

பழங்கால சிலைகளை சர்வதேச கும்பலோடு கைகோத்து வெளிநாட்டுக்கு கடத்திய போலீஸ் அதிகாரிகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கின் ஆவணங்களை நேரில் ஆஜராகி தாக்கல் செய்ய சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி.பொன் மாணிக்கவேலுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
எனது காரில் ஓய்வு பெற்ற போலீஸ்காரர் ஒருவர் ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டுச் சென்றார். அதில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸ் அதிகாரிகள் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சாமி சிலைகளை சர்வதேச கடத்தல் கும்பலோடு கைகோத்துக் கடத்தி விற்பனை செய்திருப்பதாக கூறப்பட்டு இருந்தது.
இதுகுறித்து நானும் விசாரித்தேன். அந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மையானவை. மதுரை தெற்கு வெளிவீதியில் உள்ள மிஷன் மருத்துவமனை அருகே ‘கேமரா’ பழுது பார்க்கும் சுந்தரமூர்த்தி என்பவரிடமிருந்து 30 கிலோ பழங்கால சாமி சிலைகளை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஆய்வாளரான காதர்பாஷா மற்றும் போலீஸ்காரரான சுப்புராஜ் ஆகியோர் கைப்பற்றியுள்ளனர். அதன்பிறகு சுந்தரமூர்த்தி கொடுத்த தகவலின்பேரில் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த ஆரோக்கியராஜிடம் இருந்து ஏராளமான சிலைகளை பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த ஆரோக்கியராஜ் தன் வீட்டில் பள்ளம் தோண்டும்போது ‘சிவன்-பார்வதி’ மற்றும் சிவகாமி சிலையை எடுத்துள்ளார். இதுபோல கைப்பற்றப்படும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள உலோகச் சிலைகளை அந்த ஆய்வாளரும், போலீஸ்காரரும் கூட்டணி அமைத்து சட்டவிரோதமாக விற்பனை செய்துள்ளனர். மேலும் இதுதொடர்பான வழக்கு ஸ்ரீவில்லிப்புத்தூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திலும் நிலுவையில் உள்ளது.
தற்போது இந்த குற்றச்சாட்டுக்கு ஆளான அந்த ஆய்வாளர் காதர்பாஷா டிஎஸ்பியாகி விட்டார். அந்த சுப்புராஜ் சிறப்பு சார்பு-ஆய்வாளராக உள்ளார். எனவே இந்த வழக்கை நியாயமான அதிகாரி ஒருவர் விசாரிக்க உத்தரவிட வேண்டும். எனவே இந்த வழக்கை சிபிசிஐடி பிரிவு எஸ்பி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என அதில் கோரியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நேற்று நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு நடந்தது. அப்போது மனுதாரர் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் ஆஜராகி வாதிட்டார். அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
அதையடுத்து நீதிபதி, அந்த ஆவணங்களை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் வரும் ஜூன் 29-ம் தேதி நேரில் ஆஜராகி தாக்கல் செய்து விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையைத் தள்ளி வைத்தார்.