Published : 29 Mar 2014 12:12 PM
Last Updated : 29 Mar 2014 12:12 PM

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 42 ஆண்டுகளாகப் பதிவுசெய்து வருபவருக்கு இழப்பீடு: தமிழக அரசு பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

வேலை வாய்ப்பு அலுவலகத்தில் 42 ஆண்டுகளாக தொடர்ந்து பதிவு செய்து வந்தும் வேலைவாய்ப்பு கிடைக்காத முதியவருக்கு இழப்பீடு வழங்குவது பற்றி தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காட்டைச் சேர்ந்த ஏ.ராஜேந்திரன் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். நான் 5-ம் வகுப்பு வரை படித்துள்ளேன். 1964 முதல் 1968-ம் ஆண்டு வரை பூந்தமல்லியில் உள்ள ஆட்டோ ஒர்க் ஷாப் ஒன்றில் மெக்கானிக் உதவியாளராகப் பணிபுரிந்தேன். இந்த பணி அனுபவத்தைப் பெற்ற பின் 11.10.1971 அன்று செங்கல்பட்டு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் எனது பெயரைப் பதிவு செய்து கொண்டேன். அப்போதிலிருந்து தவறாமல் பதிவைப் புதுப்பித்து வருகிறேன்.

தற்போது வேலைவாய்ப்பு அலுவலகம் திருவள்ளூருக்கு மாற்றப்பட்டு அங்கு செயல்பட்டு வருகிறது. கடைசியாக கடந்த 23.11.2011 அன்று எனது பதிவைப் புதுப்பித்தேன். அப்போது எனது வயது 60-ஐ கடந்துவிட்டது. எனினும் பதிவைப் புதுப்பித்த அதிகாரிகள் மீண்டும் பதிவைப் புதுப்பிக்க 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் வர வேண்டும் என்று கூறியுள்ளனர்.

ஆக, வேலைவாய்ப்பு அலுவலக அதிகாரிகள் வெறும் இயந்திரத்தனமாகப் பணியாற்றுகின்றனர் என்பதையே இது காட்டுகிறது.

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு 42 ஆண்டுகளாகக் காத்திருக்கிறேன். இத்தனை ஆண்டுகளில் ஏதேனும் அரசு நிறுவனத்தில் நான்காம் நிலை மெக்கானிக் உதவியாளராக எனக்கு பணி வழங்கியிருக்கலாம். குறைந்தபட்சம் வாயில் காவலர் பணி அல்லது தோட்டக்காரர் பணியில் கூட அமர்த்தியிருக்கலாம். ஆனால் 42 ஆண்டு காலத்தில் ஒருமுறை கூட எனக்கு வேலைவாய்ப்பு அலுவலகத்திலிருந்து நேர்முகத் தேர்வுக்கான அழைப்புக் கடிதம் எதுவும் வந்ததில்லை.

இதனால் நான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். இப்போது எனது குடும்பத்தை நடத்த இயலாமல் மிகவும் கஷ்டப்படுகிறேன். ஆகவே எனக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்குமாறும், மாதம் ரூ.3 ஆயிரம் வீதம் முதியோருக்கான ஓய்வூதியம் வழங்குமாறும் அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் ராஜேந்திரன் கோரியிருந்தார்.

இந்த மனு மீது விசாரணை மேற்கொண்ட நீதிபதி கே.கே.சசிதரன் வெள்ளிக்கிழமை அளித்த தீர்ப்பில் கூறியுள்ளதாவது:

இந்தியாவிலும், உலகத்திலும் உள்ள பெரும் பணக்காரர்களின் பட்டியலை வெளியிடுவதில் ஊடகங்கள் இடையே போட்டி நிலவுகிறது. ஆனால் இந்த வழக்கின் மனுதாரரைப் போன்ற ஏழை மக்களின் நிலை பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. தங்களுக்கும் ஏதேனும் ஒரு அரசு வேலை கிடைக்காதா என்ற ஆவலில் இவர் போன்ற ஏழைகள் காத்திருக்கிறார்கள். அரசும், அரசு நிறுவனங்களும் ஏராளமானோருக்கு ஒப்பந்த அடிப்படையில் பணி வாய்ப்பு வழங்கி, பின்னர் நிரந்தரம் செய்கின்றனர். எனினும் இந்த மனுதாரரைப் போன்றவர்களுக்கு பணி வாய்ப்பு வழங்காத பாரபட்ச நடவடிக்கை மிகவும் வருந்தத்தக்கது.

உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியது போல உலகமயமாக்கல் கொள்கைகளும் அடிப்படைத் தேவைகளுக்காக ஏங்கும் சாதாரண மக்களுக்கு உதவுவதாக இல்லை.

இந்தச் சூழலில் மக்களின் பாதுகாவலன் அரசுதான். எனினும் தனது கோரிக்கை குறித்து மனுதாரர் மாநில அரசுக்கு எந்த கோரிக்கை மனுவையும் அனுப்பவில்லை. அவ்வாறு மனு அனுப்பினால்தான் பிரச்சினையை அறிந்துகொள்ள அரசுக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

ஆகவே, அரசுக்கு கோரிக்கை மனு அனுப்ப மனுதாரருக்கு உரிமை அளிக்கப்படுகிறது. அவர் கோரிக்கை மனு அனுப்பிய பின்னர், அவரின் தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு, அவருக்கு இழப்பீடு மற்றும் ஓய்வூதியம் வழங்குவது பற்றி அரசு பரிசீலித்து தகுந்த உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என்று நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x