

மக்களின் சுகாதாரத் திட்டங்களை நிறைவேற்ற வேண்டிய அரசு அதிகாரிகளின் பதவிகளை நிரப்பாமல் அமைச்சர் விஜயபாஸ்கர் வேடிக்கை பார்ப்பதாக திமுக சட்டப்பேரவை உறுப்பினர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''ஜெயலலிதாவின் மர்ம மரணத்தில் 'முதல் குற்றவாளி' யார் என்ற போட்டியில் ஈடுபட்டிருக்கும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு மாநிலத்தில் நிலவும் டெங்கு காய்ச்சல், பன்றிக் காய்ச்சல்,மர்ம காய்ச்சல் பற்றியெல்லாம் எப்படி கவலையில்லையோ, அதே போன்ற சுகாதாரத் துறையில் இருக்கும் முக்கியமான பதவிகளுக்கு அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்பதிலும் கவலைப்படாமல் தமிழக சுகாதாரத்துறை நிர்வாகத்தை இன்றைக்கு சீரழித்து வருகிறார்.
நீட் தேர்வு பற்றிய குழப்பத்தில் லட்சக் கணக்கான மாணவர்கள் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் என்று தொடர்ந்து ஸ்டாலின் சுட்டிக் காட்டியும் இதுவரை மாணவர்கள் குழப்பத்தை நீக்க சுகாதாரத்துறை அமைச்சர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து படிக்கத் தேவையான அந்த நுழைவுத் தேர்வு பற்றிய சர்ச்சை இன்னும் முடிவுக்கு வரவில்லை. மருத்துவக் கல்லூரியில் சேர விரும்பும் மாணவர்களின் எதிர்காலக் கனவே இன்று கேள்விக்குறியதாகியிருக்கிறது. ஆனால் மருத்துவக் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரி மாணவர்களின் கல்வி மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்சினைகளை கவனிக்க வேண்டிய மருத்துவக் கல்வித்துறை இயக்குனரகத்திற்கு இன்னும் முழு நேர இயக்குனர் நியமிக்கப்படவில்லை.
அரசு பல்நோக்கு மருத்துமனையாக மாற்றப் போகிறேன் என்று கூறி, திமுக தலைவர் கருணாநிதி தினமும் கண்காணித்து உருவாக்கிய புதிய தலைமைச் செயலகத்தை சீரழித்த அதிமுக அரசு, இன்றைக்கு அந்த பல்நோக்கு மருத்துமனைக்குக் கூட முழு நேர டீனை நியமிக்கவில்லை. இது தவிர நாடு முழுவதும் புகழ் பெற்ற ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மற்றும் சென்னை மருத்துவக் கல்லூரி ஆகியவற்றுக்கும் கடந்த நவம்பர் மாதத்திலிருந்து டீன் நியமிக்கப்படவில்லை என்பது மருத்துவக் கல்லூரியின் நிர்வாகத்தை நிலை குலைய வைத்துள்ளது.
மருத்துவக் கல்வி மாணவர்களின் கல்வியிலும், மக்களுக்கு அளிக்க வேண்டிய மருத்து வசதிகளை மேம்படுத்துவதிலும் அதிமுக அரசின் அமைச்சர் இவ்வளவு அலட்சியமாக செயல்படுவது மக்களை பற்றியே கவலைப்படுவதில்லை என்பதை காட்டுகிறது.
கிராமப்புற சுகாதாரம் மிக முக்கியமானது. அங்கு வசிக்கும் மக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களின் சுகாதாரத் திட்டங்கள், பச்சிளங்குழந்தைகளுக்கு அளிக்க வேண்டிய சிகிச்சைகள், தாய் சேய் நலத் திட்டங்கள் போன்றவற்றை நிறைவேற்ற வேண்டிய மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநரகத்திலும் முழு நேர இயக்குநர் இல்லை. ஏறக்குறைய ஓராண்டுகளாக இந்த பதவிகள் இரண்டும் முழு நேர இயக்குநர்கள் இல்லாமல் மருத்துவக் கல்வித்துறையும், மருத்துவம் மற்றும் ஊரக நலத்துறையும் முடங்கிப் போய் இருக்கின்றன.
அரசு மருத்துமனைகளில் போதிய வசதிகள் இல்லை. மாவட்ட மருத்துவமனைகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி சிகிச்சை கிடைப்பதில்லை. பரிசோதனை செய்வதற்கு தேவையான உபரகணங்கள் இல்லை என்றெல்லாம் பொதுமக்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்திருக்கின்ற நேரத்தில் கூட, மக்களின் சுகாதாரத் திட்டங்களை நிறைவேற்ற வேண்டிய அரசு அதிகாரிகளின் பதவிகளை நிரப்பாமல் சுகாதாரத்துறை அமைச்சர் வேடிக்கை பார்ப்பதன் மர்மம் என்ன?
அப்போலோ மருத்துமனையில் 75 நாட்கள் முகாமிட்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்த தகவல்களை எல்லாம் மூடி மறைத்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தன் துறையிலும் மர்மமாகவே செயல்படுவது தமிழ்நாட்டிற்கு நல்லதல்ல. தமிழக மக்களுக்கும் நல்லதல்ல என்று எச்சரிக்க விரும்புகிறேன்.
'மருத்துவப் பணியும், மருத்துவக் கல்வியும் மக்களுக்கு தேவையான இரு கண்கள் போன்றவை' என்று நாங்கள் அமைச்சர்களாக இருந்த போது ஸ்டாலின் எங்களுக்கு எல்லாம் அறிவுரை வழங்குவார். அப்படி அறிவுரை வழங்க சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கருக்கு யாரும் இல்லாமல் இருப்பதால் மக்களின் சுகாதாரத் தேவைகள் குறித்து அமைச்சர் கவலைப்படவில்லை என்பது தெரிகிறது.
ஆனாலும் அதிமுகவிற்குள் 'முதல் குற்றவாளி' யார் என்ற போட்டியில் மட்டும் கவனம் செலுத்தாமல், தினமும் கொஞ்ச நேரமாவது தான் எடுத்துக் கொண்ட பதவிப் பிரமாணத்திற்கு விசுவாசமாக மக்கள் பணிக்காக செலவிட அமைச்சர் முன் வர வேண்டும்.
பினாமி ஆட்சிக்கு வழி காட்டும் 'குற்றவாளிகள்' மீது முன்னாள் முதல்வருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பற்றி எழுந்த அரசியல் சர்ச்சைக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரி அந்தஸ்தில் பதிலளிக்க மனமுவந்து முன் வந்துள்ள அரசு சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூட மருத்துவக் கல்வி இயக்குநர், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் துறை இயக்குநர், மருத்துவக் கல்லூரி டீன்கள் உள்ளிட்ட முக்கிய பதவிகளை நிரப்புவதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஆகவே சுகாதாரத்துறை அமைச்சர் மக்கள் மற்றும் மருத்துவக் கல்வி மாணவர்கள் நலன் கருதி மருத்துவத்துறையில் காலியாக உள்ள முக்கிய பதவிகள் அனைத்தையும் உடனடியாக நிரப்ப வேண்டும்'' என்று எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.