Published : 01 Jun 2016 08:19 AM
Last Updated : 01 Jun 2016 08:19 AM

சென்னையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள 54 சிலைகள் மீட்பு: கடத்தலில் ஈடுபட்ட 3 பேர் கைது

ஆழ்வார்பேட்டையில் ஒரு பங்களா வீட்டிலிருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள 1,700 ஆண்டுகள் பழமையான 54 சாமி சிலைகள் மீட்கப்பட்டன. சிலை கடத்தல் கும்பலை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

தமிழக கோயில்களில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான ஏராளமான சிலைகள் உள்ளன. இந்தச் சிலைகளை வெளிநாட்டு அருங்காட்சியகங்கள் கோடிக்கணக்கான ரூபாய் கொடுத்து வாங்குகின்றன. இதைப் பயன்படுத்திக்கொண்டு பணம் சம்பாதிக்கும் முயற்சியில் சிலர் சிலைகளைத் திருடி விற்று வருகிறார்கள்.

இந்நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டை முரேஸ்கேட் சாலையில் உள்ள ஒரு பங்களாவில் ஏராளமான சாமி சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேல், டி.எஸ்.பி. சுந்தரம், ஆய்வாளர்கள் ரவி, ஜனார்த்தனம் மற்றும் போலீஸார் நேற்று காலையில் அந்த பங்களாவுக்குள் நுழைந்து சோதனை நடத்தினர். வெளியே கற்சிலைகள் செய்யும் கூடம்போல் காட்சியளித்த இந்த வீட்டில் நடந்த சோதனையின்போது 54 பழங்கால சாமி சிலைகள் கைப்பற்றப்பட்டன. அந்த பங்களாவின் உரிமையாளர் தீனதயாள்(78) சோதனையின்போது அங்கு இல்லை. அங்கிருந்த தீனதயாளின் கூட்டாளிகள் மான்சிங்(58), குமார்(58), ராஜாமணி(60) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 3 பேரும் சிலைகளை வெளிநாடுகளுக்கு கடத்திச் செல்லும் ஏஜெண்டுகள் என்பது விசாரணையில் தெரியவந்தது.

இதுபற்றி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஎஸ்பி சுந்தரம் கூறும்போது, “சென்னை தேனாம்பேட்டையில் ‘அபர்ணா கேலரி' என்ற பெயரில் தொன்மை வாய்ந்த பழம்பொருட்களை விற்பனை செய்யும் கடையை தீனதயாள் வைத்துள்ளார். கடத்தல் கும்பல் தலைவராக செயல்பட்ட இவர் ஆந்திராவை சேர்ந்தவர். 2005-ம் ஆண்டு சிலை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலையானவர். அதன் பின்னர் முன்ஜாமீன் பெற்று வெளியே சுற்றி வருகிறார். இவரது மகன் கிருதயாள், நியூயார்க்கில் வசிக்கிறார். அவருக்கும் சிலை கடத்தலில் தொடர்பு உள்ளது.

தீனதயாளின் மனைவி பெயர் அபர்ணா. இவரது மகள் வீடு பெங்களூருவில் உள்ளது. அங்கேயும் சோதனை நடத்த திட்டமிட்டுள்ளோம். அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மன் உட்பட பல நாடுகளில் உள்ள சிலை கடத்தல் கும்பலுடன் இவர்களுக்கு தொடர்பு உள்ளது.

கைப்பற்றப்பட்ட சிலைகளை தொல்பொருள் ஆராய்ச்சி அதிகாரிகள் சோதனை செய்து பார்த்ததில் அவை 1,700 ஆண்டுகள் பழமையான சிலைகள் என்று தெரியவந்துள்ளது. ஒவ்வொரு சிலையும் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் விலைமதிப்புள்ளவை ஆகும். தலைமறைவாக இருக்கும் தீனதயாளை தேடி வருகிறோம்" என்றார்.

சிலைகளை வெளிநாடுகளுக்கு கொண்டு செல்ல இந்தியா முழுவதும் பல்வேறு ஏஜெண்டுகள் உள்ளனர். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த சுபாஷ் கபூர் என்ற சிலை கடத்தல் கும்பல் தலைவனை ஜெர்மன் போலீஸார் கைது செய்தனர். தமிழக போலீஸார் அவரை அழைத்து வந்து கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர். சுபாஷ் கபூரும், தீனதயாளும் நெருங்கிய கூட்டாளிகள்.

ஆஸ்திரேலிய நாட்டு அருங் காட்சியகத்துக்கு சுபாஷ் கபூர் விற்பனை செய்த நடராஜர், அர்த்தநாரீஸ்வரர் சிலைகளை, பிரதமர் நரேந்திரமோடி ஆஸ்தி ரேலியாவில் சுற்றுப்பயணம் செய்த போது, அந்நாட்டு அரசு நல்லெண்ணத்தின் அடிப்படையில் மோடியிடம் ஒப்படைத்தது குறிப்பிடத்தக்கது. இதுபோல தமிழகத்தை சேர்ந்த ஆயிரக் கணக்கான சாமி சிலைகள் வெளி நாடுகளுக்கு கடத்தப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x