

தெற்கு அந்தமான் அருகே நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக இன்றுமுதல் தமிழக கடலோரப் பகுதிகளில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறும்போது, தாய்லாந்து வளைகுடா பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. தற்போது தெற்கு அந்தமான் அருகே நிலவி வருகிறது. இது மேற்கு நோக்கி நகர்ந்து, தமிழகத்தை நோக்கி வரக்கூடும்.
வரும் 24 மணி நேரத்தில்...
இதன் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் கடலோரத் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையைப் பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். லேசான மழை ஒருசில இடங்களில் பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக 30 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 22 டிகிரி செல்சியஸ் இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.