Published : 04 Dec 2013 02:45 PM
Last Updated : 04 Dec 2013 02:45 PM

தாழ்த்தப்பட்டோர் மீது தடுப்புக் காவல் சட்டத்தை ஏவாதீர்: திருமாவளவன்

தாழ்த்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் மீது தடுப்புக் காவல் சட்டங்களை ஏவும் போக்கை நிறுத்திக் கொள்ளவேண்டும் என தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாட்டில் தனது சாதியினர் மீதுதான் அதிக அளவில் தடுப்புக் காவல் சட்டங்கள் ஏவப்படுவதாக அண்மையில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். அதற்குத் தமிழக அரசின் சார்பில் மறுப்பெதுவும் தெரிவிக்கப்படாத நிலையில், அந்தத் தவறான செய்தியை உண்மை என்று பொதுமக்கள் நம்புகிற நிலை ஏற்பட்டிருக்கிறது.

தடுப்புக் காவல் சட்டங்கள் என்பவை மக்களுக்கு எதிரான கறுப்புச் சட்டங்கள். அவற்றை முற்றாக ஒழிக்கவேண்டும் என்பதே விடுதலைச் சிறுத்தைகளின் நிலைபாடு.

அந்தக் கோரிக்கையை முன்வைத்து மனித உரிமை அமைப்புகளோடு இணைந்து பல்வேறு போராட்டங்களை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நடத்தியிருக்கிறது. பொடா சட்டத்துக்கு எதிராக இடதுசாரிக் கட்சிகளை இணைத்துப் போராடியிருக்கிறது.

தமிழ்நாட்டில் 523 பேர் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டிருப்பதாக என்.சி.ஆர்.பி.யின் புள்ளி விவரம் கூறுகிறது. 2013 ஆம் ஆண்டு முடிய இன்னும் ஒரு மாதமே இருக்கும் நிலையில், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்திருக்குமேயொழிய குறைந்திருக்க வாய்ப்பில்லை.

சாதாரண சட்டங்களின்கீழ் கைது செய்யப்பட முடியாத கொடுங்குற்றவாளிகள் மீது தான் இந்தச் சட்டங்கள் பாய்ந்திருக்கும் என நினைத்தால் நாம் ஏமாந்துதான் போவோம். தடுப்புக் காவல் சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்ட 523 பேரில் 202 பேர் தாழ்த்தப்பட்டவர்கள், 36 பேர் பழங்குடியினர், 77 பேர் முஸ்லிம்கள், 43 பேர் கிறித்தவர்கள்.

மொத்த எண்ணிக்கையான 523 பேரில் 358 பேர் இந்த நான்கு சமூகங்களைச் சேர்ந்தவர்கள். அதாவது 2012 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் தடுப்புக் காவல் சட்டங்களின்கீழ் கைதானவர்களில் 68 சதவீத பேர் மேற்சொன்ன நான்கு சமூகங்களைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள்.

இந்தச் சட்டங்களின் கீழ் சிறைப்படுத்தப்பட்டிருப்பவர்கள் உண்மையிலேயே குற்றமிழைத்திருந்தால் பிற சட்டங்களின்கீழ் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்பதைத் தமிழக அரசின் கவனத்துக்குச் சுட்டிக்காட்டுகிறேன்.

தாழ்த்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் மீது தடுப்புக் காவல் சட்டங்களை ஏவும் போக்கை நிறுத்திக் கொள்ளவேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x