பன்றிக்காய்ச்சல் வராமல் தடுக்கும் ‘கபசுரக்குடிநீர்’ - கும்பகோணம் அரசு மருத்துவமனையில் விநியோகம்

பன்றிக்காய்ச்சல் வராமல் தடுக்கும் ‘கபசுரக்குடிநீர்’ - கும்பகோணம் அரசு மருத்துவமனையில் விநியோகம்
Updated on
1 min read

பன்றிக்காய்ச்சலை தடுக்கும் வகையில் கபசுரக்குடிநீர் கும்பகோணம் அரசு மருத்துவமனை சித்த மருத்துவ பிரிவில் விநியோகம் செய்யப்படுகிறது என தஞ்சாவூர் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் மோகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாவட்ட தலைமை மருத்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவ பிரிவில், பன்றிக்காய்ச்சல் வராமல் தடுக்கும் வகையில் சித்த மருத்துவ தடுப்பு மருந்தான ‘கபசுரக்குடிநீர்’ தற்போது வழங்கப்படுகிறது. இந்த கபசுரக்குடிநீரை அருந்தினால், உடலுக்கு எதிர்ப்பு சக்தி கிடைத்து, பன்றிக்காய்ச்சலுக்கு காரணமான வைரஸ் (எச்1 என்1 ப்ளூ வைரஸ்) மனித உடலை தாக்காமல் பாதுகாக்க முடிகிறது.

இந்த கபசுரக்குடிநீரில் சுக்கு, திப்பிலி, கிராம்பு, சிறுகாஞ்சொறி வேர், நீர்முள்ளி வேர், கடுக்காய் தோல், ஆடாதோடை இலை, கற்பூரவல்லி, கோஷ்டம், சீந்தில், சிறுதேக்கு (கண்டுபாரங்கி), நிலவேம்பு, வட்டத்திருப்பி வேர் (பொன்முசுட்டை), முத்துக்காசு (கோரைகிழங்கு) உள்ளிட்ட மூலிகைகள் கலக்கப்பட்டுள்ளன.

இந்த நீரை பெரியவர்கள் 50 மி.லி., சிறியவர்கள் 30 மி.லி. தினமும் 2 வேளை அருந்தினால் பன்றிக்காய்ச்சல் வராமல் தடுக்க முடியும். எனவே, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைவரும் கட்டாயம் கபசுரக்குடிநீரைப் பருகி, பன்றிக் காய்ச்சல் வராமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in