நடிகை பாவனாவை கடத்தி பாலியல் வன்முறை: கேரள சட்டப்பேரவையில் காங்கிரஸ் கடும் அமளி

நடிகை பாவனாவை கடத்தி பாலியல் வன்முறை: கேரள சட்டப்பேரவையில் காங்கிரஸ் கடும் அமளி
Updated on
2 min read

அரசு மீது சரமாரி குற்றச்சாட்டு; வெளிநடப்பு

நடிகை பாவனாவை கடத்தி பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியது தொடர்பான வழக்கை அரசு நீர்த்துப் போக செய்கிறது என்று காங்கிரஸ் கடும் குற்றம் சாட்டியது. இதுகுறித்து கேரள சட்டப்பேரவையில் கடும் அமளி ஏற்பட்டது. அரசுக்கு எதிர்ப்புத் தெரிவித்து காங்கிரஸ் வெளிநடப்பு செய்தது.

கேரள மாநிலம் கொச்சி அருகே கடந்த 17-ம் தேதி நடிகை பாவனாவை ஒரு கும்பல் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்தது. இதுகுறித்து நடிகை அளித்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், கேரள சட்டப்பேரவையில் இந்தப் பிரச்சினையை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎப்) எம்எல்ஏ.க்கள் எழுப்பினர்.

கேரள சட்டப்பேரவை நேற்று காலை தொடங்கியதும், நடிகை பாவனாவுக்கு பாலியல் தொல்லை அளித்தது தொடர்பான வழக்கை ஆளும் இடதுசாரி முன்னணி (எல்டிஎப்) அரசு நீர்த்துப் போக செய்கிறது. இதுகுறித்து விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் உறுப்பினர்கள் வலியுறுத்தினர். இதுதொடர்பாக ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டுவரவும் நோட்டீஸ் அளித்தனர்.

அவர்களது கோரிக்கையை சபாநாயகர் ராமகிருஷ்ணன் மறுத்துவிட்டார். பூஜ்ய நேரம் எடுத்துக் கொள்ளப்பட்டதால் கோபம் அடைந்த யுடிஎப் எம்எல்ஏ.க்கள் சபை நடுவில் சென்று கூச்சலிட்டனர். ‘‘இந்த வழக்கை சரியாக விசாரிக்க அரசு தயாராக இல்லை. நடிகைக்கு ஏற்பட்ட பாதிப்புக்குப் பின்னால் மிகப்பெரிய சதி உள்ளது. அதை கண்டுபிடிக்க விடாமல் விசாரணையை அரசு தடுக்கிறது’’ என்று சரமாரியாக குற்றம் சாட்டினர்.

அப்போது ஆளும் எல்டிஎப் எம்எல்ஏ.க்களும் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நடந்த சம்பவங்களைக் கூறி கூச்சலிட்டனர். இதனால் சபை அரை மணி நேரம் ஒத்திவைக்கப்பட்டது. அப்போது ஆளும் எல்டிஎப், யுடிஎப் உறுப்பினர்களை சமாதானப்படுத்த சபாநாயகர் ராமகிருஷ்ணன் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தார்.

ஆனால், காங்கிரஸ் தலைமையிலான யுடிஎப் எம்எல்ஏ.க்கள் சமாதானம் ஆகவில்லை. இதனால் சட்டப்பேரவை மறுபடியும் கூடியபோதும் தொடர்ந்து அமளி நிலவியது. ‘பெண்களுக்குப் பாதுகாப்பு எங்கே?’ என்று கோஷமிட்டனர். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது. அப்போது ஒத்திவைப்புத் தீர்மானத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து, காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சி எம்எல்ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.

முன்னதாக ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டுவர வலியுறுத்தி அளிக்கப்பட்ட நோட்டீஸுக்கு முதல்வர் பினராயி விஜயன் பதில் அளித்து பேசியதாவது:

எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டில் உண்மையில்லை. நடிகை கடத்தப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி பல்சர் சுனி உட்பட எல்லா குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவே இந்த வழக்கில் அரசு எந்தளவுக்கு செயல்படுகிறது என்பதற்கு ஆதாரம்.

ஆனால், இந்த வழக்கை அரசியலாக்க காங்கிரஸ் கட்சி முயற்சிக்கிறது. இந்த வழக்கின் ஆரம்பத்தில் இருந்து போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் நடந்த சில நாட்களிலேயே குற்றவாளிகளைப் பிடித்துள்ளனர். இந்த சம்பவத்தின் பின்னணியில் சதி இருக்கிறதா என்பது குறித்து அரசுக்கு எந்தக் கருத்தும் இல்லை. இதை நீதிமன்றத்திலும் அரசு தெளிவாக எடுத்துரைத்துள்ளது. இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை நடத்த போலீஸாருக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு முதல்வர் பினராயி விஜயன் கூறினார்.

ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா பேசும்போது, ‘‘நடிகை கடத்தப்பட்ட வழக்கில் சதி எதுவும் இல்லை என்று முன்னர் முதல்வர் கூறினார். அதன்மூலம் இந்த வழக்கு விசாரணைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். விசாரணை தொடக்கத்தில் இருக்கும் நிலையில், சதி இல்லை என்று இறுதி தீர்ப்பு சொல்ல முதல்வருக்கு என்ன அதிகாரம் உள்ளது. சதி இல்லை என்று முதல்வர் சொன்னது, விசாரணையை தொடர வேண்டாம் என்று சிக்னல் அளிப்பது போல் உள்ளது’’ என்று குற்றம் சாட்டி னார்.

காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சி எம்எல்ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர். அதன்பின், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் உட்பட அவை அலுவல்களை சபாநாயகர் தொடர்ந்து நடத்தினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in