

வறட்சி நிவாரணப் பணிகள் மற்றும் நிவாரண உதவிகளுக்காக மத்திய அரசின் நிதி வரும் வரை காத்திருக்காமல் நிவாரண உதவிகள் மற்றும் பணிகளை தமிழக அரசு உடனடியாக தொடங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
பயிர்க் கடன்களை திரும்பச் செலுத்தும் காலத்தை மட்டும் நீட்டிப்பது பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயனளிக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு அமைச்சர்கள் குழு அளித்த அறிக்கையை ஏற்று அனைத்து மாவட்டங்களும் வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்கப்படும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியிருக்கிறார். தமிழக அரசின் இந்த முடிவு வரவேற்கத்தக்கது என்ற போதிலும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிவாரணம் போதுமானதாக இல்லை.
தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க வேண்டும் என பாமக கடந்த மூன்று மாதங்களாக வலியுறுத்தி வருகிறது. இதற்குக் காரணம் இதைக் காரணம் காட்டி விவசாயிகளின் அனைத்து வகையான பயிர்க் கடன்களும் தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்பதுதான். ஆனால், முதல்வர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் நிலவரி மட்டும் தள்ளுபடி செய்யப்படும் என்றும், இந்த ஆண்டில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட ரூ.3028 கோடி பயிர்க் கடன் மட்டும் குறுகியக் கால கடனில் இருந்து மத்திய காலக் கடனாக மாற்றப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் விவசாயிகளுக்கு எந்த பயனும் கிடைக்காது. நிலவரி என்பது மிகக் குறைந்த தொகை மட்டுமே. பயிர்க் கடன் தள்ளுபடி என்பது தான் விவசாயிகளின் முக்கியக் கோரிக்கையாகும். அதை நிறைவேற்றாமல் பயிர்க் கடன்களை திரும்பச் செலுத்தும் காலத்தை மட்டும் நீட்டிப்பது பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயனளிக்காது.
காவிரி பாசன மாவட்டங்கள் உட்பட தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகள் கடந்த 5 ஆண்டுகளாக தொடர் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அவர்கள் கூட்டுறவு மற்றும் பொதுத்துறை வங்கிகளில் வாங்கிய கடன் மலை போல குவிந்துள்ளது. கடந்த மே மாதம் ரூ.5780 கோடி பயிர்க் கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்த போதிலும், அதனால் அதிமுக விவசாயிகள் மட்டும் பயனடைந்தார்களே தவிர, உண்மையாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயன் கிடைக்கவில்லை.
அதுமட்டுமின்றி, பல ஆண்டு பயிர்க் கடன்கள் தேங்கியுள்ள நிலையில், நடப்பாண்டிற்கான பயிர்க் கடனை மட்டும் மத்தியக் காலக் கடனாக மாற்றுவது ஏமாற்று வேலை. எனவே, கூட்டுறவு மற்றும் பொதுத்துறை வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய அனைத்து வகை பயிர்க்கடன்களையும் தள்ளுபடி செய்யவேண்டும்.
அதேபோல், வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கான இழப்பீட்டுத் தொகையும், நிபந்தனைகளும் காலத்திற்கு ஏற்றவையாக இல்லை. நெல்லுக்கு ரூ.5465, நீண்ட கால பயிர்களுக்கு ரூ.7287, மானாவாரி பயிர்களுக்கு ரூ.3000 என்ற இழப்பீடு போதுமானது அல்ல. 33 விழுக்காட்டுக்கும் கூடுதலாக மகசூல் இழப்பு ஏற்பட்டிருந்தால் மட்டுமே இழப்பீடு வழங்கப்படும் என்ற நிபந்தனை விவசாயிகளை ஏமாற்றவே பயன்படும்.
எனவே, நிபந்தனையின்றி, பாதிக்கப்பட்ட பயிர்களில் நெல்லுக்கு ஏக்கருக்கு ரூ.25,000, நீண்டகால பணப்பயிர்களுக்கு சந்தை மதிப்புக்கு ஏற்றவகையில் ஏக்கருக்கு ரூ.1 லட்சம் வரையிலும் இழப்பீடு வழங்க வேண்டும். நடப்பாண்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள புதிய பயிர்க் காப்பீட்டுத் திட்டம் விவசாயிகளுக்கு சற்று கூடுதல் பயனளிக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
ஆனால், பாதிப்பை கணக்கிடும் முறையில் விவசாயிகள் ஏமாற்றப்படுகிறார்கள். எனவே, கிராம அளவிலோ, ஒன்றிய அளவிலோ பயிர் அறுவடை பரிசோதனை செய்வதற்கு பதிலாக ஒவ்வொரு விவசாயிக்கும் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கணக்கிட்டு, அதற்கேற்றவாறு இழப்பீடு வழங்கும்படி பயிர்க் காப்பீட்டு நிறுவனங்களுக்கு மத்திய அரசு மூலம் தமிழக அரசு கடுமையான அழுத்தம் கொடுக்க வேண்டும்.
தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்படி வேலை வழங்கும் நாட்களின் எண்ணிக்கை 150 ஆக உயர்த்தப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. அனைத்துக் குடும்பங்களுக்கு முழுமையான அளவில் இந்த வேலைவாய்ப்பு வழங்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்யவேண்டும்.
தமிழகத்தில் கடந்த இரு மாதங்களில் 190 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டும், அதிர்ச்சியிலும் உயிரிழந்துள்ள நிலையில், 17 பேர் மட்டுமே தற்கொலை செய்து கொண்டதாக முதல்வர் கூறுவது கண்டிக்கத்தக்கது. அவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் மட்டும் இழப்பீடு வழங்கப்படும் என்பதும் ஏற்கத்கக்கது அல்ல. உயிரிழந்த 190 விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.
வறட்சி நிவாரணப் பணிகள் மற்றும் நிவாரண உதவிகளுக்காக மத்திய அரசின் நிதி வரும் வரை காத்திருக்காமல் நிவாரண உதவிகள் மற்றும் பணிகளை தமிழக அரசு உடனடியாக தொடங்க வேண்டும்.
முதல்வன் இந்த அறிவிப்பு மட்டுமே விவசாயிகள் தற்கொலைகளையும், அதிர்ச்சி சாவுகளையும் தடுத்து விடாது. அரசின் உதவிகளும், இழப்பீடும் உடனடியாக வழங்கப்பட்டால் தான் தற்கொலை மற்றும் அதிர்ச்சி சாவுகளில் இருந்து விவசாயிகளை காப்பாற்ற முடியும். இதை உணர்ந்து உணவு தரும் கடவுள்களான விவசாயிகளை காப்பாற்றுவதற்கான உதவிகளை அரசு உடனடியாக வழங்க வேண்டும்'' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.