Published : 21 Sep 2016 09:27 AM
Last Updated : 21 Sep 2016 09:27 AM

மயிலாப்பூர் அடுக்குமாடி குடியிருப்பில் ‘பீரோ புல்லிங்’ திருடர்கள் 2 பேர் சிக்கினர்

மயிலாப்பூரில் ஜன்னல் வழியாக பீரோவில் இருந்த நகைகளை திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை மயிலாப்பூர் கல்விவார் தெரு சத்யா அடுக்குமாடி குடியிருப்பில் 2-வது தளத்தில் வசிப்பவர் கிருஷ்ணா(37). இவரது தாயார் ஜம்பகலெட்சுமி(74) அதே குடியிருப்பின் தரை தளத்தில் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை ஆவார். கிருஷ்ணா தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பொறியாளராக வேலை செய்து வருகிறார். கடந்த 17-ம் தேதி இரவு ஜம்பகலெட்சுமி வீட்டில் பீரோவை ஜன்னல் வழியாக இழுத்து, 10 பவுன் தங்க நகைகள், 1 கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் 4 பட்டுச் சேலைகள் திருடப்பட்டன.

இதுகுறித்து மயிலாப்பூர் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரித்தனர். நேற்று அதிகாலை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், வடக்கு மாடவீதி அருகில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வேகமாக வந்த ஆட்டோவை நிறுத்தச் சொல்லியும், நிற்காமல் சென்றது. போலீஸார் வாகனத்தில் விரட்டிச் சென்று ஆட்டோவை தடுத்து நிறுத்த, அதிலிருந்த ஒருவர் தப்பியோடினார்; 2 பேர் சிக்கினர். விசாரணையில் பிடிபட்ட நபர்களின் பெயர் பாலசுப்பிரமணியன், ராஜ்குமார்(24) என்பது தெரியவந்தது.

இவர்கள் இருவரும் சேர்ந்து ஜம்பகலெட்சுமி வீட்டில் திருடியது தெரிந்தது. இருவரையும் போலீஸார் கைது செய்தனர். இவர்கள் மீது ஏற்கெனவே கொலை முயற்சி வழக்குகள் மற்றும் வழிப்பறி வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x