Published : 22 Apr 2017 11:09 AM
Last Updated : 22 Apr 2017 11:09 AM

உளுந்தூர்பேட்டை அருகே பள்ளியின் விளையாட்டு மைதானம் வாரச்சந்தையாக மாற்றம்: மாணவ, மாணவிகள் கடும் அவதி

உளுந்தூர்பேட்டை அடுத்த பிடாகம் பகுதியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் சுமார் 550 மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளிக்கு அருகிலேயே ஆண்கள் மேல்நிலைப்பள்ளியும் இயங்கி வருகிறது. பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கென தனியாக விளையாட்டு மைதானம் இல்லை. எனவே பள்ளிக்கு அருகிலுள்ள கிராமப் புறம்போக்கு நிலத்தை விளையாட்டு மைதானமாக மாணவிகள் பயன்படுத்தி வந்தனர்.

இந்நிலையில், பிடாகத்தில் பள்ளிக்கு அருகிலேயே கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திங்கள்கிழமை தோறும் வாரச்சந்தை இயங்கி வந்ததால் பள்ளி மாணவர்களுக்கு இடையூறு ஏற்பட்டது. இதையடுத்து அப்போதைய ஊராட்சி மன்றத் தலைவராக இருந்த சாவித்ரி கலியமூர்த்தி என்பவரால் ஊருக்கு வெளியே உள்ள கீழப்பாளையத்தில் சடக்யா யோஜான திட்டத்தின் கீழ் ரூ.23 லட்சம் செலவில் புதிய வாரச்சந்தை கட்டப்பட்டது.

பிடாகம், எலவனாசூர்கோட்டை, வீரமங்கலம், உள்கோட்டை, கீழப் பாளையம், எல்லப்பநாயக்கன் பாளையம், பெத்தநாயக்கன் பாளை யம், வண்ணாகபாடி, அரும் பலவாடி, குலாம்தக்கா, மேலப் பாளையம், எ.புத்தூர், சுந்தர வாண்டி, சாலப்பாக்கம், பரமேஸ் வரிமங்கலம், நாணையாவடி, புத்தமங்கலம், நெடுமானூர் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் கீழப்பாளையத்தில் உள்ள வாரச்சந்தைக்கு அதிகளவில் வந்தனர். இதனால் காய்கறி வியாபாரிகளும் லாபம் அடைந்தனர்.

இந்நிலையில் 2011-ல் பிடாகம் ஊராட்சி மன்றத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட ஜெயா ஜெகன் ஊராட்சி மன்றக் கூட்டத்தில் வார்டு உறுப்பினர்களின் ஆதரவோடு வாரச் சந்தையை மீண்டும் பள்ளிக்கு அருகாமையிலேயே அமைக்கும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, சம்பந்தப்பட்ட அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு அருகில் உள்ள புறம்போக்கு இடத்தில் வாரச்சந்தை நடத்த ஒப்புதல் பெறப்பட்டது. அதன்படி வாரச்சந்தை நடைபெற்று வருகிறது.

பள்ளிக்கு அருகில் வாரச்சந்தை நடைபெற்றால் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படும் எனக்கூறி கீழப்பாளையம், எல்லப்பநாயக்கன் பாளையம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.

இதையடுத்து வாரச்சந்தை நடைபெறும் இடத்தை மாவட்ட முன்னாள் கல்வி அலுவலர் மாதவன், மாவட்ட பள்ளி துணை ஆய்வாளர் இருதயராஜ் ஆகியோர் ஆய்வு செய்தனர். இதைத்தொடர்ந்து உளுந்தூர்பேட்டை முன்னாள் வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்த ஞானசேகரன், பிடாகம் ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயா ஜெகனை தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் வரை கீழப்பாளையத்தில் கட்டப்பட்ட வாரச்சந்தை கட்டிடத்தில் வாரச்சந்தையை நடத்த உத்தரவிட்டார். அதன்படி வாரச்சந்தை நடந்து வந்தது.

அதன் பிறகு 3 ஆண்டுகளுக்கு முன் ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயா ஜெகன் வாரச்சந்தையை, வட்டார வளர்ச்சி அலுவலர்களின் துணையோடு மீண்டும் பள்ளிக்கு அருகிலேயே கொண்டு சென்றார். இதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தபோதிலும், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் சம்மதத்துடன் மாற்றப்பட்டதாக கூறியுள்ளார். இதனால் கீழப்பாளையம் கிராமத்தில் ரூ.23 லட்சம் செலவில் கட்டப்பட்ட கட்டிடம் பாழாகிக் கொண்டிருக்கிறது.

இதுதொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த சக்திவேல் கூறுகையில், “கீழப்பாளையத்தில் சாலைக்கு அருகிலேயே கட்டப்பட்ட சந்தையை ஒப்பந்ததாரர் என்ற முறையில் ஜெகன் தான் கட்டிக் கொடுத்தார். பின்னர் அவரது மனைவி தலைவராக தேர்வு செய்யப்பட்டதும் அவ்விடத்தை மாற்றி, பள்ளிக்கு அருகில் வாரச்சந்தையை கொண்டு சென்றுள்ளார். மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட சந்தை இன்று பாழாகிக் கொண்டிருக்கிறது. தற்போது பள்ளிக்கு அருகிலேயே திங்கள்கிழமைதோறும் நடைபெறும் சந்தையால் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே சந்தைக்காக கட்டப்பட்ட கட்டிடத்திலேயே சந்தையை நடத்த முன்வர வேண்டும்” என்றார்.

இதுதொடர்பாக உளுந்தூர்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆறுமுகத்திடம் கேட்டபோது, “சந்தையை பள்ளிக்கு அருகிலுள்ள கிராமப் புறம்போக்கு இடத்தில் வைக்க வேண்டும் என ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியதன் அடிப்படையில் தான் மாற்றப்பட்டதே தவிர வேறு உள்நோக்கம் எதுவும் இல்லை” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x