Published : 28 Mar 2017 12:44 PM
Last Updated : 28 Mar 2017 12:44 PM

பஸ் நிலையம் இல்லாத திருப்பரங்குன்றம்: சாலையில் கொளுத்தும் வெயிலில் வாடும் மக்கள்

தமிழகத்தில் முக்கிய ஆன்மிகத் தலங்களில் ஒன்றான திருப்பரங்குன்றத்தில் பஸ் நிலையம் இல்லாததால் வெளிமாநிலங்கள், தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து வரும் பக்தர்கள், பொது மக்கள் கொளுத்தும் வெயிலில் சாலையில் பஸ்ஸுக்காக காத் திருக்கும் அவலம் ஏற் பட்டுள்ளது.

அறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றத்தில் மட்டுமே முருகனின் வேலுக்கு அபிஷேகம் நடக்கிறது. வைகாசி விசாகம், ஆடி கிருத்திகை, புரட்டாசி வேல் திருவிழா, கந்த சஷ்டி, திருக்கார்த்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற விழாக்கள் இங்கு விமரிசையாக நடக்கும். இந்த விழாவைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளும்போது, திருப்பரங்குன்றமே ஸ்தம்பிக்கும். சாதாரண நாட் களில் மதுரைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், திருப்பரங்குன்றம் முருகனை தரிசிக்காமல் செல்வதில்லை.

ஐந்து தலங்களில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கும் முருகன், இங்கு தெய்வானையை மணம் முடித்த கோலத்தில் அமர்ந்தபடி காட்சி தருவது சிறப்பாகும். இப்படி பல்வேறு சிறப்புகளைக் கொண்ட திருப்பரங்குன்றம் கோயிலுக்கு, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். தென் மாவட்டங்களில் பழநி, மீனாட்சி கோயிலுக்கு அடுத்து திருப்ப ரங்குன்றம் கோயிலுக்கு அதிகளவு பக்தர்கள் வருகின்றனர்.

ஆனால், இங்கு பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் போதுமான அளவில் இல்லை. முக்கியமாக, பஸ் நிலையம் இல்லாததால் சாலை களே பஸ் நிறுத்தங்களாகச் செயல்படுகின்றன. பயணிகள், பக்தர்கள், முதியவர்கள் சுட் டெரிக்கும் வெயிலிலும், மழை யிலும் திறந்த வெளியில் சாலையில் ஒதுங்கக் கூட இடமில்லாமல் பஸ்ஸுக்காக காத்திருக்கின்றனர்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வரை திருப்பரங்குன்றத்தில் மார்க்கெட் அருகே பஸ் நிலையம் முழுமையாகச் செயல்பட்டது. அங்கு கழிப்பிடம், தங்குமிடம், ஓய்வெடுக்கும் இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்தன. இரண்டு ரயில்வே மேம்பாலங்கள் அடுத் தடுத்து திருப்பரங்குன்றத்தில் கட்டப்பட்டதால் பஸ் நிலையம் தற்போது செயல்படவில்லை. திருப்பரங்குன்றத்துக்குள் பஸ்கள், வந்து செல்லுமிடம் மிகவும் நெருக்கடியாகவும், ஆக்கிரமிப்புகளும் இருப்பதால் ஊருக்குள் வருவதை தவிர்த்து பாலத்திலேயே சென்று திரும்பி விடுகின்றன.

தற்போது கோடை தொடங்கி விட்ட நிலையில், மதுரையில் வெயில் கொளுத்துகிறது. அதனால், திருப்பரங்குன்றத்தில் பஸ்ஸுக்காக காத்திருக்கும் பய ணிகள், சாலையில் நிற்காமல் ஆங்காங்கே கடைகள் முன் ஒதுங்கும் அவலம் நிலவுகிறது.

வியாபாரிகள், வியாபாரம் பாதிக்கும் என்பதால் பயணிகளை நிற்கவிடாமல் தடுப்பதால் கொளுத்தும் வெயிலில் குழந்தைகளுடன் பெண்கள் பஸ்ஸுக்காக காத்திருக்கும் பரிதாபம் ஏற் பட்டுள்ளது.

இதுகுறித்து பக்தர்கள் கூறியதாவது:

முக்கிய ஆன்மிக தலங்களில் சுற்றுலா பயணிகள், பக்தர்கள் வாகனங்களை நிறுத்துவதற்காக சுற்றுலா பஸ் நிலையம், மற்ற அரசு பஸ்கள் வந்து செல்ல மற்றொரு பஸ் நிலையமும் செயல்படுகின்றன. அங்கு தங்குமிடம், நவீன கழிப்பிட அறைகள் என சகல வசதிகளும் இருக்கின்றன. ஆனால், திருப் பரங்குன்றத்தில் பஸ்நிலையம் இல்லாததால் ஒருமுறை வருவோர் மறுமுறை வராததால் பக்தர்கள் வருகை குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதனால், மாவட்ட நிர்வாகம் திருப்பரங்குன்றத்தில் நிரந்தர பஸ் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவி த்தனர்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, தற்போது திருப்பரங்குன்றத்தில் புதிய பஸ் நிலையம் அமைக்கும் திட்டம் இல்லை. விரைவில் அதற்கான ஆலோசனை மேற் கொள்ளப்பட்டு புதிய பஸ் நிலை யம் அமைக்கப்படும் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x