

ஓய்வுபெற்ற, பணியில் உள்ள போக்குவரத்துத் தொழிலாளர் களுக்கு வழங்க வேண்டிய ரூ. 1,250 கோடி நிலுவைத் தொகையை வழங்க முதல்வர் கே.பழனிசாமி ஒப்புதல் அளித் திருப்பதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
போக்குவரத்துக்கழக தொழிற் சங்க பிரதிநிதிகளுடன் தலைமைச் செயலகத்தில் நேற் றிரவு அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து போக்குவரத்துக்கழக தொழி லாளர்களின் வேலை நிறுத்தம் திரும்பப் பெறப்பட்டது.
பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:
போக்குவரத்துக்கழக தொழி லாளர்களுக்கான 13-வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படாததால் வேலைநிறுத்தம் வரை சென்றது.
ஓய்வுபெற்ற, பணியில் உள்ள போக்குவரத்துத் தொழிலாளர் களுக்கு வழங்க வேண்டிய ரூ.1,250 கோடியை வழங்க முதல்வர் கே.பழனிசாமி ஒப்புதல் அளித்துள்ளார். ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய பி.எப். உள்ளிட்ட பணிக் கொடைகள் ரூ.700 கோடி வழங்கப் படும். ஊதிய உயர்வு, போக்கு வரத்துக் கழகங்களை சீரமைப்பது உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண அடுத்தகட்டமாக வரும் 24-ம் தேதி பேச்சுவார்த்தை நடைபெறும் என்றார்.
பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் செயலாளர் சண்முகம், ரூ. 1,250 கோடியை 3 மாதத்தில் வழங்க தமிழக அரசு ஒப்புக் கொண்டுள்ளது. அடுத்தகட்டமாக போக்குவரத்துத் துறை செயலாளர் முன்னிலையில் வரும் 24-ம் தேதியும், போக்குவரத்துத் துறை அமைச்சர் முன்னிலையில் வரும் ஜூன் 1-ம் தேதியும் பேச்சுவார்த்தை நடைபெறும். வேலைநிறுத்தம் காரணமாக போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் மீது எடுக்கப் பட்ட நடவடிக்கைகள் திரும்பப் பெறப்படும் என்றும் அரசு உறுதி அளித்துள்ளது. எனவே, வேலை நிறுத்தப் போராட்டம் திரும்பப் பெறப்படுகிறது என்றனர்.
அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் சின்னச்சாமி, சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராஜன் உள்ளிட்டோரும் வேலைநிறுத்தப் போராட்டம் திரும்பப் பெறப்படுவதாக தெரிவித்தனர்.