Published : 10 Apr 2017 10:17 AM
Last Updated : 10 Apr 2017 10:17 AM

திட்டமிட்டு ஓராண்டு படித்தால் வெற்றி உறுதி: ‘உனக்குள் ஓர் ஐஏஎஸ்’ வழிகாட்டி நிகழ்ச்சியில் அரியலூர் ஆட்சியர் எ.சரவணவேல்ராஜ் அறிவுரை

எவ்விதத்திலும் கவனத்தைச் சிதறவிடாமல் ஓராண்டு காலம் தீவிரமாகப் படித்தால் சிவில் சர்வீசஸ் போட்டித் தேர்வில் வெற்றி உறுதி என்று அரியலூர் மாவட்ட ஆட்சியர் எ.சரவணவேல்ராஜ் தெரிவித்தார்.

‘தி இந்து’ தமிழ் நாளிதழ், ‘கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி’ ஆகியன இணைந்து நடத்திவரும் ‘உனக்குள் ஓர் ஐஏஎஸ்’ என்ற நிகழ்ச்சி தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில் நடைபெற்று வருகிறது. அதன்படி, திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்து ஆட்சியர் எ.சரவணவேல்ராஜ் பேசியது:

யுபிஎஸ்சி உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு கட்டாயம் ஓராண்டா வது தொடர்ந்து படிக்க வேண்டும். எவ்விதத்திலும் கவனத்தை சிதற விடாமல் போட்டித் தேர்வுக்கென திட்டமிட்டு ஓராண்டுக்கு தொடர்ந்து படித்தால் வெற்றி பெறலாம். முதல் நிலைத் தேர்வு மற்றும் பிரதான தேர்வு ஆகியவற்றுக்கு தனித் தனியே நேரத்தை செலவழித்து படிக்க வேண்டாம். இரு தேர்வுகளுக்கும் ஒரே நேரத்திலேயே தயாராவதே சிறந்தது. அதேபோல, போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும்போது குறிப்பு எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. குறிப்பு எடுப்பதால் காலம் விரயமாகும்.

முதல் நிலைத் தேர்வு உட்பட போட்டித் தேர்வுக்கு அடிப்படையில் இருந்து தயாராக வேண்டியது அவசியம். இதற்கு, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் தயாரித்து வழங்கும் 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான புத்தகங்களை வாங்கிப் படிக்க வேண்டும். மாநில பாடத் திட்டத்துடன், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் புத்தகங்களை ஒப்பிட்டு படிக்கும்போது பாடங்களில் அதிக தெளிவு கிடைக்கும்.

பாடத்தில் போதிய அறிவு இருந்தாலும், கேள்விகளை நன்கு படித்துப் பார்த்து அதன்பிறகே பதில் அளிக்க வேண்டும். பள்ளி, கல்லூரி தேர்வுகளைப் போல மனப்பாடம் செய்து போட்டித் தேர்வுகளுக்கு தயாராகக் கூடாது. பாடத்தை நன்கு உணர்ந்து, அதில் தெளிவு பெற்று சொந்த நடையில் எழுதினால் அதிக மதிப்பெண் பெற முடியும் என்றார்.

நிகழ்ச்சியில் திருச்சி மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். மாணவ, மாணவிகளுக்கு மாதிரி வினாத்தாள், பாடத்திட்ட கையேடு, பேனா உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்பட்டன. மதிய உணவும் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சி குறித்து மாணவ, மாணவிகள் கூறியது:

கவிமணி:

நான் முதல்கட்ட தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. அதற்கு காரணம் 4 பத்திகள் அளித்துவிட்டு, அதில் எது சிறந்தது என கேட்டிருந்தனர். அதற்கு மிகக்குறைந்த நேரத்தில் என்னால் உரிய பதிலை விரைந்து எழுத முடியவில்லை. இங்கு பேசிய அரியலூர் மாவட்ட ஆட்சியர், ஆங்கில இலக்கணத்தை முழுமையாக அறிந்துகொள்ள வேண்டும். நான்கு பத்திகளும் ஒரே மாதிரியாக இருந்தாலும், அதில் நுட்பமான வார்த்தைகளை இனம் கண்டால் மட்டுமே சரியான விடையளிக்க முடியும் என தெரிவித்தது மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

ஆர்.கீர்த்தனா:

நான் பி.காம் இறுதியாண்டு பயின்று வருகிறேன். ஐஏஎஸ் படிக்க ஆசையாக உள்ளது. வட்டார மொழியில் எதை எடுக்கலாம், எப்படி படிக்கலாம், எவ்வளவு நேரம் படிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு சந்தேகங்களுக்கு இந்த நிகழ்ச்சி மிகப்பெரிய விடையை எனக்கு அளித்துள்ளது.

பவித்ரா:

நான் பிஎஸ்சி (வேளாண்மை) 2-ம் ஆண்டு படித்து வருகிறேன். ஐஏஎஸ் தேர்வுக்கான தயாரிப்பை இப்போதுதான் தொடங்கியுள்ளேன். பல்வேறு சந்தேகங்களுடன் இங்கு வந்த எனக்கு நான் ஐஏஎஸ் ஆகிவிடுவேன் நம்பிக்கையை, இந்த நிகழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

எம்.நாகலட்சுமி:

நான் இப்போதுதான் பட்டப்படிப்பை முடித்துள்ளேன். ஐஏஎஸ் படிக்கலாம் என்ற எண்ணம் இருக்கிறது. மிகவும் கஷ்டமாக இருக்குமோ என்ற அச்சம் மனதில் எழுந்தது. என்ன படிக்க வேண்டும், எப்படி கேள்விகள் கேட்பார்கள், எத்தனை முறை எழுதலாம் என்பன போன்ற எனது அனைத்து அச்சங்களும் இந்த நிகழ்ச்சியால் நீங்கியது. ஐஏஎஸ் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.

செல்வமணி (பார்வை மாற்றுத் திறன் மாணவர்):

நான் தற்போது பி.ஏ. (ஆங்கிலம்) முதலாமாண்டு படித்து வருகிறேன். ஐஏஎஸ் படிக்க வேண்டும் என்பது எனது சிறுவயது கனவு. எப்படி தொடங்குவது எனத் தெரியவில்லை என்றார். இதற்கு பதிலளித்த கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் சத்ய  பூமிநாதன், “இந்த மாணவருக்கு, எங்கள் நிறுவனம் சார்பில் 100 சதவீத கட்டணச் சலுகையுடன் பயிற்சி அளிக்கப்படும். மேலும், ஒலி வடிவிலான அனைத்துப் பாடங்களும் இவருக்கு வழங்கப்படும்” என மேடையில் அறிவித்தார்.

தாழ்வு மனப்பான்மையை விட்டொழியுங்கள்!- ‘தி இந்து’ தமிழ் நடுப்பக்க ஆசிரியர் சமஸ் பேசியது:

திருச்சியில் இன்று நாம் இருக்கிறோம் என்றால், இங்கிருக்கும் மாணவர்கள் வரலாற்றில் நாம் எவ்வளவு முன்னோடிகள் எனும் பெருமையை முதலில் உணர வேண்டும். திருச்சி உறையூரில் சோழப் பேரரசின் கொடி பறந்த நாட்களில் லண்டன் எனும் நகரமும் பிரிட்டிஷ் எனும் பேரரசும் உருவாகியிருக்கவில்லை.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தஞ்சை பெரிய கோயிலை ராஜராஜ சோழன் கட்டியபோது அமெரிக்க ஐக்கிய குடியரசு என்னும் நாடு உருவாகியிருக்கவில்லை. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கல்லணை போன்ற ஒரு மாபெரும் தொழில்நுட்ப கட்டுமானத்தை சிந்தித்த முன்னோடிகள் வழிவந்தவர்கள் நாம். இந்தப் பெருமிதம் இன்றைய தமிழ் இளைஞர்களுக்கு வேண்டும். தமிழால், தமிழரால் முடியாது எனும் தாழ்வுமனப்பான்மையை விட்டொழிக்க வேண்டும்.

ஏன் நம் கனவுகள் இவ்வளவு சுருங்கிவிட்டன?, ஏன் எதற்கெடுத்தாலும் அச்சப்படும் ஒரு சமூகமாக ஆகிவிட்டோம்? இந்த கேள்விகள் வேண்டும். நம்முடைய உரிமைகள் வென்றெடுக்கப்பட வேண்டுமென்றால் நம்முடைய கனவுகள் விரிய வேண்டும். தொலைநோக்குப் பார்வை வேண்டும். வாழ்வதற்கானதல்ல, ஆள்வதற்கான பார்வை. அந்தப் பார்வையை வழங்கும் வரலாற்றுக் கடமையையே ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் இந்நிகழ்ச்சி மூலம் தமிழ் இளைய சமூகத்துக்கு அளிக்க முற்படுகிறது. மாற்றமாவோம் என்றார்.

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் த.செந்தில்குமார்:

கல்லூரி, பல்கலைக்கழக தேர்வுகளில் நிர்ணயிக்கப்பட்ட மதிப்பெண் பெற்றால், அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றுவிடுவர். ஆனால், போட்டித்தேர்வு அப்படி அல்ல. நம்முடன் இணைந்து போட்டியில் கலந்துகொள்பவர்களின் திறமை, மதிப்பெண்ணையும் சார்ந்தது. போட்டித் தேர்வில் வெற்றி பெற, படிக்கும் பழக்கத்தை அதிகரித்துக்கொள்ள வேண்டும். முந்தைய தேர்வுகளின் வினாத்தாள்களை ஆய்வு செய்து, அதற்கேற்ற விடைகளை தயாராக வைத்திருக்க வேண்டும். மொழி முக்கியமே இல்லை. எந்த மொழி நன்றாகத் தெரியுமோ அந்த மொழியில் படித்து தேர்வு எழுதுவதுதான் சிறந்தது. போட்டித் தேர்வுக்கான பல அரிய நூல்கள் இப்போது தமிழில் வந்துவிட்டன.

நூலகங்களுக்குச் சென்று புத்தகங்களை தேடித்தேடி படியுங்கள். ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் வெளிவரும் நடுப்பக்கக் கட்டுரைகள் தமிழ்ச் சமூகத்துக்கு கிடைத்த மிகப்பெரிய அறிவுக்கொடை. அவற்றைப் படித்து பயன்பெற வேண்டும். அதேபோல தலைவர்கள், முக்கிய பிரபலங்கள் குறித்து 2-ம் பக்கத்தில் வெளியிடப்படும் ‘முத்துக்கள் பத்து’ பகுதியையும் தவறாமல் படியுங்கள். செய்தித்தாள் படித்தால் மட்டுமே நடப்பு விஷயங்களை தெரிந்துகொள்ள முடியும்.

திருச்சி மாநகர காவல் சட்டம், ஒழுங்கு துணை ஆணையர் ஏ.மயில்வாகனன்:

போட்டித் தேர்வில் வெற்றிபெற கல்வித்தகுதி, குடும்பத் தகுதி, சமூக தகுதி எதுவும் முக்கியமில்லை. உங்களிடம் என்ன திறமை இருக்கிறது என்பதுதான் முக்கியம். பாடத்திட்டங்களை சிறுசிறு பிரிவுகளாகப் பிரித்து, திறம்பட படித்தால் வெற்றி நிச்சயம். ஒவ்வொரு சாதனையாளரும் கடந்துவந்த பாதை மிக கடினமானதாக இருந்துள்ளதை அறிவோம். அதை மனதில் கொண்டு செயல்பட்டால், உங்களின் வெற்றிக்காக இந்த உலகம் காத்திருக்கும். பெரிய அறிஞர்கள், அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் என அனைவருமே சாதாரண நிலையில் இருந்து, கடின உழைப்பால் உயர்ந்த நிலைக்கு வந்தவர்கள். அவர்களைப் போலவே உங்களாலும் நிச்சயம் வெல்ல முடியும்.

கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் சத்ய  பூமிநாதன்:

‘தி இந்து’ தமிழ் நாளிதழுடன் கிங் மேக்கர்ஸ் நிறுவனம் இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்துவது மிகவும் பொருத்தமானது. ஏனெனில், ஐஏஎஸ் தேர்வில் 60 சதவீத கேள்விகள் இந்து நாளிதழிலிருந்தே எடுக்கப்படுகின்றன. மறைமுகமாக ஐஏஎஸ் தேர்வர்களுக்கு உதவி புரிந்துவரும் ‘தி இந்து’ குழுமத்துடன் இணைந்து நேரடியாக ஒரு நிகழ்ச்சியை நடத்துவதில் நாங்கள் பெருமைப்படுகிறோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x