Published : 13 Mar 2014 12:00 AM
Last Updated : 13 Mar 2014 12:00 AM

மலேசிய விமானத்தில் சென்ற என் மனைவி எங்கே?- நிம்மதி இல்லாமல் 5 நாட்களாக தவிக்கிறோம்; சென்னை பெண்ணின் கணவர் உருக்கமான பேட்டி

மாயமான மலேசிய விமானத்தில் சென்ற என் மனைவியின் கதி என்ன ஆனதோ? எந்த விவரமும் தெரியாமல் 5 நாட்களாக குழப்பத்தில் தவிக்கிறோம் என்று சென்னையைச் சேர்ந்த சந்திரிகா ஷர்மாவின் கணவர் நரேந்திரன் உருக்கமாக கூறினார்.

கடந்த சனிக்கிழமை அதிகாலை கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங்குக்கு புறப்பட்ட மலேசிய விமானம், திடீரென மாயமானது. தோ சூ என்ற தீவில் இருந்து 153 மைல் தொலைவில் உள்ள தென் சீனக் கடலுக்குள் விமானம் விழுந்து விட்டதாக தகவல்கள் வெளியாகின.

விமானத்தில் இருந்த பயணிகள், ஊழியர்கள் உள்ளிட்ட 239 பேரின் கதி என்ன ஆனது என்பது குறித்து இதுவரை எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. இந்த விமானத்தில் 5 இந்தியர்களும் சென்றுள்ளனர். இதில் சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த சந்திரிகா ஷர்மா (50) என்பவரும் ஒருவர்.

இவர் இன்டர்நேஷனல் கலெக்டிவ் இன் சப்போர்ட் ஆப் பிஷ் ஒர்க்கர்ஸ் (ஐசிஎஸ்எப்) என்ற சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் கடந்த 19 ஆண்டுகளாக மீனவர் நலனுக்காக பணியாற்றியுள்ளார். இவரைப் பற்றி தகவல் எதுவும் கிடைக்காததால் அவரது குடும்பத்தினரும் உறவினர்களும் சோகத்தில் உள்ளனர். இந்நிலையில், சந்திரிகாவின் கணவர் நரேந்திரன், மகள் மேக்னா ஆகியோர் சென்னையில் நிருபர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:

விமான விபத்து குறித்து மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனமோ, இந்திய அரசோ இதுவரை எந்தத் தகவலையும் தெரிவிக்கவில்லை. விமானம் என்ன ஆனது, எங்கு இருக்கிறது என்றும் தெளிவாக யாரும் சொல்லவில்லை. இதனால், எங்களுக்கு பெரும் குழப்பமாகவும் தவிப்பாகவும் இருக்கிறது.

மலேசியாவில் உள்ள இந்திய தூதரகம் மூலம் மட்டுமே ஒரு சில தகவல்கள் கிடைக்கின்றன. அந்தத் தகவல்களையும் மீடியா மூலமே நாங்கள் அறிய முடிகிறது. மலேசிய விமானத்தில் சென்றவர்களில் 5 பேர் இந்தியர்கள். எனவே, இதில் இந்திய அரசுக்கும் பொறுப்பு உண்டு. விமானத்தை தேடும் பணியை தீவிரப்படுத்த வேண்டும்.

கடந்த 5 நாட்களாக நாங்கள் குழப்பத்திலேயே இருக்கிறோம். மன நிம்மதி, தூக்கம் இல்லாமல் தவிக்கிறோம். ஏதாவது அதிசயம் நிகழாதா என்ற ஏக்கத்தில் இருக்கிறோம். காணாமல் போன விமானத்தை தேடும் பணியை தீவிரப்படுத்த வேண்டும் என இந்திய அரசை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு நரேந்திரன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x