Published : 18 Jan 2014 12:00 AM
Last Updated : 18 Jan 2014 12:00 AM

நெருக்கடிகளை தவிர்க்க வெளிநாடு சென்றார் விஜயகாந்த்

கூட்டணி குறித்து பல்வேறு கட்சிகள் தொடர்ந்து நெருக்கடி கொடுத்துவரும் நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் திடீரென வெளிநாடு புறப்பட்டு சென்றுவிட்டார்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணியை அமைக்கும் பணியில் தமிழக கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்தத் தேர்தலில் பல கட்சிகளின் பார்வை முழுவதும் தேமுதிக பக்கமே உள்ளது. அந்தக் கட்சியை எப்படியாவது கூட்டணிக்குள் கொண்டுவந்துவிட வேண்டும் என திமுக, காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் திட்டமிட்டு காய்களை நகர்த்தி வருகின்றன. தேமுதிக எங்களுடன்தான் வரும் என இந்தக் கட்சிகளின் நிர்வாகிகள் கூறி வருகின்றனர்.

உளுந்தூர்பேட்டையில் பிப்ரவரி 2-ம் தேதி நடக்கவுள்ள கட்சி மாநாட்டில் தொண்டர்களின் கருத்தை கேட்ட பிறகே கூட்டணி பற்றி அறிவிப்பேன் என விஜயகாந்த் கூறிவிட்டார். ஆனாலும், தேமுதிக தலைவர் விஜயகாந்த், இளைஞர் அணி செயலாளர் எல்.கே.சுதீஷ் ஆகியோரை பல்வேறு கட்சித் தலைவர்கள் தினமும் சந்தித்து கூட்டணி குறித்து பேசி வருகின்றனர். குறிப்பாக, தமிழக பாஜக தலைவர்கள் மாறி மாறி விஜயகாந்திடம் தொடர்ந்து பேசி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், விஜயகாந்த் வெள்ளிக்கிழமை திடீரென மலேசியா புறப்பட்டு சென்றுவிட்டார். அவருடன் குடும்பத்தினர் யாரும் செல்லவில்லை. நண்பர்கள் அழைப்பின்பேரில் அவர் சென்றிருப்பதாகவும் இரண்டு வாரம் மலேசியா, சிங்கப்பூரில் இருந்துவிட்டு இம்மாத இறுதியில் சென்னை திரும்புவார் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

கூட்டணி தொடர்பாக கட்சிகள் கொடுக்கும் நெருக்கடியில் இருந்து தப்பிக்கவே அவர் வெளிநாடு சென்றிருப்பதாக தெரிகிறது.

குழு ஆலோசனை

இதற்கிடையே, கூட்டணி குறித்து பேசுவதற்காக அமைக்கப்பட்ட 8 பேர் குழுவினர், எல்.கே.சுதீஷ் தலைமையில் வெள்ளிக்கிழமை முக்கிய ஆலோசனை நடத்தினர். கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் குழு உறுப்பினர்கள் வி.சி.சந்திரகுமார், முருகேசன், ஆர்.உமாநாத், ஜாகீர் உசேன், வி.யுவராஜ், மோகன்ராஜ், பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர். நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி மற்றும் உளுந்தூர்பேட்டை மாநாடு ஏற்பாடுகள் குறித்து அவர்கள் பேசியதாக கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x