

புதுச்சேரியில் சர்வதேச ஆவணப்பட குறும்பட திருவிழா இன்று தொடங்குகிறது. இதில் பிரான்ஸ், வியட்நாம், கியூபா, இந்தோனேசியா உள்பட 10க்கும் மேற்பட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த படங்கள் திரையிடப்பட உள்ளன.
இதுதொடர்பாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநில பொருளாளர் ராமச்சந்திரன் புதுச்சேரியில் அளித்த பேட்டி:
புதுச்சேரி பல்கலைக்கழகம், மின்னணு ஊடகம் மற்றும் வெகுஜன தொடர்பியல் துறை, மும்பை மத்திய திரைப்படப் பிரிவு, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் 6-வது சர்வதேச ஆவணப்பட குறும்பட திருவிழா இன்று (பிப்.16) துவங்கி வரும் 19-ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இத்திரைப்படத் திருவிழாவின் துவக்க விழா மாலை 4 மணிக்கு புதுவை பல்கலைக்கழக ஜவகர்லால் நேரு அரங்கில் நடக்கிறது. பல்கலைக்கழக துணைவேந்தர் அனிஷா பஷீர்கான், திரைப்பட இயக்குநர் ஹரிஹரன், எடிட்டர் லெனின், இயக்குநர் சிவக்குமார், பேராசிரியர் ராமைய்யா, மும்பை மத்திய திரைப்படப் பிரிவைச் சேர்ந்த இயக்குனர் அனில்குமார், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநில தலைவர் தமிழ்ச்செல்வன், திரை இயக்க ஒருங்கிணைப்பாளர் கருணா ஆகியோர் பங்கேற்கின்றனர். துவக்க விழாவில் 'பயர் ப்ளைஸ் இன் தி அபிஸ்' என்ற திரைப்படமும், பல்கலைக்கழக மாணவர்களால் உருவாக்கப்பட்ட 'இறுதிச்சடங்கு' என்ற படமும் திரையிடப்படுகிறது.
பிப்.17-ம் தேதியில் இருந்து 19-ம் தேதி வரை 3 நாட்களுக்கு காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை பிரான்ஸ், வியட்நாம், கியூபா, இந்தோனேசியா உள்பட 10க்கும் மேற்பட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த ஆவணப்படங்களும், குறும்படங்களும் திரையிடப்படுகின்றன.
இந்தாண்டு தமிழ் சினிமா நூற்றாண்டு என்பதால் இயக்குநர்கள் பாலச்சந்தர், பஞ்சு அருணாச்சலம் ஆகியோர் குறித்த ஆவணப்படங்கள் திரையிடுவதோடு அப்படங்களின் இயக்குநர்களான மனோகர் சிங் பிஷ்த், தனஞ்செயன் கோவிந்த் ஆகியோர் பங்கேற்கின்றனர். அதேபோல் கவிஞர் சல்மா குறித்த பிபிசி தயாரித்த ஆவணப்படம் திரையிடப்படுகிறது. இவ்விழாவில் சல்மாவும் பங்கேற்கிறார்.
இத்திரைப்பட விழாவில் புதுவை பல்கலைக்கழக மாணவர்களால் உருவாக்கப்பட்ட 10க்கும் மேற்பட்ட குறும்படங்கள் திரையிடப்படுகின்றன. இப்படங்கள் அனைத்தும் சமூகம் சார்ந்த பிரச்னைகளை பற்றி பேச முற்படுகின்றன.
தமிழகம், புதுச்சேரியில் இருந்து ஆவணப்பட, குறும்பட இளம் இயக்குநர்களான அருண்பகத், யாக்னா, ஜெயக்குமார், வினோத், பிரகி, கவிநிலவன், அரவிந்த், சண்முகராஜ் ஆகியோரின் குறும்படங்கள் திரையிடப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது பேராசிரியர் ராதிகா கண்ணா, புதுச்சேரி முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்சக நிர்வாகிகள் அரிகிருஷ்ணன், ஞானசேகரன், நிர்வாக குழு உறுப்பினர்கள் அன்புமணி, விநாயகம், அமர்நாதன் ஆகியோர் உடனிருந்தனர்.