

ஈரோட்டில் தான் சேமித்து வைத்துள்ள 10 ரூபாய் நாண யங்களை வங்கிகள் வாங்க மறுப்பதாக, நாணயக்குவிய லுடன் புகார் அளித்த குடும்பத்தினரால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில், கனிராவுத்தர் குளத்தைச் சேர்ந்த அப்துல்சலாம் தனது மனைவி மற்றும் தாயாருடன் மனு அளிக்க வந்திருந்தார். ஆட்சியரிடம் அளித்த மனு குறித்து அப்துல் சலாம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நான் நடத்தி வரும் டீ கடையில் சேர்கின்ற 10 ரூபாய் நாணயங்களை எனது தாயார் ரஜீமா பீவி சேகரித்து வைத்துள்ளார். தற்போது அவரிடம் ரூ.8 ஆயிரம் மதிப்புள்ள 10 ரூபாய் நாணயங்கள் உள்ளன. உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள அவருக்கு சிகிச்சை அளிக்க தற்போது பணம் தேவைப்படுகிறது.
எனவே, அவர் சேகரித்த 10 ரூபாய் நாணயங்களை வங்கியில் கொடுத்து மாற்ற முயன்றபோது, அவர்கள் வாங்க மறுக்கின்றனர். இவ்வளவு நாணயங்களைப் பெற முடியாது என்றும், இவ்வளவு நாணயம் எப்படிக் கிடைத்தது என்பதற்கு ஆவணம் தேவை என்றும் கூறுகின்றனர்.
ஏற்கெனவே இருமுறை இதுகுறித்து ஆட்சியரிடம் புகார் அளித்தேன். இருப்பினும் வங்கி நிர்வாகத்தினர் நாணயங் களைப் பெற்றுக்கொள்ள மறுக்கின்றனர். எனவே மீண்டும் ஆட்சியரிடம் மனு அளிக்க வந்துள்ளோம், என்று தெரிவித்தார்.
தனது தாயார் சேகரித்து வைத்துள்ள பத்து ரூபாய் நாணய குவியலையும் அவர் எடுத்து வந்து ஆட்சியரிடம் மனு அளித்தார். சம்பந்தப்பட்ட வங்கிக்கு உரிய உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும், அவர்கள் நாணயத்தைப் பெற்றுக் கொள்வார்கள் என்றும் ஆட்சியர் எஸ்.பிரபாகர் உறுதி கொடுத்து அனுப்பி வைத்தார்.