காசிமேடு மீன்பிடி துறைமுகத்திலிருந்து புறப்பட்ட 15 படகுகள், 135 மீனவர்களை ஆந்திர மீனவர்கள் சிறைபிடித்தனர்

காசிமேடு மீன்பிடி துறைமுகத்திலிருந்து புறப்பட்ட 15 படகுகள், 135 மீனவர்களை ஆந்திர மீனவர்கள் சிறைபிடித்தனர்
Updated on
1 min read

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தி லிருந்து புறப்பட்ட 15 படகுகள் மற்றும் அதில் சென்ற 135 மீனவர்களை ஆந்திர மீனவர்கள் நேற்று சிறைபிடித்துச் சென்றுள் ளனர்.

காசிமேடு துறைமுகத்திலிருந்து 700-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் மீனவர்கள் கடலில் மீன்பிடித்து வருகின்றனர். ஆந்திர கடலோரப் பகுதியில் அதிக அளவில் மீன்கள் இருப்பதால், காசிமேடு மீனவர்கள் அப்பகுதியில் மீன் பிடிக்கச் செல்வது வழக்கம். அவ்வாறு மீன் பிடிக்கும்போது சில நேரங்களில், ஆந்திர மீனவர்களின் வலைகள் சேதமடைவதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, வலை சேதத்துக்கான இழப்பீட்டை வழங்குமாறு ஆந்திர மீனவர்கள், காசிமேடு மீனவர்களை சிறைபிடித்து பணம் வசூலித்து வருவதாக தெரிகிறது.

ஆந்திர கடலோப் பகுதியில் நேற்று காசிமேடு மீனவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, ஆந்திர மீனவர்களின் வலைகள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, காசிமேடு மீனவர்கள் 135 பேர் மற்றும் அவர்களின் 15 படகுகளை சிறைபிடித்துக்கொண்ட ஆந்திர மீனவர்கள், இழப்பீட்டுத்தொகை வழங்க வலியுறுத்தி வருகின்றனர். படகுகள் அனைத்தும் ஆந்திர மாநில கடலோரப் பகுதியான மண்ணூர் பூண்டி, பொன்னம்பாளையம் ஆகிய பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக மீன்வளத் துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, இவ்விவகாரம் தொடர்பாக மீனவ சங்கங்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களுக் குள்ளாகவே பிரச்சினையை தீர்த்துக்கொள்வதாக சிறை பிடிக் கப்பட்ட படகுகளின் உரிமை யாளர்கள் தெரிவித்துள்ளனர். அவர்கள் இன்று (சனிக்கிழமை) ஆந்திரா புறப்பட்டுச் செல்கின்றனர். அவர்களிடையே சுமூகத் தீர்வு ஏற்படும் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.

இது தொடர்பாக அகில இந்திய மீனவர் சங்க செயல் தலைவர் நாஞ்சில் பி.ரவி கூறியதாவது:

ஆந்திராவில் மீனவர் என்ற போர்வையில் உள்ள சில ரவுடிகள், தமிழக மீனவர்களை சிறைபிடித்து, பணம் வசூலித்து வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது. முன்பு ஒரு படகுக்கு ரூ.5 ஆயிரம் வரை கேட்டவர்கள், இப்போது ரூ.50 ஆயிரம் வரை கேட்கின்றனர். ஏற்கெனவே, வார்தா புயல், கடலில் கச்சா எண்ணெய் கசிவு, மீன்பிடி தடைக்காலம், காசிமேட்டில் புதிய மீன் ஏலக் கூடம் திறப்புக்கு எதிர்ப்பு என கடந்த 6 மாதமாக மீன்பிடி தொழில் மந்தமாகவே உள்ளது. இந்நிலையில், இதுபோன்று ஆந்திர மீனவர்கள் சிறைபிடிப்பதால், சம்பாதித்த பணத்தை மீனவர்கள் இழக்க வேண்டியுள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர் தலையிட்டு, ஆந்திர முதல்வரிடம் பேசி, நிரந்தர தீர்வு காணவேண்டும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in