நாமக்கல், திருப்பூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய 9 மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் 45 கோடி ரூபாய் செலவில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் கருவி நிறுவப்படும்.

5. தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம், அரசு மருத்துவ நிலையங்களுக்கு தேவையான மருந்துகளை கொள்முதல் செய்து மருந்து கிடங்குகளில் சேமித்து வைத்து விநியோகம் செய்து வருகிறது. போதிய இடவசதி இல்லாத, கடலூர், புதுக்கோட்டை, திருவாரூர், வேலூர், விருதுநகர், கோயம்புத்தூர், காஞ்சிபுரம், மதுரை, நாகர்கோவில், தஞ்சாவூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், திருவண்ணாமலை, திருச்சிராப்பள்ளி, நாமக்கல், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், திருப்பூர், சேலம், விழுப்புரம் மற்றும் நீலகிரி ஆகிய 22 மாவட்டங்களில் உள்ள மருந்து கிடங்குகளுக்கு கூடுதல் கட்டடங்கள் 33 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும்.

6. அரசு மருத்துவனைகளில் நடப்பாண்டில் 7 சி.டி. ஸ்கேன் கருவிகள் மணப்பாறை, மேட்டூர் அணை, மன்னார்குடி, பென்னாகரம், ஓசூர், பரமக்குடி, மற்றும் குளித்தலை ஆகிய 7 அரசு மருத்துவமனைகளில் 12 கோடியே 25 லட்சம் ரூபாய் செலவில் நிறுவப்படும்.

7. தாய் சேய் நலப் பணிகளை திறம்பட செயல்படுத்தி வரும் 9,994 சுகாதார செவிலியர்களுக்காக 9 கோடியே 99 லட்சம் ரூபாய் செலவில் கைக் கணினிகள் வழங்கப்படும்.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x