Published : 04 May 2017 07:56 AM
Last Updated : 04 May 2017 07:56 AM

22 சிறப்பு அம்சங்களை கொண்டுள்ள ‘தேஜஸ்’ சொகுசு ரயில் சேவை: அடுத்த மாதம் தொடங்குகிறது

கடந்த ரயில்வே பட்ஜெட்டில் சர்வதேச தரத்தில் ‘தேஜஸ்’ என்ற பெயரில் நவீன சொகுசு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இருக்கைகள் நீல வானம் மற்றும் பூமியின் நிறத்தில் இருக்கும். மெட்ரோ ரயில்களில் இருப்பதுபோல் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன.

தானியங்கி டீ, காபி இயந்திரங்கள், பாதுகாப்பு குறிப்புகளை தெரிவிக்கும் எல்இடி பதாகைகள், பயோ கழிப்பறைகளில் இருப்பில் உள்ள தண்ணீர் அளவை தெரிந்துகொள்வதற்கான கருவி, தொடுதிறன் கொண்ட தண்ணீர் குழாய்கள், செய்தித்தாள்கள், புத்தகங்கள், வைஃபை வசதி உட்பட மொத்தம் 22 சிறப்பு அம்சங்கள் இந்த ரயிலில் இடம்பெற்றுள்ளன.

இந்த விரைவு ரயில் சேவை முதல்கட்டமாக மும்பை - கோவா இடையே அடுத்த மாதம் தொடங்க உள்ளது. இது தொடர்பாக ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:

‘தேஜஸ்’ சொகுசு ரயிலில் வைஃபை வசதி, கண்காணிப்பு கேமராக்கள், புகை பிடிப்பதை கண்டறியும் கருவி உட்பட 22 வகையான புதிய வசதிகள் இடம்பெறும். முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் இந்த ரயில் சேவை தொடங்க உள்ளது. முதல்கட்டமாக மும்பை - கோவா இடையே அடுத்த மாதம் தொடங்க உள்ளது. இதையடுத்து, டெல்லி - சண்டிகர் இடையே தொடங்கப்படும். ராஜ்தானி, சதாப்தி ரயில் கட்டணம்போல் வசூலிக்கப்படும். சென்னையில் இருந்து மற்ற நகரங்களுக்கு இயக்குவது பற்றி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x