Published : 07 Sep 2016 05:05 PM
Last Updated : 07 Sep 2016 05:05 PM

காவிரி பிரச்சினைக்கு நதிநீர் இணைப்பே நிரந்தரத் தீர்வு: கி.வீரமணி கருத்து

காவிரி பிரச்சினைக்கு நதிநீர் இணைப்பே நிரந்தரத் தீர்வு என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில், ''காவிரி நடுநர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி காவிரியிலிருந்து தமிழகத்துக்கு வழங்க வேண்டிய தண்ணீரை திறந்துவிட கர்நாடகம் மறுத்து வருகிறது. இதனால் டெல்டா பகுதிகளில் சம்பா சாகுபடி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, வேறு வழியின்றி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 10 நாள்களுக்கு 13 டி.எம்.சி. தண்ணீரை திறக்க உத்தரவிட்டுள்ளது.

இது விவசாயிகளுக்கு மனநிறைவை அளிக்கவில்லை. ஆனாலும் முதல்கட்டமாக இந்த அளவுக்காவது நீர் கிடைக்க நடவடிக்கைகள் மேற்கொண்ட தமிழக அரசு, முதல்வர், இதற்காக குரல் கொடுத்த அனைத்துக் கட்சிகள், விவசாய அமைப்புகளுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தவித்த வாய்க்கு தண்ணீர் தருவதுபோல 13 டி.எம்.சி. நீர் முதலுவதவி போன்ற இடைக்கால தீர்வு மட்டுமே.

காவிரியிலிருந்து தமிழகத்துக்கு உரிய தண்ணீரைப் பெற தமிழக அரசு உடனடியாக அனைத்துக்கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டும். அனைத்துக் கட்சி தலைவர்களுடன் டெல்லி சென்று பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டும்.

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் ஒழுங்காற்று குழு அமைக்க வேண்டும். ஆனால், கர்நாடகத்தில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக மத்திய பாஜக அரசு உள்நோக்கத்துடன் செயல்படுகிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

காவிரி போன்ற நதிநீர் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண நதிநீர் இணைப்புத் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும். முதல்கட்டமாக மாநிலங்களுக்குள் பாயும் நதிகளை இணைக்க வேண்டும். பிறகு பல்வேறு மாநிலங்களுக்குள் பாயும் நதிகளை இணைக்க வேண்டும். இதன் மூலம் மழை வெள்ள பாதிப்புகளையும், வறட்சியையும் தவிர்க்க முடியும். கடந்த திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட தமிழகத்துக்குள் பாயும் நதிகளை இணைக்கும் திட்டத்தை அதிமுக அரசு செயல்படுத்த வேண்டும்'' என்று கி.வீரமணி தெரிவித்துள்ளார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x