Published : 21 Dec 2013 09:40 AM
Last Updated : 21 Dec 2013 09:40 AM

காங்கிரஸ் நிர்வாகிகள் பட்டியலில் நிச்சயம் மாற்றம் வரும்! - சிதம்பரம் ஆதரவாளர்கள் சூசக தகவல்

சென்னையில் வியாழக்கிழமை நடந்த காங்கிரஸ் புதிய நிர்வாகிகள் கூட்டத்தை ஒட்டு மொத்தமாக புறக்கணித்திருக்கும் சிதம்பரம் விசுவாசிகள், ‘நிர்வாகிகள் பட்டிய லில் நிச்சயம் மாற்றம் வரும்’ என்று கூறுகின்றனர்.

அனைவருக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என்பதற்காகத்தான் 29 பொதுச்செயலாளர்கள், 11 துணைத் தலைவர்கள் என மெகா பொறுப்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் தலைமை அறிவித்தது. ஆனால், அதிலும் திருப்தியடையாத சிதம்பரம் அணி, இப்போது குடைச்சல் கொடுக்க ஆரம்பித்திருக்கிறது. கார்த்தி சிதம்பரத்துக்கு துணைத் தலைவர் பதவி கொடுக்க வில்லை என்பதுதான் இவர்களின் கோபமாக இருந்தாலும் அதை வெளிப்படையாகப் பேசாமல், ‘தலைவர் சிதம்பரத்தைக் கலந்து பேசாமல் அவர்கள் இஷ்டத்துக்கு பொறுப்பாளர்கள் பட்டியலை அறிவித்திருக்கிறார்கள்’என்று குற்றம்சாட்டியுள்ளனர்.

சிதம்பரம் கேட்ட விளக்கமும் அட்வைஸும்

இதுகுறித்து ‘தி இந்து’விடம் பேசிய சிதம்பரம் ஆதரவாளர்கள் கூறியதாவது:

பொறுப்பாளர்கள் நியமனம் தொடர்பாக ஆரம்பத்திலேயே அகில இந்தியப் பொதுச் செயலாளர் முகுல்வாஸ்னிக்கையும், ஞானதேசிகனையும் அழைத்துப் பேசிய சிதம்பரம், மாவட்டத் தலைவர் நியமனம் தொடர்பாக சில விளக்கங்களை கேட்டிருந்தார்.

‘மாநிலப் பதவிகளில் அனைத்து மாவட்டங்களுக்கும் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும். ஒரு மாவட்டத் தலைவர் பதவிக்கு 4 அணிகளைச் சேர்ந்தவர்களும் ஆளுக்கு ஒருவரை சிபாரிசு செய்திருந்தால், அணிகளை புறந்தள்ளி வைத்துவிட்டு, அந்த நால்வரில் யார் மக்கள் செல்வாக்கு உள்ளவர்கள், களப்பணி செய்யக் கூடியவர்கள் என்பதை சீர்தூக்கிப் பார்த்து சரியான நபருக்கு பதவி கொடுங்கள்’ என்பதும் சிதம்பரத்தின் அட்வைஸ்.

இதுகுறித்து கலந்து பேசி முடிவு சொல்வதாக கூறிவிட்டு வந்த ஞானதேசிகன் அதன்பிறகு சிதம்பரத்தைச் சந்திக்கவே இல்லை.

சஸ்பெண்ட் ஆனவருக்கு பதவி

சட்டமன்ற தேர்தலின்போது, தங்கபாலுவை எதிர்த்து சத்திய மூர்த்தி பவனில் உண்ணாவிரதம் இருந்ததற்காக ஜி.ஏ.வடிவேலுவும், தனது தொகுதியை தங்கபாலு மனைவிக்கு ஒதுக்கியதை கண்டித்து கிளர்ச்சி செய்ததற்காக கராத்தே தியாகராஜனும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். வடிவேலுக்கு மாநிலத் துணைத் தலைவர் பதவி கொடுத்திருக்கிறார்கள். கராத்தே தியாகராஜனை ஓரங்கட்டி விட்டார்கள். பெண்களுக்கும் தலித்க ளுக்கும் போதிய பிரதிநிதித்துவம் இல்லை.

துணைத் தலைவருக்கான பட்டியலில் இருந்த கார்த்தி சிதம்ப ரத்தின் பெயரையும் கடைசி நேரத்தில் திருத்திவிட்டார்கள். முழுக்க முழுக்க ஜி.கே.வாசனை திருப்திப்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் நிர்வாகிகள் பட்டியலை அறிவித்திருக்கிறார்கள். இதை எப்படி ஏற்றுக்கொள்வது? அதனால்தான் எங்களது எதிர்ப்பை தெரிவிக்கிறோம்என்றார்கள்.

“இதெல்லாம் சிதம்பரத்துக்கு தெரியுமா?” என்று அவர்களைக் கேட்டதற்கு, ‘அவருக்கு தெரியாமலா நடக்கும்?’ என்றவர்கள், ‘24-ம் தேதி சிவகங்கையில் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டி இருக்கிறார் சிதம்பரம். அந்தக் கூட்டத்திற்குப் பிறகு நிச்சயம் மாற்றம் இருக்கும்’ என்றார்கள்.

வரமுடியாதவர்கள் விளக்கம்

சிதம்பரம் ஆதரவாளரான புதுக்கோட்டை மாவட்ட தலைவரும் மாநில துணைத் தலைவருமான புஷ்பராஜிடம் புறக்கணிப்பு குறித்துக் கேட்டதற்கு, “எதுக்குஎன்னன்னு தெரியாது. ‘கூட்டத்துல கலந்துக்க வேண்டாம்’னுசொன்னாங்க நான் போகல. மத்தபடி எதுவும் கேக்கா தீங்க” என்றார். கூட்டம் நடந்தபோது காரைக்குடியில் முகாமிட்டிருந்த கார்த்தி சிதம்பரத்தை தொடர்பு கொண்டபோது, ‘சார் அவசரமா சென்னைக்கு கிளம்பீட்டுஇருக்காரு’ என்று சொல்லி இணைப்பைத் துண்டித்தார்கள் அவரோடு இருந்தவர்கள். கார்த்திக்காக கலகம் செய்கிறார்கள்

‘சிதம்பரம் உள்ளிட்ட அனைத்துத் தலைவர்களின் கருத்தைக் கேட்டுத்தான் புதிய நிர்வாகிகள் பட்டியலை தயாரித்திருக்கிறார் ஞானதேசிகன். கார்த்திக்கு பதவி இல்லை என்பதால் ஏதேதோ காரணத்தைச் சொல்லி கலகம் செய்கிறார்கள்’ என்கிறார்கள் வாசன் ஆதரவாளர்கள்.

இதுகுறித்து மாநிலத் தலைவர் ஞானதேசிகனிடம் பேசினோம். “கூட்டத்துக்கு வரமுடியாதவர்களில் சிலர் காரணத்தை விளக்கி கடிதம் கொடுத்திருக்கிறார்கள். இன்னும் சிலர் போனில் பேசினார்கள்” என்றவரிடம், சிதம்பரம் அணி புறக்கணிப்பு குறித்துக் கேட்டதற்கு, “கட்சி விஷயங்களை நான் வெளியில் விவாதிப்பதில்லை” என்று முடித்துக் கொண்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x