இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை வழக்கு: சந்தேகத்தின் பேரில் இருவரைத் தேடும் சிபிசிஐடி போலீஸ் - அண்டை மாநிலங்களில் அறிவிப்பு வெளியீடு

இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை வழக்கு: சந்தேகத்தின் பேரில் இருவரைத் தேடும் சிபிசிஐடி போலீஸ் - அண்டை மாநிலங்களில் அறிவிப்பு வெளியீடு
Updated on
1 min read

கோவை இந்து முன்னணி பிரமுகர் கொலை வழக்கில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இருவரை அடையாளம் காட்டுவோருக்கு சன்மானம் வழங்கப்படும் என சிபிசிஐடி போலீஸார் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

இந்து முன்னணி அமைப்பின் கோவை மாவட்ட செய்தித் தொடர்பாளராக இருந்த சசிகுமார், கடந்த ஆண்டு செப்.22-ம் தேதி கோவை சுப்பிரமணியம்பாளையம் பகுதியில் மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கு துடியலூர் போலீஸாரிடம் இருந்து சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது. அடுத்த சில தினங்களிலேயே சிசிடிவி கேமராக்களில் பதிவான 5 பேரின் புகைப்படங்களை போலீஸார் சந்தேகத்தின் பேரில் வெளியிட்டனர். கொலையில் தொடர்புடையவர்கள் குறித்த தகவல்கள் கிடைத்தால் பொதுமக்களும் தெரிவிக்கலாம் என அறிவித்திருந்தனர். ஆனால் 5 மாதங்களுக்கும் மேலாக வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருந்து வந்தது.

இந்நிலையில், கடந்த 20-ம் தேதி கே.கே.நகரைச் சேர்ந்த ஏ.சையது அபுதாஹிர் (30) என்பவரை சந்தேகத்தின்பேரில் சிபிசிஐடி போலீஸார் துப்பாக்கி முனையில் அழைத்துச் சென்றதாக புகார் எழுந்தது. அவரது குடும்பத்தினர் நீதிமன்றத்தில் முறையிட்டதன் பேரில், அபுதாஹிர் விசாரணையில் இருப்பது உறுதி செய்யப்பட்டு பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவர் ஏப்.5-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

அபுதாஹிரிடம் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, கோவை சாய்பாபா காலனியைச் சேர்ந்த முபாரக் (37), சதாம் உசேன் (25) ஆகிய இருவரை சந்தேகத்தின் பேரில் தேடப்படும் நபர்களாக சிபிசிஐடி போலீஸார் தற்போது அறிவித்துள்ளனர். இருவரது புகைப்படங்களையும், விவரங்களையும் தமிழ், ஆங்கிலம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியிட்டு அண்டை மாநிலங்களிலும் தேடி வருகின்றனர். இருவரது தகவல்களைக் கொடுத்தால் தக்க சன்மானம் வழங்கப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலீஸார் கூறும்போது, ‘கொலைக் குற்றத்தில் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் இரண்டு பேரைத் தேடுகிறோம். இதில் தகவல் தருபவர்கள் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும். அவர்களுக்கு சன்மானமும் தரப்படும். இருவரும் அருகாமை மாநிலங்களில் பதுங்கியிருக்க வாய்ப்பிருப்பதால் அந்தந்த மொழிகளில் அறிவிப்பை வெளியிட்டுள்ளோம்’ என்றனர்.

காவலில் எடுக்க மனு

இதனிடையே நீதிமன்றக் காவலில் உள்ள ஏ.சையது அபுதாஹிரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு சிபிசிஐடி போலீஸார் தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் கடந்த 22-ம் தேதி மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. அதில் அபுதாஹிர் ஆஜர்படுத்தப்பட்டார். ஏற்கெனவே போலீஸார் விசாரணை நடத்தியுள்ளதால் மீண்டும் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கக்கூடாது என அபுதாஹிர் தரப்பில் வாதாடப்பட்டது. மனு மீதான விசாரணையை மார்ச் 28-க்கு (இன்று) நீதிபதி ஒத்திவைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in