Last Updated : 27 May, 2017 07:31 AM

 

Published : 27 May 2017 07:31 AM
Last Updated : 27 May 2017 07:31 AM

எஸ்மா சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்ட நீதிபதிகளுக்கு ஓய்வுபெற்ற ஊழியர் கடிதம்: பொதுநலன் வழக்காக மாற்றி உயர் நீதிமன்றம் விசாரணை

போக்குவரத்து ஊழியர்கள் ஓய்வூதியம் கிடைக்காமல் பட்டினியால் சாக வேண்டுமா?

அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் கள் வேலைநிறுத்தப் போராட்டத்தைக் கைவிடாவிட்டால் எஸ்மா சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்ட நீதிபதி களுக்கு, 82 வயது ஓய்வுபெற்ற ஓட்டுநர் ஒருவர் கடிதம் அனுப்பி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இந்தக் கடிதத்தை பொதுநலன் வழக்காக எடுத்து விசா ரித்த நீதிபதிகள், போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை விவரங்களைத் தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டனர்.

தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி மே 15-ம் தேதி மதியம் முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களின் போராட்டத்தால் மாநிலம் முழுவதும் 90 சதவீத அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட் டத்தை சட்டவிரோதம் என அறிவிக்க வும், போராட்டத்தைத் தொடரும் ஊழியர்கள் மீது எஸ்மா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரியும் மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த வழக்கறிஞர் செந்தில் குமரய்யா என்பவர் உயர் நீதிமன்ற கிளையில் பொதுநலன் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.வி.முரளிதரன், என்.சேஷசாயி அமர்வு, ‘‘போக்குவரத்துக் கழக ஊழியர் களின் 50 சதவீத கோரிக்கைகள் நிறை வேற்றப்பட்டுள்ளதால், பொதுமக்களின் நலனை கருத்தில்கொண்டு வேலைநிறுத் தத்தைக் கைவிட்டு உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும். பணிக்கு வர மறுப்பவர்கள் மீது எஸ்மா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என மே 16-ம் தேதி உத்தரவிட்டது.

இதனிடையே, மே 16-ம் தேதி இரவில் அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் மே 17-ம் தேதியில் இருந்து போக்குவரத்துக் கழக ஊழியர்கள் அனைவரும் பணிக்குத் திரும்பினர்.

இந்நிலையில், போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தத்தைக் கைவிட்டு உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி களுக்கு மதுரை செக்கானூரணியைச் சேர்ந்த மாயாண்டி சேர்வை(82) என்பவர் அஞ்சல் அட்டையில் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.

இந்த அஞ்சல் அட்டையை உயர் நீதிமன்ற கிளை தாமாக முன்வந்து பொதுநலன் வழக்காக நேற்று விசார ணைக்கு எடுத்தது. இது தொடர்பாக உயர் நீதிமன்ற கிளை விடுமுறை கால அலுவலர் தாக்கல் செய்த மனுவில், “மாயாண்டி சேர்வையின் கடிதத்தின் அடிப்படையில் அரசு போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்ற ஊழியர்களுக்குக் கிடைக்க வேண்டிய பணப் பலன்களை உடனடியாக வழங்க உத்தரவிட வேண்டும்” என கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எம்.வி.முரளிதரன், சி.வி.கார்த்திக்கேயன் அமர்வில் நேற்று மதியம் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற 82 வயது முதியவர் எங்களை (நீதிபதிகளை) குற்றவாளியாக்கி உள்ளார். உண்மை நிலை தெரியாமல் எப்படி எஸ்மா சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டீர்கள் என்று கடிதத்தில் அந்த முதியவர் கேட்டுள்ளார்” என்றனர்.

அரசு வழக்கறிஞர் ராஜாகார்த்தி கேயன் வாதிடும்போது, ‘‘உயர் நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு நிலுவைத் தொகை வழங்க அரசு ரூ.1250 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் ரூ.1000 கோடி ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு பணிக்கொடையாக வழங்கப்படும். ரூ.250 கோடி வருங்கால வைப்பு நிதி நிலுவைத் தொகைக்கு வழங்கப்படும். இது தவிர கூட்டுறவு சங்கங்கள் மற்றும் பல்வேறு சேவைகளுக்காக பிடித்தம் செய்த ரூ.140 கோடியும், தற்போதைய பணியாளர்களுக்கு பஞ்சப்படி ரூ.70 கோடி வழங்கவும் ஒதுக்கப்பட்டுள்ளது” என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘‘மனுதாரருக்கு 82 வயது ஆகிறது. அவர் ஓய்வுபெற்று 24 ஆண்டுகள் ஆகின்றன. இன்னும் அவருக்கு ஓய்வூதியப் பலன்கள் வழங்கப்படவில்லை என்றால் எப்படி? போக்குவரத்து அத்தியாவசிய சேவைகளில் ஒன்றா கும். அந்த சேவையில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு இருப்பவர்களுக்கு நிவாரணம் வழங்குவதில் தாமதம் செய்யக் கூடாது” என்றார்.

தொடர்ந்து அரசு வழக்கறிஞர் வாதிடும்போது, ‘‘போக்குவரத்து ஊழியர்களுக்கு நிலுவைத் தொகை வழங்குவதில் அரசு உறுதியாக உள்ளது. இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. ஓய்வுபெற்ற ஊழியர் கள் அனைவருக்கும் 3 மாதத்தில் நிலுவைத் தொகை முழுமையாக வழங்கப்படும்” என்றார்.

இதையடுத்து, போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை, வழங்கப்பட்ட தொகை, பாக்கி நிலுவைத் தொகை விவரங்களை தமிழக போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலர் மே 30-ம் தேதி பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட தொமுச உள்ளிட்ட 10 தொழிற்சங்கங்களை எதிர்மனுதாரராக சேர்க்க வேண்டும்” என நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர், பதில் மனு தாக்கல் செய்ய தொழிற்சங்கங்கள், மத்திய உள்துறைச் செயலர், தமிழக தலைமைச் செயலர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப பதிவுத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பசி, பட்டினியுடன் இருக்கிறோம்...

‘‘அரசு போக்குவரத்துக் கழகத்தில் 58 வயது வரை வெயில், மழை மற்றும் இயற்கைச் சீற்றங்களின்போது பணிபுரிந்து ஓய்வுபெற்ற எனக்கு தற்போது வயது 82. பணப் பலன்கள் கிடைக்காமல் நீதிமன்றத்தை நாடி வந்த ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு பணப் பலன்கள், ஓய்வூதியம் வழங்க நீதிமன்றம் பல முறை உத்தரவிட்டும் இதுவரை எங்களுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை.

எங்களுக்கு வர வேண்டியது மாதாந்திர ஓய்வூதியம், பணப் பலன்கள் மட்டுமல்ல. ரூ.1700 கோடி நிலுவைத் தொகை, எங்கள் சம்பளத்தில் பிடித்தம் செய்த ரூ.4346 கோடியையும் தரவில்லை. வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய தொகையையும் செலுத்தவில்லை. ஓய்வூதியம் கிடைக்காமல் பசி, பட்டினியுடன் இருக்கும்போது எங்கள் மீது எஸ்மா சட்டத்தில் நடவடிக்கை எடுக்க எப்படி உங்களுக்கு மனம் வந்தது? நாங்களும், குடும்பத்தினரும் ஓய்வூதியம் இல்லாமல் சாக வேண்டுமா? தொழிலாளர்களுக்குக் கிடைக்க வேண்டிய பணத்தில் பாதிகூட கொடுக்க மனமில்லாத, ஒருதலைபட்சமான அரசுக்கு எதிராக போராடுவதைத் தவிர வேறு என்ன வழி?’’

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x